Monday, February 16, 2009

தமிழக மக்களை ஏமாற்றுகிறார் சிதம்பரம்: வைகோ

திருச்சி, பிப். 16: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க முப்படைகளையும் ஏவிவிட்டு போரை நடத்தி வருகிறார் ராஜபட்ச. உலகில் வேறெங்கும் நடைபெற்றிராத பேரழிவை அங்கே நடத்தி வருகிறார். இந்த இன அழிப்புப் போரை இந்தியா பின்னால் இருந்து இயக்கி வருகிறது. இதற்கு சாட்சியங்கள், ஆதாரங்கள் உள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், தமிழக மக்களை ஏமாற்றுகிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால், பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவும் என்கிறார் அவர். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தெரிவித்த மோசடிக் கருத்தையே சிதம்பரம் இப்போது வழிமொழிந்திருக்கிறார்.

ஒரு தரப்பை மட்டும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது உலகில் வேறெங்கும் நடைபெற்றிராத ஒன்று. பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்களில் போராளிகளின் ஆயுதங்களை கீழே போடச் சொல்லி இந்தியா உள்பட யாரும் கேட்கவில்லை.

2002-ல் முதலில் போர் நிறுத்தம் அறிவித்ததே விடுதலைப் புலிகள்தான். இதுவரை அவர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறவில்லை. ராணுவம்தான் இதை மீறி இப்போது போரைத் தொடுத்திருக்கிறது. புலிகள் தற்காப்புத் தாக்குதல்களைத்தான் மேற்கொண்டிருக்கின்றனர்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே போர் நிறுத்தத்துக்குத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டனர். ஆனால், ராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா ஆயுதங்களையும், ராடார்களையும் வழங்கி வருகிறது.

இடையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்றார்கள். அது போர் நிறுத்தமல்ல; குண்டுவீசிக் கொல்லப்போகிறோம், தப்பித்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட கெடு. அப்போதும்கூட குண்டுவீச்சு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு பல்வேறு வகையான போராட்டங்களாக உருவெடுத்துள்ளன. இதைச் சமாளிக்க, மக்களை ஏமாற்ற, இந்தப் பிரச்னைகளில் இருந்து எப்படித் தப்புவது என்றுதான் மத்திய அரசும், தமிழக முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காகத்தான் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற பெயரில் குழுவை அமைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட இக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கெனவே, அந்தக் கவுன்சில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த முடிவு செய்திருந்தது.

ரஷியா மட்டும் இதை எதிர்த்தது; ஆனால், இப்போது ரஷியாவும் ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த சில நாள்களில் நடைபெறும் கூட்டங்களில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படலாம். அப்போது, எங்களின் முறையீட்டை அடுத்துதான் ஐநா சபை இந்த முடிவை எடுத்தது என்று கருணாநிதி கூறுவார்.

இப்போதாவது போரை நிறுத்துங்கள் என்று, ஒப்புக்காவது இந்தியா கோருமானால், அடுத்த சில நாள்களில் உலக நாடுகள் முழுவதும் அதை வலியுறுத்த தயாராக உள்ளன.

அதைவிட்டுவிட்டு, விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சிதம்பரம் கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல் என்றார்.

நன்றி: தினமணி

1 comment:

Anonymous said...

வைகோ திருச்சிக்கு எப்போ வந்தார் ? அவர் டில்லியில் உண்ணாவிரதத்தில் இருக்கிறார் என்றல்லவா நினைத்தேன்