Wednesday, July 30, 2008

வங்கி சேவைப் படிவங்கள் தமிழில் வழங்கவேண்டும்: ரிசர்வ் வங்கி ஆணை

வங்கிகளின் பல்வேறு சேவைகள், திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழில் விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் வணிக வங்கிகளை சாதாரண மக்கள் எளிதில் அணுகி, பல்வேறு சேவை வசதிகளை தயக்கம் இன்றி எளிதில் பெறச் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது. தற்போது இதுகுறித்து வழிகாட்டும் கையேடுகளை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விண்ணப்பங்களையும் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்பட வட்டார மொழிகளில் புரியும் வகையில் வெளியிட வேண்டும்.

கணக்குகளைத் தொடங்கவும், பணம் செலுத்தவும் தினமும் பயன்படுத்தும் படிவங்கள், சேமிப்புக் கணக்குப் புத்தகங்களையும் மும்மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளர் குறித்த பல்வேறு விவரங்களை மிகவும் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். தனியார் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது.

பண பரிமாற்றம் குறித்த முழு விவரங்களையும் வாடிக்கையாளரின் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். கணக்குப் புத்தகம், மாத கணக்கு அறிக்கையை இலவசமாக வங்கிகள் வழங்க வேண்டும்.

கடன் அட்டைகள் வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான விதிமுறைகள் குறித்து தமிழில் வெளியிட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கான சேவை தொடர்பாக மேலும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நன்றி: தினமணி, 30.07.2008.

Thursday, July 24, 2008

தமிழ் ஓசை நாளிதழுக்கு அரசு விளம்பரம் இரத்து

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு நாளிதழான தமிழ் ஓசைக்கு பாமக-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அரசு விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ம.க. தலைவர் கோ.க. மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Monday, July 21, 2008

விளைவுகள் மோசமானதாக இருக்கும்! - பழ. நெடுமாறன்

1983-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவர்களின் படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கும் சிறைவாசத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. மாறாக அவ்வப்போது கண்டன அறிக்கைகள் வெளியிடுவதன் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்புவதன் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.

மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் மத்தியில் ஆளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி திடீரென விழித்துக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். இவரது கட்சியின் ஆதரவு மத்திய ஆட்சி நீடிப்பதற்கு மிக மிக இன்றியமையாததாகும்.

இந்த நிலைமையில் தில்லிக்கு எச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஏமாற்றுவதாகும்.

யாருக்கு எதிராக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. மத்திய அரசுக்கு எதிராக என்றால் அந்த அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கமாகும். அப்படியானால் தன்னை எதிர்த்து, தானே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது.

இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு இந்தியா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான இந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை இந்தியாவுக்கு விடப்பட்ட அறைகூவலாக அல்லது குறைந்தபட்சம் அவமானமாகவோ கூட இந்திய அரசு கருதவில்லை.

ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவருக்குக்கூட இந்திய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னஞ்சிறிய இலங்கைக்கு இந்தத் துணிவு எங்கே இருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதன் நோக்கமென்ன? இதற்குப் பின்னணியில் வேறு நாடுகள் உள்ளனவா? என்ற கேள்விகள் நமது உள்ளங்களைக் குடைகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால், கடந்த கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இலங்கை இனப் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறை என்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.

1. இந்தியாவின் செல்வாக்குக்கு உள்பட்ட ஒரு நாடாக இலங்கை கருதப்பட்டது.

2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்னையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.

3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வு காண முயல்வதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது ராணுவ ரீதியாக உதவி அளிக்க முன் வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும்.

5. திரிகோணமலை மாவட்டத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலோ அன்னிய ராணுவத் தளங்கள் அமைவதை இந்தியா எதிர்க்கும்.

6. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திரிகோணமலை பகுதியின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.

இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக இந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட சிங்கள அரசின் பயங்கரவாதம் செயலிழந்தது.

இந்திய அரசின் நிர்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள அரசு ஆளாக்கப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஓரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதை சிங்கள அரசு முதலில் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற பிறகு, இலங்கை இனப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரி, இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் ஆகிய இருவரும் ராஜீவின் ஆலோசகர்களாக விளங்கினார்கள். இந்திராவின் ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத்துறைச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் அலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.

இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் அணுகுமுறை என்பது சிங்கள அரசுடன் ஆதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.

சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகளும் இஸ்திரேலிய மொசாட் படையினரும் பயிற்சி அளித்தனர். அமெரிக்காவின் ராணுவ செல்வாக்கு இலங்கையில் ஊடுருவியது.

இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்குப் பதில் ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது.
ராஜீவ் கடைப்பிடித்த இந்தக் கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.

1. ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமையத் தொடங்கின.

2. இலங்கை இனப்பிரச்னைக்கு சிங்கள அரசு கூறிய தீர்வை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளைத் தடுப்பதற்கு ராஜீவ் அரசால் இயலவில்லை.

4. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது.

5. திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையினருக்குத் தேவையான எண்ணெய்க் கிடங்குகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டபோது இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா, அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து தோற்றது.

இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்னாசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்குத் துணை புரிந்தன. தென்னாசியப் பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும்.

இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவப் பொருளாதார உதவிகள் இக்கொள்கையின் விளைவே ஆகும். தென்னாசியாவைப் பொருத்தவரை இந்தியாவை அதனுடைய எல்லைக்குள்ளாகவே அடங்கியிருக்கும்படி செய்ய அமெரிக்கா விரும்புகிறது.

டிகோ - கார்சியா தீவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அமெரிக்கக் கடற்படைத் தளம் தொடர்ந்து இருப்பதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். எனவே, இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேறு தளம் அமெரிக்காவுக்குத் தேவை. அதற்காக இலங்கை மீது ஒரு கண் வைத்துள்ளது.

மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக இலங்கை திகழ்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

அமெரிக்காவின் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ராஜீவின் கொள்கை துணை நின்றது. ஆனால் இதன் விளைவாக இந்தியாவுக்குப் பேரபாயம் நேர்ந்துவிட்டது.

தென்னாசிய நாடுகளின் அமைப்பிற்கு இயற்கையான தலைவராக இந்தியா இருந்தபோதிலும் அந்தத் தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக இல்லை. தென்னாசியப் பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டன. இந்தியாவைச் சுற்றி அந்த நாடுகள் இப்போது வியூகம் அமைத்துள்ளன. இந்த வியூகத்தின் ஓர் அங்கமே இலங்கையாகும்.

இந்த வியூகத்துக்கு பக்கபலமாக அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் உள்ளன. இந்த வியூகம் பலம் பெறுவது இந்தியாவின் சுதந்திரத்துக்கு அபாயத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இன்னமும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உணரவில்லை.

அன்னிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்பதற்கு இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ராணுவ உதவியை இலங்கை பெறுவதைத் தடுக்க வேண்டுமானால் இந்தியாவே முந்திக் கொண்டு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க வேண்டும் என தில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள். அதன்படியே செயல்படுகிறார்கள். இதன் மூலம் இலங்கை மேலும் துணிவு பெற்றுவிட்டது. தன்னை தாஜா செய்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி இல்லை என்று கருதுகிறது.

இலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவும் பிற நாடுகளும் ராணுவ ரீதியான உதவிகளையும் நிதி உதவிகளையும் அள்ளி அள்ளித் தருவது என்பது எதற்காக? இந்நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை பெரிய சந்தை அல்ல. இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதுதான் இந்நாடுகளின் நோக்கமாகும்.

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் ( பட்ங் ஐய்க்ண்ஹய் ஞஸ்ரீங்ஹய் - அ நற்ழ்ஹற்ஹஞ்ண்ஸ்ரீ டர்ள்ற்ன்ழ்ங் ச்ர்ழ் ஐய்க்ண்ஹ) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அதனால் ஆபத்து வந்து சேரும்''.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்த உண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் உணர்ந்திருந்தார். அன்னிய வல்லரசுகள் எதுவும் இலங்கையில் காலூன்ற அவர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள இன வெறி அரசை அனுமதிக்கவும் இல்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரையில் எந்த அன்னிய வல்லரசும் இலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.

ஆனால் ராஜீவ் கையாண்ட தவறான அணுகுமுறையின் விளைவாக இலங்கையில் அன்னிய வல்லரசுகள் தடம் பதித்தன. இதன் விளைவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் துணிவு சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய இந்திய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. அதுவும் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும்.
இலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களைப் பலி கொடுக்கவும் இந்திய அரசு தயங்கவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும்போது இந்தியக் கடற்படை ஒருபோதும் தலையிடாது என்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு உள்ளது. அதற்கேற்றாற்போல இந்திய அரசு நடந்து கொள்கிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது இலங்கையைத் திருப்தி செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். அவர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இலங்கையும் அதைப் பின்னணியில் இருந்து இயக்குகிற அன்னிய நாடுகளும் விரும்புகின்றன.

சிங்களக் கடற்படைக்கும் சிங்கள அரசுக்கும் எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒழிய இந்தியாவின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. இலங்கை அரசைத் திருப்தி செய்ய இந்தியா எவ்வளவுதான் விட்டுக் கொடுத்தாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த சாஸ்திரி, அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் இந்திய அரசு தயங்கவில்லை. இப்படியெல்லாம் செய்தும் கூட சிங்கள அரசின் போக்கில் மாற்றம் வரவில்லை.

1962-ஆம் ஆண்டில் இந்தியா சீனா எல்லைப் போர் வெடித்தபோது சீனாவை ஆக்கிரமிப்பாளர் என அறிவிக்க வேண்டுமென இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வற்புறுத்தியபோது அதற்கு இணங்குவதற்கு பிரதமர் பண்டாரநாயகா மறுத்துவிட்டார்.

1971-ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இலங்கை வழியாகச் சென்று கிழக்கு வங்காளத்தில் குண்டுகள் வீச, சிங்கள அரசு அனுமதித்தது.

வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்க சிங்கள அரசு ஒருபோதும் தயங்கவில்லை. இந்தியாவிடமிருந்து ராணுவ, நிதி உதவிகளை வரைமுறையின்றி பெற்றுக் கொண்டு வரும் சிங்கள அரசு, சிறிதளவு நன்றி கூட இந்தியாவுக்குக் காட்டவில்லை. வரலாறு சுட்டிக்காட்டியுள்ள இந்த உண்மைகளை எண்ணிப் பார்க்கத் தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும்!
நன்றி: தினமணி

Friday, July 4, 2008

திருடர்களின் அவை-புதுச்சேரி அரசு தலைமைச் செயலர்

அமைச்சரவை என்பது
“திருடர்களின் அவை”
-புதுச்சேரி அரசு தலைமைச் செயலர்

உண்மைதான்!

திருடர்களுக்கு ஒத்துப்போகும்
அரசு அதிகாரிகளை
எப்படி அழைக்கலாம்...

அதிகாரிகள் என்பவர்கள்
அயோக்கியர்கள்...

அனைத்தையும் வேடிக்கை பார்க்கும்
மக்களை என்னவென்று அழைக்கலாம்...
............ ................. .................. ................... ..............

Tuesday, July 1, 2008

செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் அலுவலகத்தை 2008, சூன் 30 திங்கட்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர் அவர்கள்: 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி ஆக வேண்டும் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். சூர்யநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்.அவர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு' என்ற நூலில் தமிழைச் செம்மொழி என்று கூறுவதே பொருத்தமாகும் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை அள்ளி வீசியிருக்கிறார்.

அவரது கனவு இன்று நனவாகியுள்ளது. அதனால்தான் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் வழங்கினோம். மதுரை அருகே உள்ள பரிதிமாற் கலைஞரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கினோம்.அவரது வீட்டைப் பார்க்க நான் சென்றிருந்தபோது என் வாழ்நாளில் முதன்முறையாக அக்ரகாரத்தில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மைசூரில் இயங்கி வந்தது. இதனை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று நடுவண் அமைச்சர் அர்சூன் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி அந்த நிறுவனத்தின் அலுவலகம் இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் விருது: தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட "தொல்காப்பியர் விருது' வழங்கப்படும்.

குறள் பீட விருதுகள்: வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இரண்டு குறள் பீட விருதுகள் வழங்கப்படும்.இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்ட விருதுகள் வழங்கப்படும்.செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

இந்த விருதுகள் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் இந்தப் பணிகளைச் செய்யாமல் இருந்து விட்டதால் இப்போது விரைவுபடுத்தியிருக்கிறோம்.

இந்த விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் வா.செ. குழந்தைசாமி, எழுத்தாளர் செயகாந்தன், மா. நன்னன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும் பணி திங்கள்கிழமை மாலையே தொடங்கும்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றை அமைக்க எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி வழங்குகிறேன்.

இந்த ரூ.1 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து அதிலிருந்து வரும் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் வரலாற்று பயன்மிக்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்படும். அரசின் சார்பில் வழங்கப்படுகிற விருதுகளைத் தவிர இந்த விருதுகள் தனியாக வழங்கப்படும்.

தமிழ் செம்மொழியாகி விட்டால் விலைவாசி குறையுமா? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? பசி பட்டினி நீங்கி விடுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் அதையும் செய்துவிட்டு, தமிழைச் செம்மொழியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் என்றார் கருணாநிதி.

விழாவில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் ஐம்பெருங்குழு, எண்பேராயம் குழு உறுப்பினர்களும் தமிழக அமைச்சர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.