Friday, January 23, 2009

சிறிலங்காவுக்கான அனைத்து உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்: டி.ராஜா

சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா அரசே, இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்து''

'' இந்திய அரசே, போர் நிறுத்தத்திற்கு சிறிலங்கா அரசை நிர்ப்பந்தம் செய்''

என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மெமோறியல் மண்டபம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், சென்னை மாவட்ட செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் போர் ஒரு குரூரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. கிளிநொச்சி, ஆனையிறவு பகுதிகளை கைப்பற்றியதற்கு பின்னால் முல்லைத்தீவை சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டிருக்கிறது. பல லட்சம் தமிழ் மக்கள் ஒரு சின்ன நிலப்பகுதியில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான், வானூர்தி தாக்குதல், தரைவழித் தாக்குதல், கடல்வழி தாக்குதல் என இத்தாக்குதல்கள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கை போர் இந்த நிலையை எட்டியிருக்கிற போது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சும்மாயிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சிறிலங்கா அரசுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இலங்கை போரில் இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்களே பங்கெடுத்து வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாது இந்திய கப்பற்படை சிறிலங்கா கடற்படைக்கு தேவையான இரகசிய தகவல்களை சொல்லி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை ஆளும் தி.மு.க. அங்கே நடைபெறுவது இனப்படுகொலை என்று தொடர்ந்து கூப்பாடு போடுகிறது. ஒப்பாரி வைக்கிறது. கூக்குரலிடுகிறது. சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மன்மோகன் அரசு சட்டமன்ற தீர்மானத்தை சட்டை செய்வதாக இல்லை.

அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றும் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை போட்டிருக்கின்றனர். என்ன, இறுதி வேண்டுகோள்.

கெஞ்சி வாழ்வதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல.
உரிமையோடு வாழ்வதுதான் ஜனநாயகம்.


சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி உதவிகள் நிறுத்தவில்லையானால், நாம் அவர்கள் ஆள்வதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

முல்லைத்தீவு வீழ்வதற்கு முன்னால், அங்கு கிளஸ்டர் குண்டுகள் மழை போல் குவிவதற்கு முன்னால், மக்கள் பிணங்களாக குவிக்கப்படுவதற்கு முன்னால், இந்திய அரசு போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமாக அது வளரும். இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அது நடைபெறும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

No comments: