Tuesday, November 6, 2007

தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக "தமிழீழ விடுதலை ஆதரவு" உருவெடுக்க வேண்டும்: இயக்குநர் சீமான்

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வில் அவர் பேசியதாவது:

இங்கே உள்ள சு.ப.தமிழ்ச்செல்வனின் புகைப்படத்தையும் அந்தப் புகைப்படத்தின் முன்னால் உள்ள பூக்களையும் பாருங்கள். புன்னகைக்கும் பூக்களுக்கும் வித்தியாசம் தெரியாத அந்த முகத்தைப் பாருங்கள். தமிழண்ணா உங்கள் புன்னகையை எப்போது நாங்கள் பார்க்கப் போகிறோம் என்று ஏங்கித் தவிக்கிறோம்.

இந்த மண்ணிலே என் உடன் பிறந்தான் மரணத்துக்குக்கூட நாங்கள் கூடி அழமுடியாதாம். ஆனாலும் இது சுதந்திர இந்தியாவாம்.

எந்த நாடு உலகத்தில் அடிமைப்பட்டு கிடக்கிறதோ அந்த நாடெல்லாம் என் தாய் நாடு என்றார் சேகுவோரா. ஆனால் எங்கள் இரத்த சொந்தங்கள் அகதிகளாக அடிபட்டு இரத்தம் சிந்தி ஓடுகிற போது நாங்கள் ஒன்றும் செய்யக் கூடாதாம். என் உடம்பிலும் கூட சுத்த தமிழ் இரத்தம் ஓடுவதாக ஒருவர் சொல்லியிருக்கிறார். தன்னை தமிழச்சி என்கிறார். 17 வருடமாக தன் மகனை சிறைக்கொட்டடியிலே விட்டு புழுதி பூமிகளில் எல்லாம் இன விடுதலைக் கூட்டம் நடைபெறுகிற இடங்களிலெல்லாம் வந்து நிற்கிற பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள் தமிழச்சி- பரமக்குடியிலே என் வீட்டில் இருக்கும் அண்ணன் பிரபாகரன் புகைப்படத்தை பார்த்து யார் என்று கேட்கும் உறவுகளுக்கெல்லாம் என் மூத்த மகன் இவன் என்று சொல்லுகிற என் தாய் ஒரு தமிழச்சி- அண்ணா குண்டுவீசி அண்ணணனை கொன்றுவிட்டார்களே என்று கதறிய என் தங்கை உமா ஒரு தமிழச்சி.. ஆனால் என் உடன்பிறந்தானுக்கு இரங்கல் தெரிவித்ததை கொச்சைப்படுத்திய ஜெயலலிதாவும் ஒரு தமிழச்சி என்றால் இந்த மண்ணிலே நாண்டு கொண்டு சாவவதைத் தவிர வேறு வழியில்லை.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா இராணுவ உதவி செய்தது. பயிற்சி கொடுத்தது. பாகிஸ்தான் 13 வானோடிகளைக் கொடுத்தது. ஆனாலும் விரட்டியத்தனர் விடுதலைப் புலிகள்.

99 தமிழக மீனவர்களை சிறிலங்கா இராணுவம் கடத்திச் சென்று தற்போது விடுவித்துள்ளது. 800 தமிழக மீனவர்களை சிறிலங்கா இராணுவம் சுட்டுப் படுகொலை செய்துள்ளது. காசுமீரத்தில் ஒரு நபர் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஊடுருவி வந்து விட்டாலே எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறுகிற இந்தியா எங்கள் தமிழக மீனவ சகோதரன் சிறிலங்கா இராணுவத்தால் சுட்டு செத்து விழுகிற போது ஏன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று சொல்ல மறுக்கிறது?
எங்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத நாட்டிலே எங்களுக்கு வாழ என்ன உரிமை உள்ளது? தனித் தமிழ்நாடு கோரி நாங்கள் போராட வேண்டியிருக்காது. அவர்களே அதனை உருவாக்கிவிடுவார்கள்.

கடந்த 58 ஆண்டுகளாக தன்னை வல்லரசு என்று சொல்லுகிற இந்தியா ஏன் தமிழீழத்தைக் கண்டு அஞ்ச வேண்டும்?
ஏனெனில் தமிழீழம் அமைந்த ஐந்தாவது ஆண்டில் அதனை உலக வல்லரசாக பிரபாகரன் மாற்றிவிடுவார் என்று இந்திய அரசாங்கம் அஞ்சுகிறது. நீங்கள் தமிழீழத்தை அங்கீகரித்துப் பாருங்கள். வர்த்தகத் தொடர்புக்கு வந்து பாருங்கள். அவர்கள் செய்து காட்டுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் எருமை மாடு போல் இருக்கிறான். ராஜீவ் கொலையை ஒருபோது மறக்கவும் மன்னிக்கவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன் சொல்கிறார். எங்கள் தலைவர்களைக் கொன்றவர்களை மன்னிக்கவும் மறக்கவும் மாட்டோம் என்று புதுதில்லியிலிருந்து ஜெயந்தி நடராஜன் கூறுகிறார்.

எத்தனையோ தலைவர்கள் கெஞ்சி மன்றாடி கதறி அழுதபிறகும் இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டாம் என்று கூறியபின்னரும் நீங்கள் இராணுவத்தை அனுப்பினீர்கள்.

ஜி.கே.வாசன் அவர்களே! ஜெயந்தி நடராஜன் அவர்களே!
அந்தத் தமிழீழ மண்ணில் சிங்கள இராணுவம் செய்த கொடூரங்களை விட எங்கள் அக்காள், தங்கைகளை கொடுமையாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய அந்தக் கோரங்களை தமிழன் மன்னித்து விட்டான்- மறந்துவிட்டான்
எங்கள் தமிழீழச் சொந்தங்கள் 40 பேரை நடுவீதியில் கிடத்தில் டாங்கிகளை ஏற்றிக் கொன்றததைத் பார்த்தபிறகும் படித்த பிறகும் மன்னித்துவிட்டான்;
பாலியல் வல்லுறவு அம்பலப்பட்டு விடக்கூடாது என்பதற்காக என் தங்கைகளின் அக்காள்களின் பிறப்புறுப்பை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உங்கள் இந்திய இராணுவத்தின் கொடுஞ்செயலை மன்னித்துவிட்டான்- மறந்துவிட்டான்.
ஈழத் தமிழர்களுக்கு அப்போது உதவிய இந்திய இராணுவத்திலே இருந்த எங்கள் தமிழக வீரர்களை சுட்டுப் படுகொலை செய்ததை நாங்கள் மன்னித்துவிட்டான் - மறந்துவிட்டான்.
அதனால்தான் ஜி.கே.வாசன் இன்று மத்திய அமைச்சராக உள்ளார். ஜெயந்தி நடராஜன் தில்லியிலே உள்ளார் என்ன வெட்கக் கேடு!

எங்கள் அக்காள் தங்கைகளை நிர்வாணப்படுத்தி திறந்த மார்பகங்களில் தார்க் குச்சியால் சிறீ என்கிற சிங்கள எழுத்தை எழுதியபின்பும் எங்கள் உறவுகள் ஏன் ஆயுதம் ஏந்தக் கூடாது?
அவர்களுக்காக நாங்கள் அழக்கூடாது- பேசக்கூடாது எனில் அப்படியான ஒரு தேசம் எங்களுக்குத் தேவைதான?
தமிழனின் தேசிய மொழி இந்தியாம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே எழுதிப்போடுகிறார்கள். ஆனால் எந்தத் தமிழன் கோபப்பட்டான்?
இங்கே எவன் செத்தால் தனக்கு என்ன? என்கிற போக்குதான் உள்ளது
சிரஞ்சீவி மகள் ஒரு பாப்பான் மகனோடு ஓடிப்போனதும் இந்தத் தமிழனுக்கு ஒரு செய்தி-
சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்ததும் இந்தத் தமிழனுக்கு ஒரு செய்தி
இந்தத் தமிழர்களை எது பாதிக்கிறது? உங்களை ஒன்றுமே பாதிக்காது. ஏனெனில் இங்கே நடப்பது வாக்கு அரசியல் என்கிற கேவலமான கூத்து.
இதே கருநாடக மண்ணில் பிரபாகரன் பிறந்திருந்தால் நிலைமையே வேறு.
எங்களுக்குப் பேச்சுக்கள்- அறிக்கைகளில் உடன்பாடில்லை. பேசியே எங்களையும் சாக விடுவீர்கள்.

தமிழின விடுதலையை எதிர்க்கின்ற சுப்பிரமணியன் சுவாமியை சென்னை விமான நிலையத்திலேயே வழிமறித்து அடித்து நொறுக்கினால்- துக்ளக் சோவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினால் என்ன?
வரப்பு வாய்க்கால் தகராறுக்காக இரத்தச் சொந்தங்களை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குப் போகிறவர்கள்தானே நாம்!
ஒரு ஓசி பீடிக்காக கொலை செய்துவிட்டு போகிற தமிழன்- ஏன் இனத்துக்காக ஒன்றைச் செய்துவிட்டு போகக்கூடாது?
நாம் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு நாடு இருக்கிறது. எதிர்க்கிறவர்களை அழித்துவிட்டால்தான் அனைத்தும் சரிப்படும்.
தமிழின விடுதலையை எதிர்ப்பவர்களே! வந்து பாருங்கள் இராமேசுவரத்துக்கு அந்தக் கரையின் இரத்த வாடை தெரியும்! அவர்களின் கண்ணீர் அந்த இராமேசுவரத்து கடல் நீரில் உப்பாய் கரிக்கும்!

தமிழ்த் திரைப்பட உலகில் அண்ணனைக் கொன்றவனை- அக்காளைக் கொன்றவனை- தங்கையைக் கொன்றவனை- தாயைக் கொன்றவனை கிளைமேக்சில் படுகொலை செய்யும் கதாநாயகனுக்கு சிறந்த விருது கொடுப்பீர்கள்- அது உங்களுக்கு ஹீரோயிசமாகத் தெரியும். அதனையே நிஜத்தில் தமிழீழத்தில் தலைவர் செய்தால் உங்களுக்குத் தீவிரவாதமோ?
தேவாலயத்திலே கர்த்தர் விழிக்கும் நேரத்திலே அந்த நத்தார் நாளிலே ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது ஜான்பால் அறிக்கைவிட்டாரா?

சிங்களத்திலே நன்கு உரையாற்றக்கூடிய- சர்வதேச சமூகத்தின் முன் சிங்களத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்திய ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டபோது சர்வதேச சமூகம் கண்டித்ததா?
ஏன் கண்டிக்கவில்லை? ஏனெனில் அவன் தமிழன். அதுதான் உண்மை.
அறிக்கைகள்- பேச்சுக்கள் எப்போதும் சரிப்படுவது இல்லை. செயல்தான். அண்ணன் பிரபாகரன் அறிக்கை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையே.. செயல்தானே... நமக்கு செயல்தான் முக்கியம்.

எம் தமிழ்ச் சொந்தங்களே! ஒரு புழுவை நீங்கள் அடித்தால் கூட அது அடிக்க அடிக்க துடித்து மேலெழும்போது நம் மீதான அடக்குமுறைகளுக்கான எதிர்ப்பை காட்ட வேண்டாமா? தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த இனமான உணர்வு இங்கே செத்து எரிந்து சாம்பலாகிவிட்டதா?

ராஜீவ் கொலையை மன்னிக்கவும் மறக்கவும் மாட்டேன் என்று சொல்லுகிற அந்த காங்கிரசில் ஒருத்தன் கூட தமிழ் மகன் இல்லையா? இந்தத் தமிழினம் செய்த தவறுதான் என்ன? பிழை என்ன?
என்னவெனில்-
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரிக்காத எவனுக்கும் இங்கே வாக்கு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.
வாக்கு கேட்டு வருபவனிடம் தமிழீழ விடுதலையில் உன் நிலைப்பாடு என்ன? என்று கேட்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இறையாண்மை வெங்காயம் என்ற பெயரில் இந்தியா ஆயுதம் கொடுத்தால் நாங்களும் எங்கள் தமிழர்களுக்காக ஆயுதங்கள் கொடுப்போம்.
இந்திரா ராடார்களை இந்தியா கொடுத்த பின்னர்தான் எங்கள் தமிழர்கள் கட்டுநாயக்க வான் தளத்தை அடித்தார்கள். அப்போது சிங்களவன் சொல்கிறான், இந்தியா கோளாறான ராடார்கள்களைக் கொடுத்துவிட்டது என்றான். அப்போதே தமிழன் மான நட்ட வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். இப்படிச் சிங்களவன் சொல்வது இங்குள்ள நமக்கு வெட்கமாக இல்லையா?

இன்னைக்கும் இந்தியாக்காரன் ஆயுதம் அனுப்புகிறான். ஆறரைக் கோடி தமிழ் மக்கள் இளிச்சவாயர்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்,
சிறிலங்காவுக்கு ஆயுதங்களை அனுப்பினால்- தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து இங்கு பேசவில்லை எனில் ஆசிட் வீச்சும் அழுகிய முட்டைகளும் வீசப்படும் என்கிற நிலைமை இங்கு இல்லை. அதனால்தான் அவர்கள் செய்கிறார்கள்.

கர்நாடகத்தில் 75 வயது இராசுக்குமார் என்பவ வயது முதிர்ந்து செத்ததற்காக ஆயிரக்கணக்கிலே பேரூந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கூத்தாடிப்பயல் மாரடைப்பில் செத்துப் போனதற்காக இத்தனை நடந்துள்ளது போல் இப்போது இங்கு என்ன நடந்திருக்க வேண்டும், தமிழர்களே! நீங்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுத்த ஓட்டுப் போட்ட 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து நிர்வகிக்கும் இந்திய அரசு தான் சிங்களவனுக்கு ஆயுதங்களைக் கொடுக்கிறது!

அப்படியானால் ஆயுதங்கள் கொடுக்கிற அரசாங்கத்துக்கும் அதனை ஆதரிப்போருக்கும் எங்கள் வாக்குகள் இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

இங்கே இராமன் என்கிற ஒருவன் பெயரைச் சொன்னால் வாக்கு கிடைக்கும் என்கிற போது ஏன் இனவிடுதலையை முன்னிறுத்தி நம்மால் செய்ய முடியலை? ஏன் செய்யக் கூடாது?

ரஜினிகாந்தின் மர உருவங்களுக்கு பால் ஊற்றி சாகிற என் உறவுகளே! நீங்கள் இந்தக் களத்தில் சாக வாருங்கள் என்றார் சீமான்.

நன்றி: http://www.puthinam.com/

No comments: