Friday, December 14, 2007

மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...

இருபதாம் நூற்றாண்டின் தமிழின வரலாற்றில் திராவிட இயக்கத்தின் பணிகளை யாரும் மறைக்கமுடியாது.
அதேவேளையில் பெரியாரின் கொள்கையில் முரண்பட்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று உதயமான திராவிட முன்னேற்றக் கழகம் தன் குறிக்கோள்களை அடைந்ததா? இலக்கை அடைய இன்னும் எத்தனை தேர்தல்களை சந்திக்கவேண்டும்? இன்னும் எத்தனை முறை ஆட்சியில் அமர வேண்டும்? நடுவண் அரசில் இன்னும் எத்தனை முறை பங்கேற்க வேண்டும்? இலக்கை அடைய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? மனசாட்சி உள்ளவர்கள் மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...
திராவிட முன்னேற்றக் கழகம்

இயக்கத்தின் குறிக்கோள்

தமிழ்மொழி - தமிழ் இனம் - தமிழ்நாடு - தமிழ்க் கலை - தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்!
சாதியின் பெயராலும் - மதத்தின் பெயராலும் - கடவுளின் பெயராலும்
வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது!
சுயமரியாதையும், பகுத்தறிவும் மிகுந்த
சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்!
தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின்
வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்!
இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும்!
இந்த இலட்சியங்களை அடையப் பாடுபடுவதே
திராவிட முன்னேற்றக் கழகம்

ஐம்பெரும் முழக்கங்கள்

1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி

Thursday, December 13, 2007

தமிழர் நிலத்தை சூரையாடும் தமிழின எதிரிகள்...

தமிழினத்தின் எதிரிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ள தமிழின எதிரிகள். தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகள். வெளியில் உள்ள எதிரிகளை தமிழர்கள் இனங்கண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகளை தமிழர்கள் முழுமையாக இனங்கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வியப்பு.



தமிழரல்லாதோர் தன்னை "நான் தமிழன்! நான் தமிழன்!!" என்று வெற்று முழக்கமிட்டுக்கொண்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அடிவருடியாக இருந்துகொண்டோ அல்லது தமிழர்களின் எழுச்சியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைமையை கைப்பற்றியோ தமிழர்களுக்கு தொடர்ந்து இரண்டகம் செய்து வருகிறன்றர்.



இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ள தமிழின எதிரிகள் தமிழினத்திற்கு எஞ்சியுள்ள இந்த மண்ணின் மீதுள்ள உரிமையையும் பறிக்கின்ற சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இன்றைக்கு வளர்ச்சி என்ற பெயரால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடமிருந்து கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலம், மின்நிலையங்கள், விமான நிலைய விரிவாக்கம், துணை நகரத்திட்டங்கள் என்ற பெயரில் தமிழ்மண் தமிழரல்லாதோருக்கு கூறுபோட்டு விற்கப்படுகிறது.



பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக இந்த நிலக் கொள்ளை தற்காலிகமாக ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.