Thursday, June 26, 2008

தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் உலகின் பிற பகுதிகளிலாவது பல்கிப் பெருகட்டும்

மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம் வகுப்பை தமிழ் வழியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி வருத்தமளிக்கிறது.

மும்பை பெருநகரில் தமிழர்கள் அதிகம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலிருந்தும்-படித்தவர், படிக்காதவர் இரு தரப்பிலும்- குறைந்தது ஒரு குடும்பம் அங்கே வாழ்கிறது. இவர்களில் வணிகம் செய்வோர், அலுவலகங்களில் பல நிலைகளில் வேலை பார்ப்போர் நீங்கலாக, பெரும்பகுதியினர் அன்றாட உழைப்பில் பிழைப்போர்.

தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என்ற கற்பிதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழர் மட்டுமே வாழும் இடங்கள் அங்கு உண்டு. நிறையச் சம்பாதிக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். ஆனால் ஏழைத் தமிழ்க் குழந்தைகள் படிக்க வாய்ப்புள்ள ஒரே இடம் மும்பை மாநகராட்சிப் பள்ளிகள். இவர்களுக்காக 48 தமிழ் வழிப் பள்ளிகள் உள்ளன. 15,000 குழந்தைகள் படிக்கின்றனர்.

எட்டாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் குஜராத்தி, கன்னட மொழிகளில் தேர்வு எழுத அனுமதி உள்ளபோது, தமிழுக்கு மட்டும் அனுமதியில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்குச் சென்ற இடமெல்லாம்... எதிர்ப்பு!

போதுமான ஆசிரியர், பாடப்புத்தகம் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகக் கல்வி அலுவலர் சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லை. தற்போது மும்பை மாநகராட்சியில் பயிலும் குழந்தைகள், செலவு மிகுந்த ஆங்கில வழிக் கல்விக்கு மாற முடியாது. அடிப்படையில் அவர்கள் ஏழைகள். தற்போது படிப்பை தமிழ் வழியில் தொடர முடியாத சுமார் 800 குழந்தைகளுக்கு உதவிட தமிழக அரசு எந்த வகையிலாவது முயற்சிக்க வேண்டும்.

மத்திய ஆட்சியில் தொடர திமுகவின் ஆதரவை நம்பி இருக்கும் காங்கிரஸ் கட்சி மராட்டியத்தில் ஆட்சியில் இருப்பதால், தமிழக முதல்வரின் கோரிக்கையை நிச்சயம் தட்ட முடியாது.

மும்பைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள இன்னல், தொழில் காரணமாக மாநிலம் கடந்து, நாடு கடந்து செல்லும் தமிழர் அனைவருக்கும் உள்ளது. தமிழை மறக்காமல் இருக்கும் தமிழனைத் தமிழகம் மறந்துவிடுவது தொடர்கதையாக உள்ளது.

ஆங்கிலம் கற்க விரும்பும் அயல்மொழி மாணவர்களுக்காக இங்கிலாந்து அரசு வெளியிடும் இலக்கண நூல்கள், மொழிப் பயிற்சி நூல்கள் நிறைய. அதேபோன்று பிரஞ்சு மொழி, கலாசாரம், நுண்கலையை வளர்த்தெடுக்க தனிஅமைப்பு உள்ளது. அவர்கள் உண்மையாகவே அதற்காகப் பாடுபடுகிறார்கள். தங்கள் மொழியைக் கற்கும் அயல்மொழியினருக்காக எளிய கற்பித்தல் முறை, கற்றல் கருவிகள் அனைத்தையும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றியுள்ளனர்.

ஆனால் நமக்கோ, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் வம்சாவளியினருக்கும் தமிழைச் சொல்லித் தரவே வழியில்லை. இதன் விளைவாக, வெளிமாநிலம், வெளிநாடு வாழ் தமிழனின் குழந்தைகள் தமிழை மறக்கின்றனர். தென்ஆப்பிரிக்காவிலும், மொரீஷியஸிலும் தமிழ் வம்சாவளியினர் தேவாரம், திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் எழுதி, பிழையான தமிழ் உச்சரிப்புடன் பாடி வரும் அவலம் இதற்கு ஒரு சான்று.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்தம் குழந்தைகள் தடையின்றித் தமிழ் பயில, முடிந்தால் தமிழ் வழியில் பயில, ஆதரவான சூழலை, கற்றலுக்கான தொழில்நுட்ப வசதிகளை தமிழக அரசுதான் உருவாக்க வேண்டும்.

தமிழர் தூங்கும் பின்னிரவில் திரைப்பாடல்களை, திரைப்படங்களை ஒளிபரப்பும் ஊடகங்கள், அந்நேரத்தில் விழித்திருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழ்மொழிப் பயிற்சி வகுப்புகளை ஒளிபரப்ப தமிழக அரசு நிபந்தனை விதிக்கலாம். இதனால் உறுதியாக ஒரு நன்மை உண்டு- ஆங்கிலம் கலவாத தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் உலகின் பிற பகுதிகளிலாவது பல்கிப் பெருகும்.
நன்றி: தினமணி

Wednesday, June 25, 2008

அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார்-பழ.நெடுமாறன்

1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.

1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார்.

ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா - கருணாநிதி கூட்டு உருவானது.

ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க "சர்க்காரியா கமிஷனை' இந்திரா அமைத்தார்.

1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.

1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.

ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். ""நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'' என முழங்கினார்.

1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.

1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது.
1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.
1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது.
2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.

மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன.

1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள்.
1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது.
1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது.
1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.

தில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன.

ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.

நன்றி: தினமணி

தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை-பழ.நெடுமாறன்

அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.

பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை.

தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.

நன்றி: தினமணி

Saturday, June 7, 2008

சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழக அரசு விருது! தமிழக அரசு "டாஸ்மார்க்கில் சரக்கு வித்து பணத்தை சேர்ப்பது இதற்குத்தானா?”

சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழக அரசு விருது! தமிழக அரசு "டாஸ்மார்க்கில் சரக்கு வித்து பணத்தை சேர்ப்பது இதற்குத்தானா?”

கடந்த 2006-ஆம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

விருதிற்கான சின்னத்திரை தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து, விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், இராஜசேகர், செய்தித்துறை செயலாள, இயக்குநர், துணை இயக்குநர் என அரசு குழு அமைத்து விருதிற்குரியவர்களை தேர்ந்தெடுத்தது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 (1 பவுன் தங்கம் சுமார் ரூ.10,000 5 பவுன் ரூ.50,000 ஆன அறிவிக்கப்பட்ட 17 கலைஞர்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.8,50,000) பவுனில் தங்கப் பதக்கமும் நினைவுப் பரிசும் நாள் குறித்தப்பின் தமிழக முதல்வர் வழங்குவார் என அரசு அறிவித்துள்ளது. மிகக் மகிழ்ச்சி...

எங்களைப்போன்ற சாதாரண அறிவு படைத்த மக்களுக்கு கீழ்கண்ட சில ஐயங்கள் எழுகின்றன.

பகுதி-1

1. சின்னத்திரை தொடர்களால் தமிழ்நாட்டில் என்னென்ன நன்மைகள் நிகழ்ந்தன?
2. சின்னத்திரை கலைஞர்களின் சமூக பங்களிப்பு என்ன?
3. சின்னத்திரை என்றால் தொடர்கள் மட்டும்தானா? மற்ற நிகழ்ச்சிகளை கணக்கில் எடுத்துகொள்ளாதது ஏன்?
4. தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
5. 2006-ஆம் ஆண்டு சின்னத்திரை தொடர்களுக்கு 2008-ஆம் ஆண்டு பரிசு வழங்க வேண்டிய அவசிய தேவை என்ன?

பகுதி-2
1. நடுவர் குழுவினர் அனைவரும் 2006-ஆம் ஆண்டு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் தவறாமல் பார்த்தார்களா? அல்லது குறுவட்டின் மூலம் நாள்கணக்கில் ஒன்றாக அமர்ந்து பார்த்தார்களா? அல்லது 2006-ஆம் ஆண்டு தொடங்கிய தொடர்களை பார்த்து முடிக்க 2008 சூன் மாதம் வரை ஆனதா?

2. நடுவர் குழுவில் உள்ள நீதிபதி மருதமுத்து அனைத்து தொடர்களையும் பார்த்தாரா? பார்த்தார் என்றால் எப்போது பார்த்தார்? நீதிமன்றத்திற்கு அவர் எப்போது சென்றார்?

3. நடுவர் குழுவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிகள் என்ன?

இந்த ஐயத்தைப் போக்க சின்னத்திரை அறிஞர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் முயன்றால் மகிழ்ச்சி. ஆனால் அவர்களுக்கு நேரம் இருக்காது 2007-ஆம் ஆண்டு விருதிற்காக தொடர்களை இப்போதே பார்க்கத் தொடங்கினால்தான் 2009-ஆம் ஆண்டு அவர்களுக்கு விருது வழங்க முடியும்.

தமிழக அரசு தமிழர்களுக்கான அரசாக மாறுவது எப்போது?

Friday, June 6, 2008

புலிகளுக்கு எதிராக இந்தியா! பகத்சிங்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு

இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர்.

யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு அவரது தந்தை வர மறுத்துவிட்டார். 'அங்கீகரிக்கப்படாமலே போய்விட்ட பெரும் தியாகங்களை புரிந்தவர் களுக்கு எதிராக தன் மகன் போரிட்டதற்காக கெளரவிக்கப் படுவதை என் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்கிறார் அவர்.பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர்கள் இந்திய விடுதலை வீரர்கள் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீடுகளில் இந்திய விடுதலை வீரர்களின் படங்கள் மாட்டப் பட்டிருக்கும்.

கர்னல் கிட்டுவின் தந்தை ஒரு காந்தியவாதி. தன் மூத்த மகனுக்கு காந்தி என்றே பெயரிட்டார். அவர் வீட்டில் காந்தி, நேரு, திலகர் ஆகிய இந்திய தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கிட்டு தன் பங்கிற்கு பகத்சிங்கின் படத்தையும் மாட்டினார்.தளபதி பண்டிதரின் வீட்டில் பகத்சிங், நேதாஜி ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1980களில் 'சண்டே' ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், தன்னை மிகவும் கவர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் பகத்சிங்கை முதன்மைப் படுத்தி கூறியிருந்தார். அத்தோடு நேதாஜியையும் குறிப்பிட்டிருந்தார்.

இன்றளவிலும் பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' போன்ற விடுதலைப் பாடல்கள் ஈழத்தில் பாடப்படுகின்றன. பழ. நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் செய்த முதல் சுற்றுப்பயணத்தின் ஒளிப்படத்திற்கு பிரபாகரன் 'சுதந்திர தாகம்' என்றே பெயரிட்டார். இந்த குறிப்பிட்ட பாடலின் அடிப்படையிலேயே 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற முழக்கம் அமைக்கப்பட்டது.

இந்த அளவிற்கு இந்திய விடுதலை வீரர்களை நேசித்த, தங்களவர்களாக நினைத்த ஈழத்தமிழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் தான் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிலும் "உலகில் எந்த மூலையில் சுதந்திரப் போராட்டம் நடந்தாலும் அதனை ஆதரிப்பதே எங்கள் வெளியுறவுக் கொள்கை" என பிரதமராக தனது முதல் உரையிலேயே அறிவித்த ஜவகர்லால் நேருவின் பேரன் இராஜீவ் காந்தியின் காலத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது மிகக் கொடுமையானது.

விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும், மானுட விடுதலையை வேண்டும் ஒவ்வொருவரும், உலகில் எங்கு விடுதலைப் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவாகவே நிற்பார்கள் என்பதற்கு பகத்சிங்கின் குடும்பத்தினரே சான்று.

நன்றி: தென்செய்தி