Friday, August 29, 2008

வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச கருணாநிதி முன்வரவேண்டும்-பழ.நெடுமாறன்

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.


1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.


அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.


அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.


1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.


1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.


பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

No comments: