Monday, February 23, 2009

உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார்-பழ.நெடுமாறன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல் துறை தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறை மறுத்து விட்டது.

இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அந்த இயக்கத்தின் தலைவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அறிவித்தனர்.

பழ.நெடுமாறன்: மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

முதல்வரின் உத்தரவின்பேரில்தான் காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இந்த உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார். அத்துமீறி செயல்பட்ட காவல்துறை தலைவர், சென்னை மாநகர் ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வற்புறுத்தும் கோரிக்கை மிகமிக நியாயமானது. இதைச் செய்யாமல் பிரச்னை தீராது.

தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார். வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையிலும் உயர் அதிகாரிகளை காப்பாற்றவும் தான் உத்தரவிட்டதை மூடிமறைக்கவும் முயற்சி செய்கிறார்.

மரு. ச.இராமதாசு கூறியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.

ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.

இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

தா. பாண்டியன்: இலங்கையில் குண்டு போடுவதை நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அறவழியில் நாங்கள் போராடி வருகிறோம். இந்நிலையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாம் என அரசு கருதினால், எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அதனை முறியடிப்போம்.

வைகோ: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, கைதாவதில் எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நீதிமன்றத்தில் நடந்தது போலவே, இன்னொரு வன்முறைச் சம்பவத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்தே, எங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.

வரும் 27-ம் தேதி சென்னை மற்றும் அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் எங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திருமாவளவன்: நீதிமன்ற வன்முறை சம்பவத்துக்கு சுப்பிரமணியன் சுவாமிதான் முழு பொறுப்பு. அடியாட்களுடன் நீதிமன்றத்துக்கு சென்ற அவர், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். அதன் பிறகே வன்முறை வெடித்துள்ளது. எனவே அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி தினமணி (24.02.2009)

No comments: