சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் அலுவலகத்தை 2008, சூன் 30 திங்கட்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர் அவர்கள்: 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி ஆக வேண்டும் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். சூர்யநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்.அவர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு' என்ற நூலில் தமிழைச் செம்மொழி என்று கூறுவதே பொருத்தமாகும் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை அள்ளி வீசியிருக்கிறார்.
அவரது கனவு இன்று நனவாகியுள்ளது. அதனால்தான் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் வழங்கினோம். மதுரை அருகே உள்ள பரிதிமாற் கலைஞரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கினோம்.அவரது வீட்டைப் பார்க்க நான் சென்றிருந்தபோது என் வாழ்நாளில் முதன்முறையாக அக்ரகாரத்தில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மைசூரில் இயங்கி வந்தது. இதனை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று நடுவண் அமைச்சர் அர்சூன் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி அந்த நிறுவனத்தின் அலுவலகம் இங்கே தொடங்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் விருது: தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட "தொல்காப்பியர் விருது' வழங்கப்படும்.
குறள் பீட விருதுகள்: வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இரண்டு குறள் பீட விருதுகள் வழங்கப்படும்.இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்ட விருதுகள் வழங்கப்படும்.செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
இந்த விருதுகள் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் இந்தப் பணிகளைச் செய்யாமல் இருந்து விட்டதால் இப்போது விரைவுபடுத்தியிருக்கிறோம்.
இந்த விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் வா.செ. குழந்தைசாமி, எழுத்தாளர் செயகாந்தன், மா. நன்னன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும் பணி திங்கள்கிழமை மாலையே தொடங்கும்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றை அமைக்க எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி வழங்குகிறேன்.
இந்த ரூ.1 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து அதிலிருந்து வரும் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் வரலாற்று பயன்மிக்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்படும். அரசின் சார்பில் வழங்கப்படுகிற விருதுகளைத் தவிர இந்த விருதுகள் தனியாக வழங்கப்படும்.
தமிழ் செம்மொழியாகி விட்டால் விலைவாசி குறையுமா? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? பசி பட்டினி நீங்கி விடுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் அதையும் செய்துவிட்டு, தமிழைச் செம்மொழியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் என்றார் கருணாநிதி.
விழாவில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் ஐம்பெருங்குழு, எண்பேராயம் குழு உறுப்பினர்களும் தமிழக அமைச்சர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வணக்கம் ஐயா.
செம்மொழித் தமிழாய்வு மையம் அமைந்ததில் உலகத் தமிழர் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். இந்த மையம் தமிழைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் பெரும் பணிகளை மேற்கொண்டு செய்யவேண்டும் என்பதே கடல்கடந்து வாழும் எம்போன்ற தமிழரின் எதிர்பார்ப்பாகும்.
தங்களின் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். தமிழ்நலம் சார்ந்த செய்திகள் நன்று.
Post a Comment