Friday, March 6, 2009

ராஜீவ் கொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஆதரவளித்திருக்காது: தமிழருவி மணியன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்:


தமிழக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாரிய உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் உணர்வலை மிகப்பெரியளவில் பெருகியிருக்கிறது என்பதைத்தான் நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான செய்திகள் வலம் வந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வே தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிதாக இருந்தது. தமிழர்களின் இருதயங்கள் ரணப்பட்டன. விடுதலைப் புலிகள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்பது போல மக்களிடையே ஒரு மிகப்பெரிய சோர்வு இருந்தது. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு தமிழக மக்களால் ஆராதிக்கப்பட்டார்களோ அதனைவிடக் கூடுதலான அளவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் இன்னல்கள் துடைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களிடையே இன்று என்றுமில்லாதளவுக்கு உருவெடுத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களின் 12 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதுதான் வரலாற்று உண்மை.


ராஜீவ் காந்தி படுகொலையை சுற்றியே இலங்கை தொடர்பான இந்திய காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை பின்னப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸ் அரசின் தலைமையில் இன்றுள்ள மத்திய அரசின் கருத்தோட்டமாயினும் –

வெளியுறவுக் கொள்ளை என்றாலும் –

இனி எந்தக் கட்சி மத்தியிலே ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வந்தாலும் –

வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது அவர்கள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுவார்கள்.

ஏனெனில், பாகிஸ்தான் ஒருபக்கம் பகையோடு இருக்கின்றபோது, வங்கதேசம் இன்னொரு பக்கம் பகையோடு இருக்கின்றபோது, சீனா எந்த நேரத்தில் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருக்கின்றபோது அதன் தெற்குப் பக்கம் இருக்கின்ற இலங்கைத் தீவு தனக்கு பகையாக மாறி விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தியா பாசிச ராஜபக்ச அரசுக்கு பின்னால் நிற்கின்றது என்பதுதான் உண்மை.

எனவே, ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கலாம். ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்கும் என்று நான் நம்பவில்லை. அதனை செய்தவர் இந்திரா காந்தி.

இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சல், இந்திரா காந்திக்கு இருந்த ஈடுபாடு இந்திரா காந்திக்கு பின்னால் வந்த எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.


ராஜபக்ச அரசாங்கம் எப்போதும் தமக்கு சார்பாக இருக்குமென்று இந்திய மத்திய அரசு எப்படி நம்புகிறது?

அதுதான் இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறு. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையின் பக்கமாக நின்று விடக்கூடாது என்பதற்காக இலங்கை எதைச் செய்தாலும் இந்தியா அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தானின் பிடியில் இருந்தும் சீனாவின் பிடியில் இருந்தும் இலங்கையை விடுவித்து தனது பக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இது மிக மோசமான கண்ணோட்டம். வெளிவிவகாரத்துறை சார்ந்த மிகப்பெரிய பிழையான முடிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுக்கு துணையாகவோ, சார்பாகவோ, நன்றி உணர்வோடோ இருந்தது கிடையாது.

வங்க தேசத்தை உருவாக்க இந்திரா காந்தி முனைந்தபோது பாகிஸ்தானின் வானூர்திகள் தரித்து நிற்க உதவி செய்ததுதான் இலங்கை என்பதை இன்றைய இந்திய அரசு மறந்து விட்டது.

பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

சீனா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

இந்தியா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பாசிச அரசாக இன்று ராஜபக்ச அரசு இருக்கிறது. இந்த வெறிபிடித்த ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இந்திய மத்திய அரசு துணை நிற்பதை தமிழ்நாட்டிலே இருக்கும் எவரும் விரும்பவில்லை - அங்கீகரிக்கவில்லை - ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இங்குள்ள வருந்தத்தக்க செய்தி என்னவெனில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12 கோடி கைகளும் ஈழத் தழிழர்களின் துயர்துடைக்க தயாராக இருந்தாலும் இங்கு அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு அவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வரவிருக்கும் தேர்தலில் யார் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் நீங்கள் நெஞ்சம் புண்ணாகிப் போவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக இன்று சொல்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வீதி வீதியாக கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் மனிதச் சங்கிலி நடத்துவதுமாக ஈழத் தமிழருக்காக ஆதரவான ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

ஆனால் எந்த மத்திய அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறதோ அந்த மத்திய அரசே இதுவரை அது குறித்து சிறிதும் கவலைப்படாத நிலையில் - அந்த மத்திய அரசை இயக்குகின்ற, தலைமை தாங்குகின்ற காங்கிரசோடு எப்படியாவது தன்னுடைய தேர்தல் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிறது - தவிக்கிறது - தவமிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தமது சுயநலனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அளவில் காங்கிரசோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. இது ஒரு பக்கம்தான்.

அதேநேரம் உலகத் தமிழர்களின் உரத்துக் குரல் கொடுக்கும் வைகோ. சென்னைக்கு பிராணப் முகர்ஜி வந்தபோது கறுப்புக் கொடி காட்டி சிறை சென்று வெளியே வந்திருக்கிறார், உலகத் தமிழர்களுக்காக ஓங்கிக்குரல் கொடுக்கிறார்,

ஈழத் தழிழர்களுக்காக அவர் மிகப் பெரிய அளவுக்கு போராடுகிறார்,

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காக தான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் என்று கூறுகிறார். அவரது தமிழின உணர்வு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதேநேரத்தில் முழுக்க முழுக்க தமிழின உணர்வு அற்றவராகவும் தமிழினத்திற்கு விரோதியாகவும், ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதில் ராஜபக்ச அரசுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுப்பவராகவும் இருக்கின்ற ஜெயலலிதாவின் பக்கமாக போய் நின்று குறைந்தது ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்று அதில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வைகோ மேற்கொள்ளும் அரசியல் சமரசம் இருக்கிறதே அது மிகவும் பரிதாபகரமானது - வருந்தத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் இராமதாஸ் காலையில் இருந்து மாலை வரை ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் - குரல் கொடுக்கிறார். ஆனால் இன்றைக்கும் அவரது பிள்ளை மத்திய அரசில் தான் இடம்பெற்றிருக்கிறார். காங்கிரசிலிருந்து அவர் வெளியே வரவில்லை. அவரின் கட்சி மீண்டும் காங்கிரசோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் கூட்டணி அமைக்க மறைமுகமாகப் பேச்சு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் அணி திருமாவளவன் தலைமையில் இயங்குகிறது. பிரபாகரனை 1980 தொடங்கி நான் நேசிப்பவன், பிரபாகரனின் அன்புக்குரியன் என்று சொல்கின்ற திருமாவளவன் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி? காங்கிரசுடன் சேர்ந்துதானே கூட்டணி. திருமாவளவனை சிறைக்குள் தள்ள வேண்டுமென காங்கிரஸ் கூறுகிறது, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனினும் அவரை கைது செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் தனக்கு பலம் கிடைக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். எனவே ஒரு பக்கத்தில் விடுத்தலைச் சிறுத்தைகளுக்கும் இன்னொரு பக்கத்தில் சோனியா காந்திக்கும் பாலமாக கருணாநிதி இருக்கின்றார்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியைப் பெற்று அதில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக சோனியா காந்தியின் உறவை திருமாவளவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது எனில் –

தமிழ்நாட்டில் நெடுமாறன் என்கிற ஒரு மனிதனைத் தவிர ஈழத்தமிழர்களுக்காக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு பாடுபடுகிற ஒருதலைவர் இந்த தமிழ்நாட்டில் இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறிவைக்கிறேன். காரணம் நெடுமாறனுக்கு அரசியல் நிர்ப்பந்தம் இல்லை.

அரசியல் கடந்து நிற்கக்கூடிய அத்தனை பேரும் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறார்கள். ஆனால் அரசியல் அரங்கத்திற்குள்ளே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு தங்களது அரசியல் நாடாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ரணப்படுத்துகிற கசப்பான உண்மை.


தாயகத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் இந்த நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தமிழக மக்களா அல்லது அரசியல் தலைவர்களா?

இன்றல்ல என்றுமே ஆதரவாக இருப்பவர்கள் மக்கள்தான். ஆனால் மக்களைக் குழப்புகின்ற வேலையைச் செய்துகொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.

ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர், ஆனந்த விகடன் மற்றும் மேடைப் பேச்சுகளில் நான் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் - ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க வேண்டுமென நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால், தமிழகத்து மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினால், எல்லாக் கட்சி தலைவர்களும் கட்சி மாற்றங்களை மீறி, கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழின உணர்வொடு ஒரே குரலாக நீங்கள் முழங்குங்கள் - ஓரணியில் நில்லுங்கள்.

காங்கிரஸ் என்பது இன உறுதிப்பற்றற்ற சுயநலவாதிகளின் கூடாரமாக தமிழகத்தில் தன்னிலை தாழ்ந்து விட்டது என்பதை நாற்பதாண்டு காலம் தமிழகத்து அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் காலம் தொட்டு இன்றுவரை காந்திய வழியில் நெறி சார்ந்து - நேர்மை தவறாது - நேர்கோடாய் நடந்த நான் அந்த கட்சியின் மூலமாக இனிமேல் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த்தெடுக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையிலேதான் அந்த கட்சியை விட்டே வெளியே வந்திருக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்த வரை என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதா இன உணர்வு அற்ற ஒரு பெண்மணி. ஜெயலலிதாவின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் உருவாக்கிவிட முடியாது. அதேநேரம் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி என்பது கடந்த மூன்றாண்டு காலமாக ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாக எல்லா வகையிலும் துணைநின்று இன்று எனது தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படுகிற இழி நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

எனவே, அந்த காங்கிரஸ் அது யாரோடு கைகோர்த்து வந்து நின்றாலும் நாற்பது தொகுதிகளிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது.

அந்த வாக்களர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமெனில் சூழ்நிலையில் தெளிவிருக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கட்டும். கருணாநிதிக்கு நான் அதையே மீண்டும் மீண்டும் கூறினேன்.

காங்கிரசை கைகழுவி விடுங்கள் என்றேன். நீங்கள் கைகழுவி விட்டால் காங்கிரஸ் அடுத்த கணமே ஜெயலலிதாவிடம் போய் நிற்கும். ஜெயலலிதாவும் காங்கிரசும் சேர்ந்து தமிழின விரோதக் கூட்டணியை உருவாக்குவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருக்கும் இடதுசாரி இயக்கங்கள் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகப் பக்கமாக வருவார்கள்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என்று மிக வலிமையான கூட்டணி அமைக்க முடியும். அரசியலுக்கு பின்னாலுள்ள தமிழின உணர்வாளர் அமைப்புக்கள் அனைத்தும் இந்த கூட்டணிக்கு பின்னாலே நிற்கும். எனவே மிகப்பெரிய கூட்டணியை இது உருவாக்க முடியும். இது தமிழின உணர்வை வெளிப்படுத்துகின்ற கூட்டணியாக இருக்கும்.

காங்கிரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழின எதிர்ப்பு கூட்டணியாக இருக்கின்ற போது வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டோடு வரும் வாக்காளனுக்கும் ஒருதெளிவு இருக்கும். இது தமிழினத்தின் நலன் காக்கும் கூட்டணி, இது தமிழினத்தை வேரறுக்கும் கூட்டணி என்ற தெளிவான சிந்தனையோடு அவன் வாக்களிப்பான்.

ஆனால் இன்றுள்ள சூழ்நிலை எப்படி? கலைஞர் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். வைகோ ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத்திற்காக கண்ணீர் வடிக்கின்றார். இராமதாஸ் ஜெயலலிதாவுடன் போவதா, கலைஞருடன் போவதா என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கலைஞரைக் கைவிடுவதாக இல்லை.

ஈழத் தமிழர்களை பற்றி பேசும் இவர்களே இப்படி அணி பிரிந்து நின்றால் இதில் எந்த அணி ஈழத் தமிழர்களுக்காக உண்மையாக இருக்கும் அணி என்று மக்களுக்கு தெளிவு வரும்? யாருக்கு வாக்களிப்பது என்று அவர்கள் எந்த நிலையில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்?

மக்கள் இங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழீழம் கிடைப்பதுதான் தீர்வு என்றால் அந்த தீர்வும் உருவாகட்டும் என்று இங்கிருப்பவர்கள் வேள்வி நடத்துகிறார்கள். ஆனால் இன்று அந்த வேள்வித் தீயை அணைப்பதிலும் அழிப்பதிலும் அவரவர் கட்சி நலன் கருதி - அவரவர் சொந்த நலன்கருதி - அவரவர் பதவிகளுக்காக - அவரவர் சுகங்களுக்காக இன்று அரசியலையும் குழப்பி, அதன் ஆரோக்கியத்தையும் கெடுத்து, இன உணர்வை அழித்து ஒட்டுமொத்தமாக மக்களிடையே இன விரோதிகளாக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.

அரசியல் சாணக்கியன் என்று கருதப்படும் முதல்வர் கருணாநிதி எதற்காக இப்படியான ஒரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு பின்நிற்கிறார்?

"ஒரு இராஜதந்திரி தன்னுடைய அதிகபட்ச இராஜதந்திரத்தாலேயே அழிந்து விடுகிறான்." கலைஞரும் தமிழ் மக்களை மனதில் நிறுத்தினால் இந்த கூட்ணியை உருவாக்குவதற்கு அவர் முனையலாம். ஆனால், கலைஞருக்கு வைகோவின் மீது கோபம். வைகோவுக்கு கலைஞரின் மீது கோபம். வைகோவுடன் இருக்கும் கோபத்தை தணித்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் கலைஞர் வைகோவுடன் கரம் கோர்த்து நிற்க தயாராக இருப்பார். அது எனக்கு தெரிந்த விடயம்.

ஆனால் கலைஞர் போடும் கணக்கு என்னவெனில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லாமல் போனாலும் ஓட்டுமொத்த இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்தது போல வெற்றியைப் பெறத் தவறியதால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமென்று கலைஞர் கணக்குப் போடுகிறார்.

எனவே காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியிலே கூட்டணி அரசு வருமானால் அந்த கூட்டணியில் தன்னுடைய அரசும் வரவேண்டுமென கலைஞர் விரும்புகிறார். மீண்டும் ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தனது குடும்ப நலனிற்கும் கட்சி நலனிற்கும் உகந்ததாக இருக்கும் என்பது கலைஞருடைய கணிப்பு.

இதற்கு மாறாகு அவர் கணக்கு போட்டு தமிழகத்தில் அவர் வெற்றிபெற்றாலும் கூட ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் அடுத்த நிமிடமே கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியை திரும்ப பெற்றுக்கொண்டால் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அதனை மறுக்க முடியாது.

அத்துடன், கலைஞரின் குடும்பத்திற்கு ஓராயிரம் தொல்லைகள் ஜெயலலிதாவின் மூலமாக உருவாகக் கூடும். எனவே ஜெயலலிதா எந்த சந்தர்ப்பத்திலும் சோனியா காந்தியின் பக்கத்தில் போய் நின்றுவிடக் கூடாது என்றே கலைஞர் நினைக்கிறார். ஜெயலலிதாவின் சக்தி இந்திய அரசியலிலே வலுப்பெற்றுவிடக்கூடாது, மத்திய அரசில் ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுவிடக் கூடாது, எனவே கலைஞரின் எல்லா கவலைகளும் போயஸ் தோட்டத்தை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் எல்லா பார்வைகளும் கோபாலபுரத்தை சுற்றித்தான் இருக்கிறது. எனவே கலைஞர் ஜெயலலிதாவை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதாவும் கலைஞரை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தமிழகத்தின் விதி மட்டும் நிர்ணயிக்கப்படும் சூழல் இருக்குமானால் சாணக்கியராக இருக்கும் கலைஞருக்கு தெரியாமல் இல்லை. கலைஞர் நிச்சயமாக இப்படியான வலுவான கூட்டணியை அமைப்பார், தமிழினத்திற்காக குரல் கொடுப்பார், "வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்" என்று சொல்வார். இருப்பது ஒரு உயிர் அது போகப் போவதும் ஒரு முறைதான் என்று மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை வெவ்வேறு இராகங்களில் பாடுவார், உணர்சியை தூண்டுவார், வெற்றிக் கனியை சுவைப்பார். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த கூட்டணியில் நின்று தான் விலகி நின்றது பிழையாகிவிடுமே என்ற அச்சம்தான் அவரை காங்கிரசில் இருந்து வெளியேவராது பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துலகத்தில் இருந்து தமக்கு சார்பான ஒரு ஆதரவு நிலை வருமென்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் அந்த எதிர்பார்ப்பு தவறானதா?

அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. காரணம் அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு. எனவே இந்த தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் தமது அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுத்தால் –

அந்த மத்திய அரசு முன்னின்று முனைப்பாக உலக நாடுகளின் கருத்துக்களை எல்லாம் திரட்டி, ராஜபக்ச அரசுக்கு எதிராக அணிவகுக்கச் செய்தால் –

நிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்கும். அந்த நம்பிக்கை பிழை இல்லை. அது மிகச் சரியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிறைவேற வேண்டும் என்றால் இந்திய அரசு உடனடியாக காரியமாற்ற வேண்டும். இந்திய அரசு காரியமாற்ற வேண்டுமெனில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இருந்து தெரிவு செய்யப்படும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சிகளை மறந்துவிட்டு ஈழத் தமிழர் குறித்த நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும். இவ்வளவும்தான். இதில் ஒரு இரகசியமும் இல்லை.

எனவே இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இனநலன் சார்ந்து தெரிவு செய்வதற்கு தமிழகத் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கூட்டணிக் குழப்பங்களில் இவர்கள் மாறிமாறி முகம் காட்டினால் யாரை பார்த்து எப்படி வாக்களிப்பது?

எனவே தேர்தல் வரட்டும். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் தெளிவாகச் சொல்கிறேன் தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீத மக்கள் தேர்தலுக்கு பின்னாலும் ஈழத் தமிழர்களின் இன்னலை துடைப்பதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்தும் போராடுவார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஈழத்திற்கு உறுதுணையாக நிற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கும். அந்த நம்பிக்கையோடு இருக்கலாம் நீங்கள். புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் எனது தமிழினச் சகோதரர்களே என் இன மக்களே! உங்களை தமிழன் ஒருபோதும் கைவிட மாட்டான். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். இங்குள்ள அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பாதீர்கள். ஆனால் அரசியலுக்கு அப்பால் இந்த இனம் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களை ஆதரிக்ககூடிய சூழல் நிச்சயம் விரைவில் வரும்.


ஈழத் தமிழர்கள் தங்களுக்காக இந்த அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கலைஞர் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் அன்பு கூர்ந்து அவரிடம் "அய்யா நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுங்கள்" என்று கூறினேன். நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினால் தேசிய அளவில் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும். அப்போதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு விரைவாக காரியமாற்றும் என்று கூறினேன்.

மகுடங்கள் என்பவை இடம் மாறக்கூடியவை. இன்று ஒரு தலையில் இருக்கக்கூடிய மகுடம் நாளை இன்னொருவர் தலைக்கு தானாக இடம் மாறலாம். ஆனால் புகழ் மகுடம் ஒன்றை ஒருவன் உருவாக்கிக்கொண்டால் அது என்றும் அவனையே அலங்கரிக்கும்.

எனவே இடம்மாறக்கூடிய மகுடங்களைக் பற்றி கவலைப்படாது தமிழினத் தலைவர் என்ற புகழ் மகுடம் உங்கள் தலையில் என்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களது முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள் என்று அவரிடம் தொலைபேசியில் கூறினேன்.

அதன் பின்னர் கலைஞர், வைகோ, திருமாவளவன், இராமதாஸ் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து தமிழர் நலனுக்காவது நீங்கள் ஓரணியாக நின்று ஒன்றுபட வேண்டுமென்று சொல்வதற்கு முயன்றேன். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. காங்கிரசை நோக்கி திராவிட முன்னேற்ற கழகம் சென்று விட்டது. ஜெயலலிதாவை நோக்கி வைகோ சென்றுவிட்டார். இனிமேல் இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் தனியாளாகச் சென்று என்னுடைய கருத்துக்களை சொல்லி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் அரசியல் சார்ந்து சிந்திக்காமல் இந்த அரசியல் வாதிகளின் முகமூடிகளைக் கழற்றி அவர்களின் சுயமுகங்களைப் பார்த்து அவர்களிடம் இருந்து விலகி நின்று ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல்கொடுக்க நீங்கள் அத்தனை பேரும் இணைய வேண்டும் என்று நான் முனைப்பளவில் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னளவில் என்னால் இதனைத்தான் செய்ய முடியும்.

இராமன் சேது மண்டலம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு அணில் மணல் சுமந்தது. அணில் சுமக்கின்ற மணலில் பாலமாகி விடாது என்பது அணிலுக்கு தெரியும். ஆனாலும் அதன் பங்களிப்பை அதன் மனச்சான்றுக்கு மாறில்லாமல் அது செய்தது போல் நான் செய்து கொண்டிருக்கிறேன் - என்று அந்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

நன்றி: புதினம்.காம்

1 comment:

Anonymous said...

தமிழருவி மணியன்யின் பல கருத்துகள் ஆழ்ந்த புதிய தகவல் தந்துள்ளார்.
மேலும் இதுபோல் பல கருத்துகளை வெளியீடவும்.
நன்றி!

மேதகு ராசகோபால்
ஆர்.கே. நகர் வன்னிய சிங்கம்
அரியாங்குப்பம்.