Wednesday, December 31, 2008

இனிய அடிமைகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

உலகெங்கும் பரவியிருக்கும்
ஆங்கிலேயர்களுக்கும்,
அவர்களின் அடிமைகளுக்கும்,
ஆங்கிலேயர்களாக வாழத்துடிப்பவர்களுக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday, December 28, 2008

தமிழீழ விடுதலைக்கு உலக நாடுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள்

இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமைந்தகரை புல்லா அவென்யுவில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.



பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நடிகர் மன்சூர் அலிகான் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கட்சி கொடியை ஏற்றி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையை திருமாவளவன் தொடங்கிவைத்தார். அப்போது, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில பொறுப்பாளர்கள் கொடி வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் 'எகிறிப்பாய்', 'கட்டறுந்த புயல்' ஆகிய இறுவட்டுக்கள் இரண்டு வெளியிடப்பட்டன. ஜி.கே.மணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட, கவிஞர் காசி ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி உரையாற்றியதாவது:

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெறுவதற்காக இந்த இளைஞர் பாசறை செயற்பட வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தை உணர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறும் வகையில் தமிழர் ஒருவரை இந்தியத் தூதுவராக அமர்த்த வேண்டும்.
தமிழீழத்தை அங்கீகரிக்க இந்திய அரசு முன்வர வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் 700 முறை தமிழர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் குண்டுகள் வீசியுள்ளது.

ஒரு நாளைக்கு 1,000 தொன் குண்டுகள் வீசப்பட்டு அப்பாவித் தமிழர்கள் தவித்து வருகின்றனர் என்றார் ஜி.கே.மணி.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உரையாற்றியதாவது:

இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பது வேறு, யதார்த்தம் வேறு. போரை நிறுத்த வேண்டுமென கலைஞர் தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை புலிகள் ஏற்கிறார்கள். சிறிலங்கா அரசு மறுக்கிறது. இதுதான் யதார்த்தம். ஆங்கில நாளேடு நடத்திய கருத்துகணிப்பு ஒன்றில் 80 விழுக்காடு மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துள்ளனர். இந்த யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார் காசி ஆனந்தன்.


நிறைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றியதாவது:

இம்மாநாட்டை நடத்துவதற்காகக் காவல்துறை கெடுபிடி செய்தது. எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. என்னைக் கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் முரண்பாட்டை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பகடைக் காயாகப் பயன்படுத்த முயல்வதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானத்தை திருமாவளவன் வாசித்தார்.


அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் தமிழீழத்தை விட்டு வெறியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த இறையாண்மை இலங்கை தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களவர் கையில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன் வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

Sunday, December 21, 2008

தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் போராட்டம்

பெரியார் திராவிரடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய பொதுவுடமை கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சென்னையில் இயக்குநர் சீமான் அவர்களின் மகிழுந்தை எரித்த காங்கிரசு ரௌடிகளின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும் புதுச்சேரியில் நாளை (22.12.2008) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போரட்டத்தில் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத, சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கிய பாசறை ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

பெருந்திரளான பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களும், தமிழினின உணர்வாளர்களும் கலந்துகொண்டு தமிழின விரோத காங்கிரசு கட்சியை சவப்பாடையில் ஏற்றவுள்ளனர்.

Friday, December 19, 2008

புதுச்சேரியில் சட்டத்தை வன்புணர்ச்சி செய்யும் சட்டத்தின் காவலர்கள்

“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” என்று ஆட்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மக்களும் நம்புகிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத்தான் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சட்டத்தை உருவாக்கும் பணியையும் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் அதை நடைமுறைப்படுத்தும் பணியையும் நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே தொடர்புடையவர்கள் உறுமொழி ஏற்றுக்கொண்டு பணியாற்றுகிறார்கள். ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப இவர்கள் நடந்துகொள்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க; மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை கேளிக்கூத்தாக்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வலைத்து நெளித்து தன்னலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது நாட்டுமக்கள் அனைவரும் அறிந்ததே.

இத்தகைய இழிச்செயல்களை மிஞ்சும் வகையில் புதுச்சேரி காவல்துறையினர் நேற்று ஒரு செயலைச் செய்தனர். இச்செயல் “சட்டத்தின் மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சி” என்று குறிப்பிடுவது மிக்கச் சரியாக இருக்கும்.








புதுச்சேரியைச் சேர்ந்த இரமேசு என்பவர், புதுச்சேரி காவலர்கள் தன்னிடம் கையூட்டு கேட்பதாக கொடுத்த புகார் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துணை ஆய்வாளர் சறீதர், வழக்கறிஞர் அம்பலவாணன் ஆகியோரை நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் பொறிவைத்து கையும் களவுமாக வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேர்நிறுத்துமாறு நீதிபதி ஆணையிட்டார். இதன் பேரில் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்யப்பட்ட இருவரையும் நேர்நிறுத்தினர். அப்போது வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர். தலைமை நீதிபதி கிருட்டிணராசா, வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு பிணை வழங்கினார். ஆனால் துணை ஆய்வாளர் சறீதருக்கு பிணை வழங்கவில்லை.

ஒரே வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு பிணை கிடைத்த நிலையில் துணை ஆய்வாளருக்கு பிணை அளிக்காததால், ஆத்திரமடைந்த புதுச்சேரி காவலர்கள் திரண்டுவந்து ரகளையில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி கிருட்டிணராசா அறை முன் காவலர்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒருசில காவல்நிலையங்களுக்கு பூட்டும் போட்டுவிட்டு ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், காவலர்கள், ஆயுதப்படை பிரிவினர் என சுமார் 750- க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய காவலர்களே ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலையங்களிலும், போக்குவரத்துப் பணிகளிலும் பணியாற்ற போதுமான காவலர்கள் இல்லை.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. இதற்கிடையில் காவலர்களின் குடும்பத்தினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காவலர்களுடன் வந்து, நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். துணை ஆய்வாளருக்கு பிணை வழங்காத நீதிபதி வெளியில் செல்ல முடியாத வகையில் ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

காவலர்களின் ரகளைக்கு பணிந்த நீதிபதி கையூட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆய்வாளர் சறீதருக்கு வெள்ளிக்கிழமை மாலை பிணை வழங்கினார். இதையடுத்து காவலர்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதுச்சேரி காவலர்களின் சட்டத்திற்கு புறம்பான இச்செயல் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 வரை நீடித்தது.

இதற்கிடையில் காவலர்களின் ரகளையை படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர்கள் செல்வராசு, சேகர், பாலா ஆகியோரை காவலர்கள் தாக்கினர். அவர்களின் படக்கருவிகளும் உடைக்கப்பட்டன. காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேரும் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட ஊடகவியலாருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சியினருடனும் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெற்ற காவலருக்கு ஆதரவாக புதுச்சேரி காவல்துறையே முழுமையாக செயல்பட்டதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களாட்சி தத்துவத்தின் மீதும் சட்டத்தின்மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தற்போது எழுந்துள்ள ஐயம் என்னவென்றால்,

காவலர்கள் கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெறுவது சட்டப்படி ஏற்கப்பட்டுள்ளதா என்பதுதான்? (ஆம், என்றால் வெளிப்படையாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இந்த வேலைக்கு இவ்வளவு தொகை என்று விலைப்பட்டியல் வைக்கட்டும். இல்லை, என்றால் நேற்று நீதிமன்றத்தில் அத்துமீறிய காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.)

காவல்துறை உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு பணியாமல் கட்டளைகளை புறக்கணித்த காவலர்களின் மீது காவல்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதி அறையை முற்றுகையிடவும், நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபடவும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி உண்டா? இல்லை, என்றால் ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் மீதும் அவர்களின் உறவினர்களின் மீதும் நீதிமன்றமும் அரசும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

கையூட்டு வழக்கில் அரசு அதிகாரிகளோ அரசு ஊழியர்களோ கைது செய்யப்படும்போது அரசு ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தை முற்றுகையிட அனுமதிக்கப்படுமா? அப்படி முற்றுகையிட்டால் நீதிபதிகள் உடனடியாக பிணை வழங்குவார்களா?

எதிர்காலத்தில் புதுச்சேரி அரசியல்வாதிகளும், குற்றவாளிகளும் தங்களுக்கு பிணை வேண்டும் என்பதற்காக நீதி மன்றத்தில் கும்பல் கூட்டி ரகளையில் ஈடுபட்டால் நீதிபதிகள் உடனே பிணை வழங்கிவிடுவார்களா?

தங்களைத் தாக்கிய காவலர்களுக்கு எதிராக ஊடவிலாளர்கள் எப்படி எதிர்வினை புரியப்போகிறார்கள்?

இப்படி பல்வேறு ஐயத்துடன் புதுச்சேரி மக்கள் அச்சத்தோடு நடமாடுகிறார்கள்...

“வலிமையானது நிலைக்கும்” என்ற டார்வின் கோட்பாட்டைப் போல சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில் “கும்பல் கூட்டி ரகளை செய்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என்ற புதிய கோட்பாட்டை புதுச்சேரி காவல்துறையும் நீதித்துறையும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

வாழ்க! சட்டத்தின் ஆட்சி!

படங்கள்: தினகரன்

Thursday, December 11, 2008

தாய் மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்-விஞ்ஞானி ம.அண்ணாதுரை

நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது.

இதில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவின் சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது. நமது நாடு 2020ல் வல்லரசு ஆகும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது ஆசை அதற்கு முன்பே நிறைவேறும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சந்திராயன்-1.

நிலவுக்கு சென்ற எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றது இல்லை ஆனால் இந்தியா தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.

நாம் விழித்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் அது. தற்போது நமது இளைஞர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் தங்களையும் உயர்த்தி கொள்ள வேண்டும்.

வேலைக்காக அமெரிக்கா செல்லும் நிலையை மாறி சுற்றுலா செல்ல மட்டுமே அமெரிக்கா என்ற நிலைவரும். சந்திராயனின் வெற்றி முடிவல்ல துவக்கம் தான்.

பெட்ரோல் தங்கம் போன்றவை மட்டும் ஒரு நாட்டின் செல்வம் அல்ல. மனிதவளம் தான் நாட்டிற்கு மிகப் பெரிய செல்வம்.

நமக்கு அந்த செல்வம் அதிகமாக உள்ளது. நமது மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக சாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

குழந்தைகள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் துறையில் படிக்க வையுங்கள். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் முதல் இடத்தை பெற வேண்டும். எல்லோரும் எல்லா துறைகளிலும் முதல் இடத்தை பிடித்தால் இந்தியா எளிதில் முன்னேறிவிடும்.

இந்தியாவை கொலம்பஸ் தேடிய போது கிடைத்தது தான் அமெரிக்கா, பல நாட்டினரின் உழைப்பால் உயர்ந்தது தான் அமெரிக்கா.

இந்தியாவின் கல்பனா சாவ்லா, வில்லியம்ஸ் போன்றோர் அங்கு சென்று சாதித்ததை இங்குள்ள நம்மால் சாதிக்க முடியாதா ? முடியும் என்பது தான் சந்திராயன்.

தாய் மொழியில் படித்தால் மன இருக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.

விரக்தி அடைந்த இளைஞர்கள் கூட்டம் தான் வன்முறையை நாடுகிறார்கள், எங்கோ,எதிலோ கிடைத்த ஏமாற்றம் தான் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது போன்ற செயல்கள் பலம் மிக்க நமது நாட்டை தடுமாற வைத்துவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி: தமிழ்முரசு

Monday, December 8, 2008

தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால்: தா.பாண்டியன்

சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தானது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தா.பாண்டியன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ்நாட்டு தலைவர்களை, கோமாளிகள் என்று கூறியிருக்கிறார். இமயம் சென்று கனகவிஜயனின் தலையிலேயே கல் சுமக்க வைத்து, சேரன் செங்குட்டுவன் அழைத்து வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த கனகவிஜயனின் ஆணவ சொற்கள் தான் இன்று சரத் பொன்சேகா வாயில் வெளிப்பட்டுள்ளது.

இந்தியா என்ற வலிமைமிக்க நாட்டின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறது என்பது தெரிந்தும், அந்த தமிழ்நாட்டின் தலைவர்கள் தான் மத்திய ஆட்சி விழாமல் தாங்கி நிற்கும் தூண்கள் என்று தெரிந்தும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று எப்படி பிரகடனம் செய்ய முடிகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகத்தான் கருத வேண்டும். இராணுவத் தளபதியிடம் குவிந்துள்ள சிங்கள இனவெறியை படம் பிடித்துக் காட்டுகிறது.

வேறுநாடாக இருந்திருக்குமானால், இதற்கு எதிர்நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி, ஆணவத்துடன் சிறிலங்காவின் சிங்கள இராணுவத் தளபதி பேசிய இன்றைய சூழலில், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் சிறிலங்காவுக்கு செல்வது அர்த்தமற்றது.

சிறிலங்கா பிரதமரை புதுடில்லிக்கு அழைக்க வேண்டும். இந்திய அரசையும் தமிழ் மக்களின் கௌரவத்தையும் அவமானப்படுத்திய சரத் பொன்சேகாவை இதற்காக பகிரங்கமாக கண்டிக்க வேண்டும்.

இதற்கு உடன்படவில்லை என்றால் சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை மூடுவதற்கு இந்திய அரசு உடன் முடிவெடுக்க வேண்டும்.

இதில் தமிழக அரசியல் தலைவர்களின் பங்கு முக்கியமானது. தமிழ் மக்களின் சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்.காம்

Sunday, December 7, 2008

சரத் பொன்சேகா 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான சிறிலங்கா படையினரின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கைவிட வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

இதனால், ஆத்திரமடைந்துள்ள சிங்களப் போர்ப்படை தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அரசியல் கோமாளிகள் எனத் தரம் தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்து தனது சிங்கள இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.

சிறிலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம். அதில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்தான் என்றும், சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதற்கு தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொக்கரித்தவர் இவர்.

இப்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதன் மூலம் தனது சிங்கள இனவெறியை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியிருக்கிறார் சிங்களப் போர்ப்படை தளபதி.

சிறிலங்காவைப் பொறுத்த வரையில் மகிந்த இராசபக்ச அரச தலைவராக இருந்தாலும், போர்ப்படை தளபதியான சரத் பொன்சேகா தான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போன்று பேசியும், செயற்பட்டும் வருகின்றார்.

எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. சிறிலங்காவின் குரலாகவே, சிங்கள அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, சரத் பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் மகிந்த இராசபக்சவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள சிறிலங்கா தூதுவரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறிலங்கா இதற்காக பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் எனத் டெல்லிக்கு எடுத்துக் கூற வேண்டும். அத்துடன் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இன்னும் காலம் தாழ்த்தாமல் 48 மணி நேரத்திற்கு உள்ளாக கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கைவிடச் செய்வதுடன், அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டை நிறுத்தப்படுவதன் மூலம் தமிழர்களின் தன்மானத்திற்கு சிறிலங்கா போர்ப்படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் டெல்லிக்கு எடுத்து கூற வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்