Sunday, December 28, 2008

தமிழீழ விடுதலைக்கு உலக நாடுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள்

இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமைந்தகரை புல்லா அவென்யுவில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.



பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நடிகர் மன்சூர் அலிகான் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கட்சி கொடியை ஏற்றி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையை திருமாவளவன் தொடங்கிவைத்தார். அப்போது, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில பொறுப்பாளர்கள் கொடி வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் 'எகிறிப்பாய்', 'கட்டறுந்த புயல்' ஆகிய இறுவட்டுக்கள் இரண்டு வெளியிடப்பட்டன. ஜி.கே.மணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட, கவிஞர் காசி ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி உரையாற்றியதாவது:

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெறுவதற்காக இந்த இளைஞர் பாசறை செயற்பட வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தை உணர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறும் வகையில் தமிழர் ஒருவரை இந்தியத் தூதுவராக அமர்த்த வேண்டும்.
தமிழீழத்தை அங்கீகரிக்க இந்திய அரசு முன்வர வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் 700 முறை தமிழர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் குண்டுகள் வீசியுள்ளது.

ஒரு நாளைக்கு 1,000 தொன் குண்டுகள் வீசப்பட்டு அப்பாவித் தமிழர்கள் தவித்து வருகின்றனர் என்றார் ஜி.கே.மணி.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உரையாற்றியதாவது:

இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பது வேறு, யதார்த்தம் வேறு. போரை நிறுத்த வேண்டுமென கலைஞர் தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை புலிகள் ஏற்கிறார்கள். சிறிலங்கா அரசு மறுக்கிறது. இதுதான் யதார்த்தம். ஆங்கில நாளேடு நடத்திய கருத்துகணிப்பு ஒன்றில் 80 விழுக்காடு மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துள்ளனர். இந்த யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார் காசி ஆனந்தன்.


நிறைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றியதாவது:

இம்மாநாட்டை நடத்துவதற்காகக் காவல்துறை கெடுபிடி செய்தது. எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. என்னைக் கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் முரண்பாட்டை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பகடைக் காயாகப் பயன்படுத்த முயல்வதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானத்தை திருமாவளவன் வாசித்தார்.


அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் தமிழீழத்தை விட்டு வெறியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த இறையாண்மை இலங்கை தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களவர் கையில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன் வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

No comments: