Thursday, April 10, 2008

சிறிலங்காவுக்கு 10 ஆயிரம் ஏவுகணைகள் விற்பனை: ஸ்லோவோக்கியாவுக்கு ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்பு

சிறிலங்காவுக்கு 10,000 இராணுவ ஏவுகணைகளை ஸ்லோவோக்கியா விற்பனை செய்துள்ளதாக "உலகப் பாதுகாப்பு" அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஸ்லோவோக்கியாவின் இந்த செயற்பாடானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது.

25 ஆண்டுகளாக போர் நடந்து வரும் இலங்கையில் இந்த ஆயுதங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அது கவலை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய அபாயகரமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடத்தை விதிமுறைகள் தடை செய்திருக்கின்றன என்று அந்த அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழுத் தலைவர் றோய் ஸ்பிஸ்டெர் தெரிவித்துள்ளார்.
"எங்கு மனித உரிமை மீறல்கள் எங்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதோ" அல்லது " எங்கு பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்திருக்கிறதோ" அப்பகுதிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அந்த நடத்தை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இன மோதல்களில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களால் சில நேரங்களில் பொதுமக்கள் "பாரபட்சமின்றி" பாதிக்கப்படுகின்றனர் என்று அறிக்கைகள் வெளியாகியிருப்பதையும் றோய் ஸ்பிஸ்டெர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"சிறிலங்கா அரசாங்கமானது போர் நடைபெறும் பகுதிகளுக்கு பெரும்பாலான சுயாதீன கண்காணிப்பாளர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதால் முழு உண்மை அறிய முடியாமல் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் வெளி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிட்டா பெரிர்ரோவின் பேச்சாளர் கிறிஸ்டினா ஹோக்மான், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் எப்படி நடத்தை விதிமுறைகளை செயற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விற்பனை தொடர்பிலான நடத்தை விதிகளை மீறவில்லை என்று ஸ்லோவோக்கிய பொருண்மிய அமைச்சு கூறியுள்ளது.

நன்றி: புதினம்.காம்

Saturday, April 5, 2008

கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல்!

கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல் ஏன்?
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்
தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும்.

சாதாரணமாக குடிடிநீரில் லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும். அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும்.
4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும். பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும்.

இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.

ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது.

இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது.

பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம்
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன.

மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர்.

தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது.

இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்.

நன்றி: புதினம்.காம்

Tuesday, April 1, 2008

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: இந்தியப் பிரதமருக்கு பா.மக. நிறுவனர் இராமதாசு கடிதம்

எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழர்களின் நியாயமான விருப்பங்களுக்கு இடமளிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழர்களை அடிமைப்படுத்துகிற, அழித்தொழிக்கிற திட்டத்தை மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.

இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இப்போது உயிரற்றுப் போய்விட்டது. நோர்வே நாட்டின் அமைதி முயற்சியில் உருவான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த 2002 ஆம் ஆண்டின் ரணில் விக்கிரமசிங்க - பிரபாகரன் ஒப்பந்தம், இலங்கை அரசால் இப்போது குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இலங்கை அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசாகிவிட்டது. அராஜக காட்டாட்சியாகி விட்டது. மனிதகுலத்துக்கே அது வெட்கக்கேடாகி விட்டது. தன் சொந்தத் தமிழ்க் குடிமக்களையே மிரட்டி நடுங்க வைக்கும் அரசாகி விட்டது.

இந்தப் போர்வெறி நோக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக் குவித்து வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் இப்போது அந்நாட்டின் தூதுவராகக் கொழும்பில் இருக்கிறார். தன் போர்ப்படை நோக்கங்களுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. இலங்கைக்கு சீனாவின் ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் என்ற போர்வையில், இலங்கைக்கு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சியையும் அமெரிக்கா அளித்து வருகிறது. இலங்கையின் இந்த ஆயுதத் தொகுப்புக்கு, இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக நாங்கள் அறிகிறோம்.

இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழு மூச்சான போரை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாக, இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை குறிவைத்துத் தாக்கி கொன்று வருகிறது.

இந்தியா மட்டுமே அண்டை நாடு என்றிருக்கும் நிலையில், தேவையே இல்லாத நிலையில், சுப்பர் சொனிக் மிக் போர் விமானங்களை அண்மையில் இலங்கை வாங்கியிருப்பதாக அறிகிறோம்.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு, இப்போது ஏறக்குறைய தமிழ் மக்களே இல்லாத வெற்றிடம் ஆக்கப்பட்டுவிட்டது. கருகிய மனித உடல்கள், எரிக்கப்பட்ட பயிர்கள், தாவரங்கள், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், குண்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட குழிகள், இடிபாடுகள், சாலைப் பள்ளங்கள் ஆகியவைதான், 5 ஆயிரம் ஆண்டுக் கால தமிழ் மொழி, பண்பாட்டின் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்று எஞ்சியிருப்பவை. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.

தங்களின் இயற்கையான, மரபான சூழலில் தமிழ் மக்கள் செழித்து வாழ்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகியவையும் இப்போது சாவும், அழிவும் மிகுந்த பகுதிகளாகிவிட்டன.
8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.

இலங்கை அரசின் தூண்டுதலால், அரசியல் உள்நோக்கத்துடன் மனித உரிமைகளை மீறி வருவோர், தொடர்ந்து கொலைகள் செய்வதிலும், ஆட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியை விரும்பும் அரசியல்வாதிகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். வெள்ளை நிற வான் ஆட்கடத்தல் என்று அழைக்கப்படும் ஆட்கடத்தல்கள் அரசின் உயர் தலைவர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன.

இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்குப் போர்ப்படை மூலம் தீர்வுகாண முயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஆகும். தமிழர்களின் தாயகமான 20 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை கைப்பற்ற வேண்டும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழர்களை எவரேனும் எஞ்சியிருந்தால் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், இலங்கைத் தீவு முழுவதையுமே சிங்களப் பெளத்தர்களின் நாடாக்க வேண்டும் என்பனவே இலங்கை அரசின் கொள்கைத்திட்டங்கள் ஆகும்.

இந்தியாவில் உள்ள 6 கோடி தமிழர்கள், பாக்கு நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சொந்த சகோதரர்களும், சகோதரிகளும் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு, பொறுத்திருக்க முடியாது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கடலின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும், ஆதரவும் மிகவும் வலுவானவை, ஆழமாக வேரோடியவை.

அன்புள்ள பிரதமர் அவர்களே, எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வரலாற்றில் அவர்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இப்போதே இந்தியா செயலாற்ற வேண்டும். போர் வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்ய வேண்டும். பேச்சு நடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது, தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்