Thursday, February 7, 2008

சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்


சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்திய நாடாளுமன்றம் முன்பாக புதன்கிழமை அன்று (06.02.008) முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.

பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-

இனப்படுகொலைக்குத் துணை போகாதே!

ஆயுத உதவி வழங்காதே!

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- இந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.


பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

No comments: