Tuesday, March 31, 2009

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் முதல்வர்: நெடுமாறன் கண்டனம்

ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வருக்கு, இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களவர் என்பதும், 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா?

ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சினையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.

1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ பிரச்சினை முன்வைக்கப்பட்டு மிகப்பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழீழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

Thursday, March 26, 2009

இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார்: கருணாநிதிக்கு நெடுமாறன் சவால்

தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவ செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். முதலமைச்சர் கருணாநிதி, அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அரச தலைவர் ராஜபக்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்? நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்து களிக்கிறோம் கைதட்டி ஜெயகோசம் போடுகிறோம்" என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இப்போது இவ்வாறு கூறுபவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். யாழ். மக்களுக்கு உணவு அனுப்பாமல் சிங்கள அரசு பட்டினி போட்ட போது அந்த மக்களுக்கு உதவ 2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 12 ஆம் நாள் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து படகுகள் மூலம் உணவு - மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்ல நாங்கள் முயன்ற போது எங்களுக்கு படகுகள் தரக்கூடாதென மீனவர்களை மிரட்டி, எங்களைப் போக விடாமல் தடுத்து கைது செய்தவர் இதே முதலமைச்சர் கருணாநிதி என்பதை அவருக்கு நினைவுப் படுத்துகிறேன்.

இவ்வளவுக்கும் நாங்கள் போர்ப் படைத் திரட்டிச் செல்லவில்லை. மனித நேயத்துடன் எங்கள் சகோதரத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லத்தான் முயன்றோம்.

அதையே தடுத்தவர், இப்போது படகுகளில் ஏறி நாங்கள் செல்வதற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை என அவர் கூறுவது உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த பல்கலைக்கழகத்தின் ஒரு அரங்கில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அவரை நோக்கி செருப்பை வீசி “இது ஒரு மோசடி’ என்று கத்தினார். “இந்த சர்வாதிகாரி இங்கே பொய்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடியும்” என்று அந்த இளைஞர் தெரிவித்தார். ...

விரிவு...

Tuesday, March 24, 2009

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது: அமைச்சர் நிமால்

இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப இலங்கை அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் நிமால் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகபெரும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகியோரே இவ்வாறு கூறினர்.


அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா இது தொடர்பாகக் கூறியவை வருமாறு:

இந்தியாவின் தலையீட்டுடன்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகாரப் பகிர்வு என்ற இந்தியாவின் ஆசை அப்போது இந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது நிலைமைவேறு.

இலங்கையில் யுத்தம் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கான உதவியையும் அது எமக்குச் செய்கின்றது. ஆனால், எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் எமக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.

இந்தியா எமக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அந்நாடு மருந்துப் பொருள்களையும் வைத்தியர்களையும் எமக்குத் தந்துள்ளது. இன்னும் உதவ முன்வந்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திங்கட்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினார். பல உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா தயராக இருப்பதாக தூதுவர் என்னிடம் கூறினார் என்றார்.


ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுயதாவது:

இந்தியா எமது யுத்த நடவடிக்கையை ஏற்றுள்ளது. எமது படையினர் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதேவேளை, அப்பாவி மக்களையும் காப்பாற்றுகின்றனர் என்றார்.
யுத்தம் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் எமது படையினர் போல் மனிதாபிமானத்துடன் எவரும் செயற்படுவதில்லை. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இதை நன்கு விளங்கி வைத்துள்ளன. அவை ஒருபோதும் யுத்தத்தை நிறுத்த முற்படமாட்டா என்றார்.


அங்கு வைத்து விமல் வீரவன்ஸ கூறியவை வருமாறு:

இந்தியா நினைத்தால் யுத்தத்தை நிறுத்தவும் முடியும். அதைத் தொடர வைக்கவும் முடியும். ஆனால், இது தொடர்பில் இந்தியா எமக்கு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. இது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

அதேவேளை, நாம் ஏனைய நாடுகளின் தேவைக்கு ஏற்ப எமது அரசியல் நடத்தைகளை மாற்றியமைக்க முடியாது.

அரசியல் நடத்த வேறு கோஷம் எதுவும் இல்லாதவர்களே இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்திய வைத்தியர்கள் இங்கு வந்தமை பிழை என்கின்றனர் என்றார்.

நன்றி: தமிழ்வின.காம்

Monday, March 23, 2009

5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ

இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.

இந்த துரோகத்திற்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா வைகோ தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார்.

பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு 10ஆயிரம் பணம் கொடுத்தார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பண உதவிகள் வரும் என வைகோ தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், இலங்கையில் வன்னிப் பகுதியில் ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள இராணுவம்.

உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது.

இப்படிப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.

இந்த துரோகத்திற்கு நாம் நல்ல பாடம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Sunday, March 22, 2009

இலங்கையில் போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை விவர ஐ.நா. ஆவணம் வெளியிடப்பட்டது

இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து மார்ச் 7ஆம் திகதி வரையில் 2683 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கின்றது.

ஐ.நாவின் ஆவணம் ஒன்று தற்செய லாக (உத்தியோகபூர்வமற்ற வகையில்) வெளிப்பட்டுவிட்டதில் இந்த விவரம் காணப்படுகிறது. இன்னர் சிற்றி பத்திரிகையில் இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது.

இப்போது இந்த ஆவணம் பல பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள், தூதுவர்கள் கைகளிலும் மூத்த ஐ.நா. அரசியல் மற்றும் மனித உரிமை அதிகாரிகளின் கைகளுக்கும் கிடைத்துள்ளது. வன்னிப் போரினால் பொதுமக்கள் இறந்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த தகவலை கொழும்பில் மனித உரிமைகள் அமைச்சர் மறுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த ஓர் அறிக்கையில் இலங்கையில் அரசாங்கமும் தமிழ்ப் புலிகளும் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதற்கு சாத்தியம் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடுக்க இயலாது.
நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றீர்களா என்று அந்த நீதிமன்றத்தின் வழக்குத் தொடுனரான லூயிஸ் மோரேனோ ஏகாம்போவிடம் இன்னர் சிற்றிப் பிளேஸ் செய்தியாளர் கேட்டார்.

ஒகாம்போ அதற்கு பதிலளிக்கையில் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்ட தரப்பினராக இல்லை என்றார்.

மேலும் மிக அண்மையில் தாம் ஆபிரிக்காவில் மாத்திரமே போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முயற்சிப்பதாக ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தம்மீது குற்றஞ்சாட்டியிருந்தாகக் கூறினார்.

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோப்பு ஒன்றை அல்லது விவர ஆவணம் (Data Base) ஒன்றைத் திறந்திருக்கிறது என்ற தகவலை ஒகாம்போவுடன் பிரயாணங்களில் ஈடுபடும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அலுவலர் ஒருவர் இன்னர் சிற்றி பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருக்காமையால் சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும் பாலஸ்தீனியர்களைப் போன்று இலங்கைத் தமிழர்கள் தமக்கு நியாயாதிக்கம் அதாவது சட்டப் பாதுகாப்பு (Jurisdiction) வழங்கும்படியாகவும் கூட இன்னும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி: புதினம்.காம்

கச்சத் தீவை மீட்க வேண்டும்: ஜெயலலிதா

சென்னை, மார்ச் 22: இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு 1974-ம் ஆண்டு இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்பட்டது. எனினும் இந்திய மீனவர்கள் அங்குள்ள அந்தோணியார் கோயிலில் வழிபடவும், கச்சத் தீவில் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் உரிமை உண்டு என அந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அந்த உடன்படிக்கைக்கு மாறாக கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவது தொடர்கிறது.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என இந்திய அரசை ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1895 மற்றும் 1930-ம் ஆண்டுகளின் வரைபடங்களின்படி கச்சத் தீவு இந்தியாவிற்கே சொந்தமானது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு 26.6.1974-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியால், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

அப்போது தமிழகத்தின் முதல்வராக கருணாநிதிதான் இருந்தார். ஆனால் கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதை அவர் எதிர்க்கவில்லை. அவரது துரோகச் செயலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிகுப்ப படையாச்சி என்பவரால் கட்டப்பட்ட புனித அந்தோணியார் கோயில் கச்சத் தீவில் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை அங்கு நடத்தப்படும் திருவிழாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், மீன் வலைகளை அங்கு உலர்த்தவும், நமக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் கூட பறிபோய்விட்டன.

எனது ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991-ம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபோது, கச்சத் தீவை மீட்போம் என அறிவித்தேன்.

இது குறித்து பல முறை மத்திய அரசையும், இந்திய பிரதமரையும் வலியுறுத்தினேன். 16.9.2004 அன்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கச்சத் தீவில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன்.

இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு பதில் மனு கூட தாக்கல் செய்ததாகத் தெரியவில்லை. இதுதான் தமிழக மீனவர்களின் மீது கருணாநிதிக்கு உள்ள அக்கறை.

கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போகிறோம் என தன்னிச்சையாக இலங்கை அரசு அறிவித்தும், அது குறித்து மாநில தி.மு.க. அரசும், மத்திய அரசும் வாய் திறக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இலங்கைத் தமிழர்களை அழிக்க உறுதுணையாக இருந்தது போல், கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிப்போம் என்ற இலங்கை அரசின் இந்த அறிவிப்புக்கும் மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும் உறுதுணையாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக மீனவர்களை காப்பாற்றும் வகையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பை முளையிலேயே கிள்ளி எறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி தினமணி.காம் (23.03.2009)

Tuesday, March 17, 2009

இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.

அதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி.பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்கின்றது.

நன்றி: புதினம்.காம்

Monday, March 16, 2009

ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக குரல்வளையை நசுக்கிறது: செய்தியாளர்களிடம் வைகோ

இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் சீமானைப் பார்த்து விட்டு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த இயக்குநர் சீமானை புதுச்சேரி அரசு முதலில் சாதாரண குற்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் பாசிச ஆட்சி நடத்தும் முதல்வர் கருணாநிதி, சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தன் கையில் உள்ள காவல் துறையை ஏவி விட்டு ஏற்பாடு செய்தார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் பேசாததையா இயக்குநர் சீமான் பேசிவிட்டார்?

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்குக் காரணம் இலங்கை கடல் எல்லையில் கண்ணி வெடி வைத்துள்ளனர். இலங்கை இராணுவம் சுட்டதில் இதுவரை தமிழக மீனவர்கள் 500 பேர் இறந்துள்ளனர். இதுவரை யாரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் பணம் வட்டியில்லாமல் கொடுத்துள்ளது. இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது.

இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷியா போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. இப் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடையும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வார்கள் என்று சீமான், நாஞ்சில்சம்பத், கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தந்திரமாக கைது செய்துவிட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை 11 இளைஞர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை என்ற தீ தமிழர்கள் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மதிமுக சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் கோவையில் நான் பங்கேற்க உள்ளேன் என்றார் வைகோ.

பேட்டியின் போது மதிமுக மாநில அமைப்பாளர் மணிமாறன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி: தமிழ்வின்.காம்

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களை தோலுரித்துக் காட்டுவோம்: பழ.நெடுமாறன்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரியில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தோலுரித்துக் காட்டுவோம் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 48 நாள்களில் பல ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மக்கள் திரள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதித்து நடக்கிறோம். இதுவரை 11 இளைஞர்கள், உயிரை துச்சமென மதித்து தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்திய அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தர வேண்டும் என்றா கேட்கிறோம். யுத்தத்தை நிறுத்தச் சொல்கிறோம். பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரை நிறுத்தச் சொல்லியிருந்தால் போர் நிறுத்தப்பட்டு இருக்கும்.

1983-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மூவாயிரம் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தில்லி செங்கோட்டையில் இந்திரா காந்தி தேசியக் கொடி ஏற்றி விட்டு இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இருக்காது என்றார். இதைக் கேட்ட ஜெயவர்த்தனே தில்லிக்கு வந்து விட்டார்.

இந்திராகாந்தியிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இதை மன்மோகன்சிங்கிடம் எதிர்பார்க்க முடியாது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சொல்கிறார் பிரணாப் முகர்ஜி.

இந்திராகாந்தி வழங்கிய ஆயுதங்கள்தான் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இந்த உண்மை காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியாது. அவர்களுக்கு உலக வரலாறும், இந்திய வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரியம் உண்டு. மிகப் பெரிய தலைவர்கள் தியாகம் செய்து வளர்த்த கட்சியாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மனிதாபிமான அடிப்படையில் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் பிரதமருக்கு அடுத்த பொறுப்பில் இருப்பவர். அவர் சென்னையில் பேசும்போது தமிழர்களுக்கு ஆறுதலாக 4 வார்த்தை கூறுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் மாறாகப் பேசியுள்ளார். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில் இலங்கைப் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை, அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்.

காங்கிரஸ்காரர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதை தமிழ் இதயங்கள் மன்னிக்காது. இதற்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ளவர்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் 48 நாட்கள் மக்களை ஒற்றுமையாகச் சந்தித்து வருகிறோம்.

தேர்தல் வரும் போகும். வரப்போகும் தேர்தல் களத்தை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றுவோம். யார் யார் துரோகம் செய்தார்கள் என்று தோலுரித்துக் காட்டுவோம் என்றார் அவர்.

நன்றி தமிழ்வின்.காம்

Thursday, March 12, 2009

சிறீலங்காவின் உண்மை நண்பன் இந்தியா - இலங்கை அமைச்சர் நிமால் பாராட்டு

உலகின் பல நாடுகள் இங்கு நடப்பது தெரியாது எமக்கு பல கட்டளைகள் போடுகின்றது, ஆனால் இந்தியா எமது நிலையை நன்கு புரிந்து கொண்ட நண்பனாக செயற்பட்டு வருகின்றது என சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து சிறீலங்கா சென்றுள்ள இந்திய இராணுவ மருத்துவக் குழுவினரைச் சந்தித்து அவர்கள் கொண்டு சென்றுள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இக்கருத்தை அவர் தொவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் உலக நாடுகள் பல சிறீலங்காவின் நிலையை புரிந்து கொள்ளாது எம்மை அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அதைக்கைவிடு, இதைக்கைவிடு என தொடர்ந்து அழுத்தம் தந்துகொண்டு இருக்கையில் இந்தியா எதுவும் பேசாது தானாக எமக்கு உதவ முன்வந்துள்ளது.

இந்தியா முன்னரும் உதவியுள்ளது. இந்தியாதான் எமது உண்மை நண்பன் அவர்களுக்கு எமது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

இதே நிகழ்வில் கருத்து தெரிவித்துள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், சிறீலங்கா மற்றும் இந்தியாவின் நெருங்கிய உறவின் வெளிப்பாடே இந்த உதவி எனவும், இதில் இருந்து சிறீலங்கா இந்தியாவிற்கிடையான நெருக்கமான உறவைப்பற்றி புரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

தமது மருத்துவப்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் வலுப்பெற்றது எனவும், அவர்கள் முழுமையான மருந்து மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளனர் எனவும் அலோக் கூறினார்.

சிறீலங்காவில் போர் உச்சமடைந்து தமிழர் தாயகப் பகுதிகளில் சிறீலங்கா படைகளின் எறிகணை மற்றும் கொத்துக்குண்டு வீச்சில் சிக்கி தினமும் பல மக்கள் மடிந்து கொண்டுள்ள நிலையில் இந்தியா மருத்துவ உதவிகளை வன்னிக்குள் அனுப்பாது சிறீலங்காவிற்குள் அனுப்பியுள்ளதன் மூலம் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நன்றி: பதிவு.காம்

த‌மி‌ழின‌த் துரோ‌கி கருணா‌நி‌தி : ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று

தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார் எ‌ன்று அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி, என்னுடைய அறிக்கையை நகைச்சுவை என்று கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றவுடன், ஒரே நாளில் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து, அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது சாத்தியமா? என்று தன்னுடைய அறிக்கையில் வினவியிருக்கிறார் தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்ற அறிவிப்பு 5.3.2009 அன்றே வெளிடப்பட்டு விட்டது. அதற்கான ஏற்பாடுகளை மூன்று, நான்கு நாட்களில் மத்திய அரசு தாராளமாக செய்யலாம். அனைத்தையும் தெரிந்திருந்தும், ஒன்றும் தெரியாதது போல் நடிக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்வது?

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக மத்திய அரசு ஆயுதங்களையும், அதிநவீன சாதனங்களையும் அளித்த போதும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்த போதும் வாய்திறக்காத கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க அருகதை இல்லை என்பதை முதலில் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏதோ இரண்டு இடங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதை வாழ்த்தியதாக தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்க ஒத்துழைப்பு கொடுத்ததற்காக தமிழக மக்கள் கருணாநிதியை விரட்டி அடிக்கத் தயாராகி விட்டார்கள் என்பதை உணரவில்லை போலும்!

தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தத் தொகையையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக் கூட தெரிந்துகொள்ளாமல் நான் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதியினுடைய அறிக்கையின் வரிகளைப் பார்த்தால், அ.இ.அ.தி.மு.க சார்பில் திரட்டப்பட்ட நிதி இலங்கைத் தமிழர்களை சென்றடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. நல்லது செய்வதைக் கெடுப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதி தான். கருணாநிதியின் தீய எண்ணத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். "வில்லன்' கருணாநிதியின் வேடம் கலைந்துவிட்டது. எனக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் எதிராக கருணாநிதி ஏற்படுத்திய எத்தனையோ தடைகளை நான் முறியடித்திருக்கிறேன்.

அந்த வகையில், இந்தத் தடையையும் நான் முறியடிப்பேன் என்பதை கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, அ.இ.அ.தி.மு.க.வால் திரட்டப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான நிதி முறையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.

தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் தான் செய்த துரோகத்தை மறைக்க என்னை வசைபாடி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார். துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை " எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

(மூலம் – வெப்துனியா)

Tuesday, March 10, 2009

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திடம் பிரான்ஸ் துணைத் தூதுவர் உறுதி

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திடம் பிரான்ஸ் துணைத் தூதுவர் உறுதி

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட் உறுதியளித்துள்ளார்.


இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக மனு அளிக்கச் சென்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்களிடம் அவர் இந்த உறுதிமொழியை அளித்தார்.

இலங்கையில் போரை நிறுத்துவதற்காக போராடி வரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் முனைவர் இராமதாஸ், சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ந.ரா.கலைநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார், பாரதிய ஜனதா கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் புதுச்சேரியில் உள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட்டை சந்தித்து உரையாற்றினர்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து அவரிடம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் விரிவாக விளக்கினர். ஈழத் தமிழர் நலனில் அக்கறை செலுத்தி வரும் பிரான்ஸ் அரசு இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மனுவையும் அவர்கள் அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட், இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு, அதனால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்ததாகப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரியும், அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரியும், மருத்துவமனையில் மருத்துவம் பெறும் அப்பாவித் தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரியும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும், ஐரோப்பிய கூட்டணி நாடுகளும், பிரான்ஸ் நாடும் சேர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு உலக நாடுகளில் அதிகம் பாதுகாப்புக் கொடுத்த நாடு பிரான்ஸ் நாடு. இதற்குக் காரணம் புதுச்சேரியில் தமிழ் மக்களுடன் பிரான்ஸ் நாடு அதிக நெருக்கத்தைக் கொண்டுள்ளதுதான். தமிழின மக்கள் இலங்கையில் வாழ்வதால் தான் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு அளித்தனர். இதன் அடிப்படையிலியே பிரான்சிடம் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம் என்றும் வைகோ தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இரண்டு முறை விவாதம் நடைபெற இருந்தது. ஆனால் சீனாவும், ரசியாவும் அந்த விவாதத்தை தடுத்து நிறுத்திவிட்டனர். இதற்குக் காரணம், இந்திய அரசின் தூண்டுதல்தான் என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்ற வகையில் பிரான்ஸ் அரசு அனைத்துலக அளவில் செல்வாக்கு பெற்றிருக்கிறது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிலையான உறுப்பினர்களில் பிரான்சும் ஒன்று என்ற முறையில், போரை நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலமாக பிரான்ஸ் வலியுறுத்த முடியும். எனவேதான் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரான்சிடம் வலியுறுத்துகிறோம் என்று பிரான்ஸ் துணைத் தூதுவரிடம் பாட்டாளி மக்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர் முனைவர் இராமதாஸ் கூறினார்.

நன்றி புதினம்.காம்

Friday, March 6, 2009

ராஜீவ் கொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஆதரவளித்திருக்காது: தமிழருவி மணியன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்:


தமிழக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாரிய உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் உணர்வலை மிகப்பெரியளவில் பெருகியிருக்கிறது என்பதைத்தான் நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான செய்திகள் வலம் வந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வே தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிதாக இருந்தது. தமிழர்களின் இருதயங்கள் ரணப்பட்டன. விடுதலைப் புலிகள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்பது போல மக்களிடையே ஒரு மிகப்பெரிய சோர்வு இருந்தது. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு தமிழக மக்களால் ஆராதிக்கப்பட்டார்களோ அதனைவிடக் கூடுதலான அளவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் இன்னல்கள் துடைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களிடையே இன்று என்றுமில்லாதளவுக்கு உருவெடுத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களின் 12 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதுதான் வரலாற்று உண்மை.


ராஜீவ் காந்தி படுகொலையை சுற்றியே இலங்கை தொடர்பான இந்திய காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை பின்னப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸ் அரசின் தலைமையில் இன்றுள்ள மத்திய அரசின் கருத்தோட்டமாயினும் –

வெளியுறவுக் கொள்ளை என்றாலும் –

இனி எந்தக் கட்சி மத்தியிலே ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வந்தாலும் –

வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது அவர்கள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுவார்கள்.

ஏனெனில், பாகிஸ்தான் ஒருபக்கம் பகையோடு இருக்கின்றபோது, வங்கதேசம் இன்னொரு பக்கம் பகையோடு இருக்கின்றபோது, சீனா எந்த நேரத்தில் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருக்கின்றபோது அதன் தெற்குப் பக்கம் இருக்கின்ற இலங்கைத் தீவு தனக்கு பகையாக மாறி விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தியா பாசிச ராஜபக்ச அரசுக்கு பின்னால் நிற்கின்றது என்பதுதான் உண்மை.

எனவே, ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கலாம். ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்கும் என்று நான் நம்பவில்லை. அதனை செய்தவர் இந்திரா காந்தி.

இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சல், இந்திரா காந்திக்கு இருந்த ஈடுபாடு இந்திரா காந்திக்கு பின்னால் வந்த எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.


ராஜபக்ச அரசாங்கம் எப்போதும் தமக்கு சார்பாக இருக்குமென்று இந்திய மத்திய அரசு எப்படி நம்புகிறது?

அதுதான் இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறு. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையின் பக்கமாக நின்று விடக்கூடாது என்பதற்காக இலங்கை எதைச் செய்தாலும் இந்தியா அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தானின் பிடியில் இருந்தும் சீனாவின் பிடியில் இருந்தும் இலங்கையை விடுவித்து தனது பக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இது மிக மோசமான கண்ணோட்டம். வெளிவிவகாரத்துறை சார்ந்த மிகப்பெரிய பிழையான முடிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுக்கு துணையாகவோ, சார்பாகவோ, நன்றி உணர்வோடோ இருந்தது கிடையாது.

வங்க தேசத்தை உருவாக்க இந்திரா காந்தி முனைந்தபோது பாகிஸ்தானின் வானூர்திகள் தரித்து நிற்க உதவி செய்ததுதான் இலங்கை என்பதை இன்றைய இந்திய அரசு மறந்து விட்டது.

பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

சீனா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

இந்தியா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பாசிச அரசாக இன்று ராஜபக்ச அரசு இருக்கிறது. இந்த வெறிபிடித்த ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இந்திய மத்திய அரசு துணை நிற்பதை தமிழ்நாட்டிலே இருக்கும் எவரும் விரும்பவில்லை - அங்கீகரிக்கவில்லை - ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இங்குள்ள வருந்தத்தக்க செய்தி என்னவெனில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12 கோடி கைகளும் ஈழத் தழிழர்களின் துயர்துடைக்க தயாராக இருந்தாலும் இங்கு அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு அவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வரவிருக்கும் தேர்தலில் யார் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் நீங்கள் நெஞ்சம் புண்ணாகிப் போவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக இன்று சொல்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வீதி வீதியாக கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் மனிதச் சங்கிலி நடத்துவதுமாக ஈழத் தமிழருக்காக ஆதரவான ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

ஆனால் எந்த மத்திய அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறதோ அந்த மத்திய அரசே இதுவரை அது குறித்து சிறிதும் கவலைப்படாத நிலையில் - அந்த மத்திய அரசை இயக்குகின்ற, தலைமை தாங்குகின்ற காங்கிரசோடு எப்படியாவது தன்னுடைய தேர்தல் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிறது - தவிக்கிறது - தவமிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தமது சுயநலனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அளவில் காங்கிரசோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. இது ஒரு பக்கம்தான்.

அதேநேரம் உலகத் தமிழர்களின் உரத்துக் குரல் கொடுக்கும் வைகோ. சென்னைக்கு பிராணப் முகர்ஜி வந்தபோது கறுப்புக் கொடி காட்டி சிறை சென்று வெளியே வந்திருக்கிறார், உலகத் தமிழர்களுக்காக ஓங்கிக்குரல் கொடுக்கிறார்,

ஈழத் தழிழர்களுக்காக அவர் மிகப் பெரிய அளவுக்கு போராடுகிறார்,

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காக தான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் என்று கூறுகிறார். அவரது தமிழின உணர்வு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதேநேரத்தில் முழுக்க முழுக்க தமிழின உணர்வு அற்றவராகவும் தமிழினத்திற்கு விரோதியாகவும், ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதில் ராஜபக்ச அரசுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுப்பவராகவும் இருக்கின்ற ஜெயலலிதாவின் பக்கமாக போய் நின்று குறைந்தது ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்று அதில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வைகோ மேற்கொள்ளும் அரசியல் சமரசம் இருக்கிறதே அது மிகவும் பரிதாபகரமானது - வருந்தத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் இராமதாஸ் காலையில் இருந்து மாலை வரை ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் - குரல் கொடுக்கிறார். ஆனால் இன்றைக்கும் அவரது பிள்ளை மத்திய அரசில் தான் இடம்பெற்றிருக்கிறார். காங்கிரசிலிருந்து அவர் வெளியே வரவில்லை. அவரின் கட்சி மீண்டும் காங்கிரசோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் கூட்டணி அமைக்க மறைமுகமாகப் பேச்சு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் அணி திருமாவளவன் தலைமையில் இயங்குகிறது. பிரபாகரனை 1980 தொடங்கி நான் நேசிப்பவன், பிரபாகரனின் அன்புக்குரியன் என்று சொல்கின்ற திருமாவளவன் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி? காங்கிரசுடன் சேர்ந்துதானே கூட்டணி. திருமாவளவனை சிறைக்குள் தள்ள வேண்டுமென காங்கிரஸ் கூறுகிறது, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனினும் அவரை கைது செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் தனக்கு பலம் கிடைக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். எனவே ஒரு பக்கத்தில் விடுத்தலைச் சிறுத்தைகளுக்கும் இன்னொரு பக்கத்தில் சோனியா காந்திக்கும் பாலமாக கருணாநிதி இருக்கின்றார்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியைப் பெற்று அதில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக சோனியா காந்தியின் உறவை திருமாவளவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது எனில் –

தமிழ்நாட்டில் நெடுமாறன் என்கிற ஒரு மனிதனைத் தவிர ஈழத்தமிழர்களுக்காக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு பாடுபடுகிற ஒருதலைவர் இந்த தமிழ்நாட்டில் இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறிவைக்கிறேன். காரணம் நெடுமாறனுக்கு அரசியல் நிர்ப்பந்தம் இல்லை.

அரசியல் கடந்து நிற்கக்கூடிய அத்தனை பேரும் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறார்கள். ஆனால் அரசியல் அரங்கத்திற்குள்ளே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு தங்களது அரசியல் நாடாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ரணப்படுத்துகிற கசப்பான உண்மை.


தாயகத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் இந்த நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தமிழக மக்களா அல்லது அரசியல் தலைவர்களா?

இன்றல்ல என்றுமே ஆதரவாக இருப்பவர்கள் மக்கள்தான். ஆனால் மக்களைக் குழப்புகின்ற வேலையைச் செய்துகொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.

ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர், ஆனந்த விகடன் மற்றும் மேடைப் பேச்சுகளில் நான் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் - ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க வேண்டுமென நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால், தமிழகத்து மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினால், எல்லாக் கட்சி தலைவர்களும் கட்சி மாற்றங்களை மீறி, கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழின உணர்வொடு ஒரே குரலாக நீங்கள் முழங்குங்கள் - ஓரணியில் நில்லுங்கள்.

காங்கிரஸ் என்பது இன உறுதிப்பற்றற்ற சுயநலவாதிகளின் கூடாரமாக தமிழகத்தில் தன்னிலை தாழ்ந்து விட்டது என்பதை நாற்பதாண்டு காலம் தமிழகத்து அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் காலம் தொட்டு இன்றுவரை காந்திய வழியில் நெறி சார்ந்து - நேர்மை தவறாது - நேர்கோடாய் நடந்த நான் அந்த கட்சியின் மூலமாக இனிமேல் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த்தெடுக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையிலேதான் அந்த கட்சியை விட்டே வெளியே வந்திருக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்த வரை என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதா இன உணர்வு அற்ற ஒரு பெண்மணி. ஜெயலலிதாவின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் உருவாக்கிவிட முடியாது. அதேநேரம் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி என்பது கடந்த மூன்றாண்டு காலமாக ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாக எல்லா வகையிலும் துணைநின்று இன்று எனது தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படுகிற இழி நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

எனவே, அந்த காங்கிரஸ் அது யாரோடு கைகோர்த்து வந்து நின்றாலும் நாற்பது தொகுதிகளிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது.

அந்த வாக்களர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமெனில் சூழ்நிலையில் தெளிவிருக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கட்டும். கருணாநிதிக்கு நான் அதையே மீண்டும் மீண்டும் கூறினேன்.

காங்கிரசை கைகழுவி விடுங்கள் என்றேன். நீங்கள் கைகழுவி விட்டால் காங்கிரஸ் அடுத்த கணமே ஜெயலலிதாவிடம் போய் நிற்கும். ஜெயலலிதாவும் காங்கிரசும் சேர்ந்து தமிழின விரோதக் கூட்டணியை உருவாக்குவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருக்கும் இடதுசாரி இயக்கங்கள் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகப் பக்கமாக வருவார்கள்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என்று மிக வலிமையான கூட்டணி அமைக்க முடியும். அரசியலுக்கு பின்னாலுள்ள தமிழின உணர்வாளர் அமைப்புக்கள் அனைத்தும் இந்த கூட்டணிக்கு பின்னாலே நிற்கும். எனவே மிகப்பெரிய கூட்டணியை இது உருவாக்க முடியும். இது தமிழின உணர்வை வெளிப்படுத்துகின்ற கூட்டணியாக இருக்கும்.

காங்கிரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழின எதிர்ப்பு கூட்டணியாக இருக்கின்ற போது வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டோடு வரும் வாக்காளனுக்கும் ஒருதெளிவு இருக்கும். இது தமிழினத்தின் நலன் காக்கும் கூட்டணி, இது தமிழினத்தை வேரறுக்கும் கூட்டணி என்ற தெளிவான சிந்தனையோடு அவன் வாக்களிப்பான்.

ஆனால் இன்றுள்ள சூழ்நிலை எப்படி? கலைஞர் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். வைகோ ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத்திற்காக கண்ணீர் வடிக்கின்றார். இராமதாஸ் ஜெயலலிதாவுடன் போவதா, கலைஞருடன் போவதா என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கலைஞரைக் கைவிடுவதாக இல்லை.

ஈழத் தமிழர்களை பற்றி பேசும் இவர்களே இப்படி அணி பிரிந்து நின்றால் இதில் எந்த அணி ஈழத் தமிழர்களுக்காக உண்மையாக இருக்கும் அணி என்று மக்களுக்கு தெளிவு வரும்? யாருக்கு வாக்களிப்பது என்று அவர்கள் எந்த நிலையில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்?

மக்கள் இங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழீழம் கிடைப்பதுதான் தீர்வு என்றால் அந்த தீர்வும் உருவாகட்டும் என்று இங்கிருப்பவர்கள் வேள்வி நடத்துகிறார்கள். ஆனால் இன்று அந்த வேள்வித் தீயை அணைப்பதிலும் அழிப்பதிலும் அவரவர் கட்சி நலன் கருதி - அவரவர் சொந்த நலன்கருதி - அவரவர் பதவிகளுக்காக - அவரவர் சுகங்களுக்காக இன்று அரசியலையும் குழப்பி, அதன் ஆரோக்கியத்தையும் கெடுத்து, இன உணர்வை அழித்து ஒட்டுமொத்தமாக மக்களிடையே இன விரோதிகளாக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.

அரசியல் சாணக்கியன் என்று கருதப்படும் முதல்வர் கருணாநிதி எதற்காக இப்படியான ஒரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு பின்நிற்கிறார்?

"ஒரு இராஜதந்திரி தன்னுடைய அதிகபட்ச இராஜதந்திரத்தாலேயே அழிந்து விடுகிறான்." கலைஞரும் தமிழ் மக்களை மனதில் நிறுத்தினால் இந்த கூட்ணியை உருவாக்குவதற்கு அவர் முனையலாம். ஆனால், கலைஞருக்கு வைகோவின் மீது கோபம். வைகோவுக்கு கலைஞரின் மீது கோபம். வைகோவுடன் இருக்கும் கோபத்தை தணித்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் கலைஞர் வைகோவுடன் கரம் கோர்த்து நிற்க தயாராக இருப்பார். அது எனக்கு தெரிந்த விடயம்.

ஆனால் கலைஞர் போடும் கணக்கு என்னவெனில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லாமல் போனாலும் ஓட்டுமொத்த இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்தது போல வெற்றியைப் பெறத் தவறியதால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமென்று கலைஞர் கணக்குப் போடுகிறார்.

எனவே காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியிலே கூட்டணி அரசு வருமானால் அந்த கூட்டணியில் தன்னுடைய அரசும் வரவேண்டுமென கலைஞர் விரும்புகிறார். மீண்டும் ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தனது குடும்ப நலனிற்கும் கட்சி நலனிற்கும் உகந்ததாக இருக்கும் என்பது கலைஞருடைய கணிப்பு.

இதற்கு மாறாகு அவர் கணக்கு போட்டு தமிழகத்தில் அவர் வெற்றிபெற்றாலும் கூட ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் அடுத்த நிமிடமே கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியை திரும்ப பெற்றுக்கொண்டால் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அதனை மறுக்க முடியாது.

அத்துடன், கலைஞரின் குடும்பத்திற்கு ஓராயிரம் தொல்லைகள் ஜெயலலிதாவின் மூலமாக உருவாகக் கூடும். எனவே ஜெயலலிதா எந்த சந்தர்ப்பத்திலும் சோனியா காந்தியின் பக்கத்தில் போய் நின்றுவிடக் கூடாது என்றே கலைஞர் நினைக்கிறார். ஜெயலலிதாவின் சக்தி இந்திய அரசியலிலே வலுப்பெற்றுவிடக்கூடாது, மத்திய அரசில் ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுவிடக் கூடாது, எனவே கலைஞரின் எல்லா கவலைகளும் போயஸ் தோட்டத்தை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் எல்லா பார்வைகளும் கோபாலபுரத்தை சுற்றித்தான் இருக்கிறது. எனவே கலைஞர் ஜெயலலிதாவை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதாவும் கலைஞரை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தமிழகத்தின் விதி மட்டும் நிர்ணயிக்கப்படும் சூழல் இருக்குமானால் சாணக்கியராக இருக்கும் கலைஞருக்கு தெரியாமல் இல்லை. கலைஞர் நிச்சயமாக இப்படியான வலுவான கூட்டணியை அமைப்பார், தமிழினத்திற்காக குரல் கொடுப்பார், "வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்" என்று சொல்வார். இருப்பது ஒரு உயிர் அது போகப் போவதும் ஒரு முறைதான் என்று மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை வெவ்வேறு இராகங்களில் பாடுவார், உணர்சியை தூண்டுவார், வெற்றிக் கனியை சுவைப்பார். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த கூட்டணியில் நின்று தான் விலகி நின்றது பிழையாகிவிடுமே என்ற அச்சம்தான் அவரை காங்கிரசில் இருந்து வெளியேவராது பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துலகத்தில் இருந்து தமக்கு சார்பான ஒரு ஆதரவு நிலை வருமென்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் அந்த எதிர்பார்ப்பு தவறானதா?

அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. காரணம் அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு. எனவே இந்த தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் தமது அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுத்தால் –

அந்த மத்திய அரசு முன்னின்று முனைப்பாக உலக நாடுகளின் கருத்துக்களை எல்லாம் திரட்டி, ராஜபக்ச அரசுக்கு எதிராக அணிவகுக்கச் செய்தால் –

நிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்கும். அந்த நம்பிக்கை பிழை இல்லை. அது மிகச் சரியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிறைவேற வேண்டும் என்றால் இந்திய அரசு உடனடியாக காரியமாற்ற வேண்டும். இந்திய அரசு காரியமாற்ற வேண்டுமெனில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இருந்து தெரிவு செய்யப்படும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சிகளை மறந்துவிட்டு ஈழத் தமிழர் குறித்த நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும். இவ்வளவும்தான். இதில் ஒரு இரகசியமும் இல்லை.

எனவே இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இனநலன் சார்ந்து தெரிவு செய்வதற்கு தமிழகத் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கூட்டணிக் குழப்பங்களில் இவர்கள் மாறிமாறி முகம் காட்டினால் யாரை பார்த்து எப்படி வாக்களிப்பது?

எனவே தேர்தல் வரட்டும். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் தெளிவாகச் சொல்கிறேன் தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீத மக்கள் தேர்தலுக்கு பின்னாலும் ஈழத் தமிழர்களின் இன்னலை துடைப்பதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்தும் போராடுவார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஈழத்திற்கு உறுதுணையாக நிற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கும். அந்த நம்பிக்கையோடு இருக்கலாம் நீங்கள். புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் எனது தமிழினச் சகோதரர்களே என் இன மக்களே! உங்களை தமிழன் ஒருபோதும் கைவிட மாட்டான். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். இங்குள்ள அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பாதீர்கள். ஆனால் அரசியலுக்கு அப்பால் இந்த இனம் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களை ஆதரிக்ககூடிய சூழல் நிச்சயம் விரைவில் வரும்.


ஈழத் தமிழர்கள் தங்களுக்காக இந்த அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கலைஞர் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் அன்பு கூர்ந்து அவரிடம் "அய்யா நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுங்கள்" என்று கூறினேன். நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினால் தேசிய அளவில் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும். அப்போதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு விரைவாக காரியமாற்றும் என்று கூறினேன்.

மகுடங்கள் என்பவை இடம் மாறக்கூடியவை. இன்று ஒரு தலையில் இருக்கக்கூடிய மகுடம் நாளை இன்னொருவர் தலைக்கு தானாக இடம் மாறலாம். ஆனால் புகழ் மகுடம் ஒன்றை ஒருவன் உருவாக்கிக்கொண்டால் அது என்றும் அவனையே அலங்கரிக்கும்.

எனவே இடம்மாறக்கூடிய மகுடங்களைக் பற்றி கவலைப்படாது தமிழினத் தலைவர் என்ற புகழ் மகுடம் உங்கள் தலையில் என்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களது முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள் என்று அவரிடம் தொலைபேசியில் கூறினேன்.

அதன் பின்னர் கலைஞர், வைகோ, திருமாவளவன், இராமதாஸ் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து தமிழர் நலனுக்காவது நீங்கள் ஓரணியாக நின்று ஒன்றுபட வேண்டுமென்று சொல்வதற்கு முயன்றேன். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. காங்கிரசை நோக்கி திராவிட முன்னேற்ற கழகம் சென்று விட்டது. ஜெயலலிதாவை நோக்கி வைகோ சென்றுவிட்டார். இனிமேல் இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் தனியாளாகச் சென்று என்னுடைய கருத்துக்களை சொல்லி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் அரசியல் சார்ந்து சிந்திக்காமல் இந்த அரசியல் வாதிகளின் முகமூடிகளைக் கழற்றி அவர்களின் சுயமுகங்களைப் பார்த்து அவர்களிடம் இருந்து விலகி நின்று ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல்கொடுக்க நீங்கள் அத்தனை பேரும் இணைய வேண்டும் என்று நான் முனைப்பளவில் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னளவில் என்னால் இதனைத்தான் செய்ய முடியும்.

இராமன் சேது மண்டலம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு அணில் மணல் சுமந்தது. அணில் சுமக்கின்ற மணலில் பாலமாகி விடாது என்பது அணிலுக்கு தெரியும். ஆனாலும் அதன் பங்களிப்பை அதன் மனச்சான்றுக்கு மாறில்லாமல் அது செய்தது போல் நான் செய்து கொண்டிருக்கிறேன் - என்று அந்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

நன்றி: புதினம்.காம்

Wednesday, March 4, 2009

இலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குறித்து கவலைப்பட மாட்டேன்: திருமாவளவன்

இலங்கை தமிழர் பிரச்சினையே முக்கியம், நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக மக்களை தட்டி எழுப்பும் வகையில் நாம் தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயண நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடக்கின்றது.

மாவட்டச் செயலர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் த.பார்வேந்தன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன், சோகன்பிரபு, கராத்தே பாண்டியன், முன்னிலை வகித்தனர்.

மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சி.இ. சத்யா, மாவட்டச் செயலர் பாலவாக்கம் சோமு, பாமக எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கே.ஆறுமுகம், ஒன்றியக் குழுத் தலைவர் பரந்தூர் சங்கர், பாசறை செல்வராஜ், மக்கள் மன்றம் மகேசு, இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன் வாழ்த்திப் பேசினர்.

திருமாவளவன் பங்கேற்று பேசியது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கள் நடந்தன. மேலும் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் போராடி வருகிறோம்.

இலங்கை தமிழர் பிரச்சினையின் தீவிரத்தை சாதாரண பொதுமக்கள், பாமர மக்களை உணரச் செய்யும் வகையில் நாம்தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 800 குழுக்கள் இதில் கலந்து கொள்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 8 நகரங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை தான் எனக்கு முக்கியமே தவிர, நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன்.

மத்தியில் காபந்து அரசு இருந்தாலும், அதிகாரிகள் மனது வைத்தால் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியும் என்றார் திருமாவளவன்.

வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயணத்தை பாவலர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். 20 கி.மீ. தூரம் வெங்குடி, ராஜாம்பேட்டை, கருக்குப்பேட்டை, ஐயம்பேட்டை வழியாக காஞ்சிபுரத்தில் நடைப்பயணம் முடிவடைகிறது.

மாலையில் வணிகர் வீதியில் பொதுக் கூட்டம் நடக்கிறது.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காஞ்சிபுரத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் நடைப்பயணம் நிறைவடைகிறது.

நன்றி: தமிழ்வின்.காம்