Tuesday, January 22, 2008

“திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு” - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (23.01.2008) தொடங்கியது. ஆளுநர் உரையில் “திருவள்ளுவர் ஆண்டு கணக்கே தமிழ் ஆண்டாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உரையிலிருந்து...

“கூடியபெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921-ஆம் ஆண்டு சென்னை -பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு `தனி ஆண்டு' தேவை என்று கருதி, ஐய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே `தமிழ் ஆண்டு' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்.

அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே முதல்- அமைச்சர் கருணாநிதி ஏற்றுக்கொண்டு, 1971-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால், தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனி- தமிழ்ப்புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித்தருக்களை நாட்டி, வண்ண வண்ணக் கோலங்களிட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட, புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும், சமத்துவ உணர்வு பரப்பியும், தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத்துள்ளும் மகிழ்ச்சி யால் அன்பை அள்ளிப் பொழிவர்.”

என குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றுக் கடமையாற்றியுள்ள தமிழ்நாடு அரசை தமிழர்கள் அனைவரும் பாராட்டுவோம்...

No comments: