Showing posts with label மனித உரிமை. Show all posts
Showing posts with label மனித உரிமை. Show all posts

Monday, December 28, 2009

தமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை?

தஞ்சாவூரில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் உலகத் தமிழர் பேரமை‌ப்பு நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை, அவர் வந்திறங்கிய திருச்சி விமான நிலையத்திலேயே தடுத்தி நிறுத்தி, அவர் எங்கிருந்து வந்தாரோ அதே நகருக்கு மீண்டும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர் நமது நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள்.

உரிய பயண ஆவணங்களுடன் வந்த சிவாஜிலிங்கத்தை எதற்காக நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பதை தெரிவிக்காமலேயே குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்றி மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிற்கும் வரும் அன்னிய நாட்டினரை அவர்கள் முறையான பயண ஆவணங்களுடன் வந்துள்ளனரா என்பதை சோதித்து அனுமதிக்கும் பொறுப்பு குடியேற்றத் துறைக்கு உண்டு. அவ்வாறு வருபவர்கள், வந்திறங்கும் அந்த நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பாதுகாப்புத் தொடர்பான வேறு காரணங்களுக்காகவே குடியேற்றத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுவதும், அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டப் பூர்வமான நடவடிக்கையே.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், முறையான பயண ஆவணங்களுடன் (விசா) வந்திருந்தாலும், என்ன காரணத்திற்காக நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வாய்மொழியாக மட்டுமின்றி, எழுத்துப் பூர்வமாகவே தெரிவிக்க வேண்டும். வந்திறங்கிய பயணிக்கு தான் என்ன காரணத்தி்ற்காக திருப்பி அனுப்பப்படுகிறோம் என்பது சட்டப் பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையே.

ஏனெனில், நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத அந்தப் பயணி, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதுவாரானால், அவர் தனது நாட்டிற்குச் சென்று சட்ட ரீதியாக நியாயம் பெற அந்த எழுத்துப்பூர்வமான விளக்கம் அவசியமானதாகும்.

ஆனால், இலங்கையின் .நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கைத் தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுள் ஒருவர் போன்ற தகுதிகள் மட்டுமின்றி, அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் சிவாஜிலிங்கம். இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட ஒரு அண்டை நாட்டின் அரசியல் தலைவரை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தது மட்டுமின்றி, அவரை நாடு கடத்த என்ன காரணம் என்பதை அங்கிருந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்கவில்லை!

தான் புறப்பட்ட துபாய்க்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட சிவாஜிலிங்கம், கொழும்பு வந்தடைந்தபோது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தும், இந்தியா வருவதற்கான விசா பெற்றிருந்தும், தன்னை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காதது தனக்கு எந்த விதத்திலும் அவமானமில்லை, அது இந்தியாவிற்குத்தான் அவமானம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல தான் எப்படி நடத்தப்பட்டேன் என்பதையும் சிவாஜிலிங்கம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. “விமான நிலையத்தை சென்றடைந்த எனக்கு அங்கு தண்ணீர் அருந்துவதற்கோ கழிவறையை பயன்படுத்துவதற்கோ கூட அனுமதி தரப்படவில்லை. தொலைபேசியல் எவரையும் அழைக்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. ஒருநாட்டின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளன் நான். இவை எல்லாவற்றையும் விளக்கமளித்துக்கூட என்னை அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

தண்ணீர் குடிப்பதற்கும், கழிவறை செல்வதற்கும் கூட அனுமதியளிக்காததன் காரணமென்ன? இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் உலகில் எங்காவது நடந்துள்ளதா? தொலைபேசியில் கூட எவருடனும் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஒரு நாட்டிற்குள் வரும் (அந்நாட்டின்) அழையா விருந்தாளியாக இருந்தாலும், அவருடைய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட அனுமதி மறுப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது?

எந்தக் காரணமும் சொல்லாமல் அன்னிய நாட்டவர் ஒருவரை - அதுவும் அவர் தமிழராக இருந்தால் - காரணம் கூறாமல் வெளியேற்றும் ‘சட்டப் பூர்வமான’ அதிகாரம் கொண்டது இந்தியாவின் குடியேற்றத் துறை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய வானளவிய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ள உரிமை படைத்த குடியேற்றத் துறையும், நாட்டை காக்க கண் துஞ்சாமல் பாதுகாத்துவரும் உள்துறை அமைச்சகத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள ‘காரணமின்றி வெளியேற்றும் அதிகாரம்’ இந்த ஜனநாயக நாட்டில் கேள்விக்குட்படுத்த முடியாதது என்பதும் விவரம் தெரிந்த அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் முறையான பயண ஆவணத்துடன் (விசா) வந்தவரை திருப்பி அனுப்புகிறீர்கள் என்றால் அதற்கான காரணத்தை அளிப்பதில் என்ன சிக்கல்? ஏன் தயக்கம்? சட்டப் பூர்வமான காரணம் இல்லை என்பதனாலா? அல்லது குடியேற்றத் துறையின் நடவடிக்கையின் பின்னால் உள்ள அரசியலா? என்ன காரணம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்கிட வேண்டும்.


ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

இப்படிப்பட்ட அநீதிகள் ஈழத் தமிழர்களுக்குத்தான் அதிகம் இழைக்கப்படுகிறது. இது அனுபவப்பூர்வமாக நாமறிந்த உண்மை. சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த ஈழத் தமிழர் ஒருவரை - அவர் முறையான விசா பெற்று வந்த நிலையில் - ஒரு நாளெல்லாம் தடுத்து நிறுத்தி வைத்து - 16 மணி நேரத்திற்குப் பிறகு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார் சென்னை மீனம்பாக்கத்தில் பணியாற்றிய குடியேற்றத் துறை அதிகாரி.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் (அகதியாக) இந்தியா வந்திருந்தபோது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக அவர் தங்கியிருந்தார் என்றும், அதற்கான விதிப்படி இன்னும் ஓராண்டிற்கு அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் அந்தக் குடியேற்றத் துறை அதிகாரி கூற, அதற்கு பதிலளித்த ஈழத் தமிழர், தான் இப்பிரச்சனையை உள் துறை அமைச்சகத்திற்கு விளக்கி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, அதனடிப்படையிலேயே விசாவிற்கு விண்ணப்பித்து அதனைப் பெற்று வந்துள்ளதாகவும் விளக்கியுள்ளார். ஆனால் அந்தக் குடியேற்ற அதிகாரியோ, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் விதிப்படிதான் நடந்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள் என்று அந்தப் பயணி கேட்டதற்கு, அவ்வாறு எதையும் அளிக்க மறுத்த அந்த அதிகாரி, இரவு 11 மணி வரை இருந்து, அந்தத் தமிழரையும் அவருடைய குடும்பத்தினரையும் மீண்டும் விமானத்தில் ஏற்றிய பின்னர் - மிகுந்த கடமையுணர்வோடு - தனது பணியை முடித்துக் கொண்டு சென்றுள்ளார்!

இதுகுறித்து விசாரித்துபோது, இப்படி பல ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்ற விவரங்கள் தெரிந்தது. ஏன்? தமிழர்களுக்கு எதிராக மட்டும் இப்படிப்பட்ட முறையற்ற அணுகுமுறை எதனால் கடைபிடிக்கப்படுகிறது? இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசின் இன அழித்தலில் இருந்து தப்பித்து, ஆறரைக் கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் தங்கள் தாய் மண் என்று உலகத் தமிழர்கள் கருதும் தங்கள் தொப்புள் கொடி உறவுகளோடு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை மேற்கொள்ள வந்த ஈழத் தமிழர்களை - இந்தியாவின் குடியேற்றத் துறை அவமானத்திற்குட்படுத்துவது ஏன்? மத்திய உள்துறை அமைச்சகம் விளக்க வேண்டும்.

பன்னாடுச் சட்டங்களுக்கு இணங்க - அவர்கள் அகதிகளானாலும் அனைத்து மனித உரிமைகளுடனும் வாழ, பயணிக்க ஈழத் தமிழர்களுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமைகளை தங்களுக்கு (நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறை தவறிப் பயன்படுத்தி தமிழர்களையும், அவர்தம் தலைவர்களையும் அவமதிப்பதையும், குடியேற்றச் சட்டத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதையும் மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் சட்டப் பூர்வமான அதிகாரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அந்ந நாட்டில் நிலவும் ஜனநாயகத்திற்கு ஒரு அளவுகோல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

Friday, December 19, 2008

புதுச்சேரியில் சட்டத்தை வன்புணர்ச்சி செய்யும் சட்டத்தின் காவலர்கள்

“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” என்று ஆட்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மக்களும் நம்புகிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத்தான் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சட்டத்தை உருவாக்கும் பணியையும் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் அதை நடைமுறைப்படுத்தும் பணியையும் நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே தொடர்புடையவர்கள் உறுமொழி ஏற்றுக்கொண்டு பணியாற்றுகிறார்கள். ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப இவர்கள் நடந்துகொள்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க; மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை கேளிக்கூத்தாக்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வலைத்து நெளித்து தன்னலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது நாட்டுமக்கள் அனைவரும் அறிந்ததே.

இத்தகைய இழிச்செயல்களை மிஞ்சும் வகையில் புதுச்சேரி காவல்துறையினர் நேற்று ஒரு செயலைச் செய்தனர். இச்செயல் “சட்டத்தின் மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சி” என்று குறிப்பிடுவது மிக்கச் சரியாக இருக்கும்.








புதுச்சேரியைச் சேர்ந்த இரமேசு என்பவர், புதுச்சேரி காவலர்கள் தன்னிடம் கையூட்டு கேட்பதாக கொடுத்த புகார் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துணை ஆய்வாளர் சறீதர், வழக்கறிஞர் அம்பலவாணன் ஆகியோரை நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் பொறிவைத்து கையும் களவுமாக வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேர்நிறுத்துமாறு நீதிபதி ஆணையிட்டார். இதன் பேரில் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்யப்பட்ட இருவரையும் நேர்நிறுத்தினர். அப்போது வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர். தலைமை நீதிபதி கிருட்டிணராசா, வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு பிணை வழங்கினார். ஆனால் துணை ஆய்வாளர் சறீதருக்கு பிணை வழங்கவில்லை.

ஒரே வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு பிணை கிடைத்த நிலையில் துணை ஆய்வாளருக்கு பிணை அளிக்காததால், ஆத்திரமடைந்த புதுச்சேரி காவலர்கள் திரண்டுவந்து ரகளையில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி கிருட்டிணராசா அறை முன் காவலர்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒருசில காவல்நிலையங்களுக்கு பூட்டும் போட்டுவிட்டு ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், காவலர்கள், ஆயுதப்படை பிரிவினர் என சுமார் 750- க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய காவலர்களே ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலையங்களிலும், போக்குவரத்துப் பணிகளிலும் பணியாற்ற போதுமான காவலர்கள் இல்லை.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. இதற்கிடையில் காவலர்களின் குடும்பத்தினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காவலர்களுடன் வந்து, நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். துணை ஆய்வாளருக்கு பிணை வழங்காத நீதிபதி வெளியில் செல்ல முடியாத வகையில் ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

காவலர்களின் ரகளைக்கு பணிந்த நீதிபதி கையூட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆய்வாளர் சறீதருக்கு வெள்ளிக்கிழமை மாலை பிணை வழங்கினார். இதையடுத்து காவலர்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதுச்சேரி காவலர்களின் சட்டத்திற்கு புறம்பான இச்செயல் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 வரை நீடித்தது.

இதற்கிடையில் காவலர்களின் ரகளையை படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர்கள் செல்வராசு, சேகர், பாலா ஆகியோரை காவலர்கள் தாக்கினர். அவர்களின் படக்கருவிகளும் உடைக்கப்பட்டன. காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேரும் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட ஊடகவியலாருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சியினருடனும் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெற்ற காவலருக்கு ஆதரவாக புதுச்சேரி காவல்துறையே முழுமையாக செயல்பட்டதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களாட்சி தத்துவத்தின் மீதும் சட்டத்தின்மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தற்போது எழுந்துள்ள ஐயம் என்னவென்றால்,

காவலர்கள் கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெறுவது சட்டப்படி ஏற்கப்பட்டுள்ளதா என்பதுதான்? (ஆம், என்றால் வெளிப்படையாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இந்த வேலைக்கு இவ்வளவு தொகை என்று விலைப்பட்டியல் வைக்கட்டும். இல்லை, என்றால் நேற்று நீதிமன்றத்தில் அத்துமீறிய காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.)

காவல்துறை உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு பணியாமல் கட்டளைகளை புறக்கணித்த காவலர்களின் மீது காவல்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதி அறையை முற்றுகையிடவும், நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபடவும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி உண்டா? இல்லை, என்றால் ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் மீதும் அவர்களின் உறவினர்களின் மீதும் நீதிமன்றமும் அரசும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

கையூட்டு வழக்கில் அரசு அதிகாரிகளோ அரசு ஊழியர்களோ கைது செய்யப்படும்போது அரசு ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தை முற்றுகையிட அனுமதிக்கப்படுமா? அப்படி முற்றுகையிட்டால் நீதிபதிகள் உடனடியாக பிணை வழங்குவார்களா?

எதிர்காலத்தில் புதுச்சேரி அரசியல்வாதிகளும், குற்றவாளிகளும் தங்களுக்கு பிணை வேண்டும் என்பதற்காக நீதி மன்றத்தில் கும்பல் கூட்டி ரகளையில் ஈடுபட்டால் நீதிபதிகள் உடனே பிணை வழங்கிவிடுவார்களா?

தங்களைத் தாக்கிய காவலர்களுக்கு எதிராக ஊடவிலாளர்கள் எப்படி எதிர்வினை புரியப்போகிறார்கள்?

இப்படி பல்வேறு ஐயத்துடன் புதுச்சேரி மக்கள் அச்சத்தோடு நடமாடுகிறார்கள்...

“வலிமையானது நிலைக்கும்” என்ற டார்வின் கோட்பாட்டைப் போல சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில் “கும்பல் கூட்டி ரகளை செய்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என்ற புதிய கோட்பாட்டை புதுச்சேரி காவல்துறையும் நீதித்துறையும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

வாழ்க! சட்டத்தின் ஆட்சி!

படங்கள்: தினகரன்

Thursday, October 9, 2008

இனமொழிப் பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்!

பெரியார் பேரனுக்கு இழைக்கப்பட்ட அநீதி!முதல்வருக்கு உருக்கமிகு கடிதம்
"முதல்வருக்கு வணக்கம்.

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை" என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின் விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது, தங்களுக்குச் சலிப்பூட்டுவன. என்றாலும் தேவையின் பொருட்டுக் கூறுகிறேன், பொறுத்தருள்க.

அய்யா, நான் பெரியாரின் கொள்கைவழிப் பெயரன். பகுத்தறிவு என் பாதை; அதுவே என்னுடைய இன்றைய நிலைக்கு முதல் காரணமும் கூட. அடுத்து... நான் மொழி, இனப்பற்றாளன். தொப்பூழ் கொடி உறவாம் தமிழீழ மக்கள் படும் இன்னல் கண்டு, இதயம் நொந்தவன். உலகத் தமிழரைப் போல் என்னால் இயன்றதை அவர்களுக்கு இயல்பாகச் செய்தவன். என்னைக் கொலைக் களத்தில் நிறுத்த இந்த காரணங்கள் போதுமானதாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன்... கொலையாளன் அல்ல. இதனை என்னுடைய "தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூல் வடிவிலான வாதுரை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

"தடா" சட்டம் என்ற கொடுங்கருவி குறித்துத் தாங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். அந்த ஆட்தூக்கிச் சட்டம், குற்றமற்ற பலரையும் விலங்கினைப் பூட்டி சிறைக் கொட்டடியில் தள்ளிய வரலாற்றினை உணர்ந்தவர் தாங்கள்! அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே அளவில் அச்சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கைவிரித்து வந்த கயவர்கள், பொய்விரித்துப் புலன்கள் மறைத்து, எம்மைக் கொலை யாளியாக்கிய உண்மை உணராதவர் அல்ல தாங்கள்!

மற்றபடி, பிற "தடா"வினருக்கும் எனக்குமுள்ள பெருத்த வேறுபா டெல்லாம், அவர்கள் மீது நல்வாய்ப்பாக முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக அதனினும் சிறிய அளவிலான கொலைக் குற்றங்களில் தொடர்பு படுத்தப்பட்டார்கள். அடுத்து, எனக்குக் கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் இழைத்த பெரும்பிழைகள்.

அய்யா... கட்சி நம்பிக்கை துளியும் அற்றுப்போன மனிதனாக மெள்ள மெள்ள சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இம்முறையீட்டு மனுவினை எழுது கிறேன். ஏனெனில் இனத்தின்பால், மொழியின்பால் பற்றுக்கொண்ட ஓர் இளைஞன், தன்னுடைய கடுமையான உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால் தமிழர் தம் தலைமையேற்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள "நெஞ்சுக்கு நீதி" அதற் கான விடை பகிர்கிறது. அதன் நாற்பத் தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள் கூறியவற்றை தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்கு பொறுத்தருள்க.

"இருபது ஆண்டு சாதாரண மானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்துவிடுகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட மனிதனாகத் தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை.

வாலிபத்தைக் கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுப விக்க முடியாது என்ற பருவத்தில் சக்கை மனிதனாக அவனை சிறைச்சாலை வெளியே உமிழுகிறது. ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்!"

ஆம், அய்யா...! பதினெட்டு ஆண்டு சிறைவாசம்... அதிலும் தனிமைச் சிறைச்சாலை. இதனினும் கொடியதாக எவ்வித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம்... இவை யெல்லாம் சிறிய துன்பங்களே எனக் கூறும் அளவிற்கு சாவின் நிழலில்தான் வாழ்வே நகர்த்தவேண்டும். அய்யா, கற்பனை செய்ய முடிகிறதா தங்களால்? கற்பனை எல்லைகளுக்கு அப்பாற் பட்டது எம்முடைய துன்பம். அதன் பின்னரும் இம்மனுவினை நல்ல மனநிலையோடு என்னால் எழுத முடிகிறதென்றால், நீதியின் பால் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், கொள்கை எனக்களித்த மன உறுதியுமே காரணங்கள்.

அய்யா, அன்றாடம் எத்தனையோ மனுக்கள் தங்கள் மேசையில் வந்து விழும். எதனையோ எதிர்பார்த்து ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு பல கோரிக்கைகளை முன்வைக்கும் அதுபோன்ற மற்றுமொரு மனுவல்ல இது.

உள்ளபடியே எவ்விதக் குற்றமும் புரியாமல், செய்யாத குற்றத்துக்காகப் பிழைபட்டுப் போன நீதியின் விளைவால் வாழ்வின் பதினெட்டு ஆண்டு கால வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன்.

"யாருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம்!" என்றீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது "ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங் களை கிழித்து விடாதீர்கள்" எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். "மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்கு கூடாது" என்றீர்கள். வியந்திருக் கிறேன். அண்மையில் "பாகிஸ்தான் சிறை யில் வாடும் சரப்ஜித்சிங் தூக்கினைக் குறைக்க உலக நாடுகள் குரல் எழுப்ப வேண்டும்" என வேண்டுகோள் விடுத் தீர்கள். தங்களுடைய உள்ளக்கிடக் கையைப் புரிந்து, பெருமை கொண்டேன்.

ஆனால் அய்யா... வேதனை யோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பு வதெல்லாம் பிறகேன் எம்முடைய தூக்கினை மாற்றத் தயங்குகிறீர்கள்? எம்முடைய வழக்கில் "நால்வரையும் தூக்கிலிடுவதில் தனக்கோ தன்னுடைய புதல்வர்களுக்கோ விருப்பமில்லை!" என திருமதி. சோனியா அம்மையார் கூறிய பின்னரும். ஏன் என்னுடைய தூக்கி னைக் குறைக்க முடியவில்லை? திருமதி நளினி அவர்களின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள், மகிழ்ச்சி, அவருக்குத் தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால் அதை விடக் கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அய்யா, இனியும் நான் தூக்கினைக் குறைக்கும் வேண்டுதலோடு என்னுடைய முறையீட்டைத் தங்கள் முன் வைக்கத் தயாரில்லை. எனக்கு விடுதலை வேண்டும். ஒரு ஆயுள் சிறை வாசியைக் காட்டிலும் கூடுதலான துன்பத்தினைக் கண்டுவிட்டேன். எனவே எனக்கொரு முடிவு, என்னுடைய நிலைக் கோர் முற்றுப்புள்ளி விழவேண்டும்.

"காந்தியடிகள் நூற்றாண்டை ஒட்டி 12-11-68க்கு முன்பு மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டதன் விளைவால் 111 கைதிகள் தூக்கிலிருந்து தப்பினர்" என்ற வரலாற்று நிகழ்வைத் தாங்கள் நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டினையொட்டி மீண்டும் அவ்வரலாற்று நிகழ்வு புதுப்பிக்கப் படவேண்டும் என விரும்புகிறேன்.

ஏனெனில், கடந்த 18 ஆண்டு களாக "தம்முடைய வாழ்வே என்னை மீட்பதுதான்" என சலிக்காது போராடி வரும் என்னுடைய பெற்றோரின் முதுமை தரும் அச்சம் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக என்னுடைய கடமையை செய்யத் தவறி யிருந்தாலும், குறைந்தளவு, என்னுடைய நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வுகாணவே ஆசை கொள்கிறேன்.

அய்யா, 18 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தூக்கு நிறைவேற்றப் பட்டிருக்குமானால், இன்று என்னுடைய பெற்றோர் தம்முடைய மற்ற பேரப் பிள்ளைகளோடு தன்னுடைய இனி மையைக் கண்டிருப்பர். குறைந்தளவு, தாங்கள் என்னுடைய கருணை மனு வினை தள்ளுபடி செய்த 25-04-2000 அன்று என்னைத் தூக்கிலிட்டிருந்தாலும் இன்று என்னைப் பற்றிய துன்பம் என்னுடைய பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் ஆட்கொண்டிருக் காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை; என்னுடைய பெற்றோருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை. இரண்டுமற்ற இந்த நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

திருமதி. பிரியங்கா, திருமதி நளினி ஆகியோர் சந்திப்பு அதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்களெல்லாம் எம்முடைய துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளது. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடிவு கிட்டவில்லையானால், விடுதலை பிறக்கவில்லையானால்... இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை.

வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ... தற்போது இறுதிசெய்யப்பட்டாக வேண்டும். பேரறிஞர் அண்ணா நூற் றாண்டில் பெரியாரின் பேரப்பிள்ளை யொன்று நீதிபெற்றது என்ற வரலாறு எழுதப்படட்டும் அல்லது இனமொழிப் பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்.

வேதனை மிகுந்த இந்த நீண்ட நெடிய 18 ஆண்டு சிறைவாசம் முற்றுப் பெற துணை புரியுங்கள். ஓர் உண்மை மனிதனின் உயிர்ப் போராட்டத்துக்குக் கொள்கையாளனின் மனக்குமுறலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், முடிவுரை எழுதுங்கள்!

தங்கள் உண்மையுள்ள
(அ.ஞா. பேரறிவாளன்)
நன்றி: தென்செய்தி