1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.
1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.
1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார்.
ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா - கருணாநிதி கூட்டு உருவானது.
ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க "சர்க்காரியா கமிஷனை' இந்திரா அமைத்தார்.
1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.
1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.
ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். ""நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'' என முழங்கினார்.
1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.
1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது.
1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.
1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது.
2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.
மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன.
1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள்.
1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது.
1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது.
1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.
தில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன.
ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.
நன்றி: தினமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment