Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, February 10, 2009

இதயமே இல்லாத மன்மோகனுக்கு இதய அறுவை சிகிச்சை...

தோழர் ஒருவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி:

இதயமே இல்லாத மன்மோகனுக்கு
இதய அறுவை சிகிச்சை...

முதுகெலும்பே இல்லாத கருணாநிதிக்கு
முதுகெலும்பு அறுவை சிகிச்சை...

Tuesday, January 13, 2009

திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்தியா உடனடியாக தலையிட்டு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தவேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இப்போராட்டத்திற்கான நேரம், இடம், காலம் என்பன பற்றிய விபரம் தீர்மானித்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் தெரியவருகிறது.
அதேவேளை திருமாவளவன் எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் இப்போராட்டத்தை தொடங்கவுள்ளார் என சென்னை உள்ளூர் செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழ்வின்.காம்

Sunday, December 21, 2008

தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் போராட்டம்

பெரியார் திராவிரடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய பொதுவுடமை கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சென்னையில் இயக்குநர் சீமான் அவர்களின் மகிழுந்தை எரித்த காங்கிரசு ரௌடிகளின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும் புதுச்சேரியில் நாளை (22.12.2008) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போரட்டத்தில் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத, சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கிய பாசறை ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

பெருந்திரளான பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களும், தமிழினின உணர்வாளர்களும் கலந்துகொண்டு தமிழின விரோத காங்கிரசு கட்சியை சவப்பாடையில் ஏற்றவுள்ளனர்.

Sunday, December 7, 2008

சரத் பொன்சேகா 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான சிறிலங்கா படையினரின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கைவிட வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

இதனால், ஆத்திரமடைந்துள்ள சிங்களப் போர்ப்படை தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அரசியல் கோமாளிகள் எனத் தரம் தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்து தனது சிங்கள இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.

சிறிலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம். அதில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்தான் என்றும், சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதற்கு தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொக்கரித்தவர் இவர்.

இப்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதன் மூலம் தனது சிங்கள இனவெறியை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியிருக்கிறார் சிங்களப் போர்ப்படை தளபதி.

சிறிலங்காவைப் பொறுத்த வரையில் மகிந்த இராசபக்ச அரச தலைவராக இருந்தாலும், போர்ப்படை தளபதியான சரத் பொன்சேகா தான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போன்று பேசியும், செயற்பட்டும் வருகின்றார்.

எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. சிறிலங்காவின் குரலாகவே, சிங்கள அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, சரத் பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் மகிந்த இராசபக்சவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள சிறிலங்கா தூதுவரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறிலங்கா இதற்காக பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் எனத் டெல்லிக்கு எடுத்துக் கூற வேண்டும். அத்துடன் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இன்னும் காலம் தாழ்த்தாமல் 48 மணி நேரத்திற்கு உள்ளாக கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கைவிடச் செய்வதுடன், அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டை நிறுத்தப்படுவதன் மூலம் தமிழர்களின் தன்மானத்திற்கு சிறிலங்கா போர்ப்படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் டெல்லிக்கு எடுத்து கூற வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Tuesday, November 18, 2008

200-சிங்கள படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம்

வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

படைத்தரப்பில் பல நூறு பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதில் முகமாலை மற்றும் மாங்குளம் களமுனைகளில் படைத்தரப்பு நேற்று கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.

அரச தரப்பு தகவல்களை வெளியிடுவதற்கு மறுத்து வருகின்றது.

எனினும், அதிகளவான படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்திருந்தன.

வழமைக்கு மாறாக நேற்று அதிகளவான படையினர் அனுமதிக்கப்பட்டிப்பதாக சிறீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்திருந்தன.

இதனிடையே, பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில், கடந்த மூன்ற நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியை 63 ஆவது படையணியினர் கைப்பற்றியுள்ளதாக கடந்த திங்கட்கிழமை தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம், நேற்று அங்கு இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று அந்த கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்

Wednesday, November 5, 2008

இந்திய அரசு தமிழீழ தனிநாட்டை ஏற்க வலியுறுத்தி புதுச்சேரி மாணவர்கள் மாபெரும் பேரணி

சிங்கள இனவெறி இராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் இந்திய அரசு தமிழீழ தனிநாட்டை ஏற்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் மாபெரும் பேரணி நடத்தினர்.


கடந்த செவ்வாய் (04.11.2008) அன்று புதுவை சட்டக் கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் புதுச்சேரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அனைவரும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகே திரண்டனர்.




4000 மாணவர்கள் அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் சிங்கள அரசை கண்டித்தும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோரிக்கை அட்டைகளை கையிலேந்திச் சென்றனர்.



ஊர்வலமாக வந்த மாணவர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பாசுகரன், ஆனந்தன், பிரதீப், குமரேசன், அன்புமணி, நர்மதா, பவாணி, அறிவுச்சுடர், கலைவாணி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து;

இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிங்கள இனவெறி அரசால் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும்.

இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகளை வழங்கக்கூடாது.

ஈழத்தமிழர்களின் இன்னல்தீர தமிழர்களுக்காக தமிழீழ தனிநாட்டை இந்திய அரசு ஏற்கவேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குருதி கையெழுத்திட்டு புதுச்சேரி ஆளுநர் கோவிந்த்சிங் குர்சாரிடம் மனு கொடுத்தனர்.

Monday, November 3, 2008

புதுச்சேரி இளைஞர் காங்கிரசு தலைவர் குடிபோதையில் வந்து ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாவிரத போராட்டத்தில் ரகளை

கடந்த 01-ஆம் தேதி சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை கண்டித்தும் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு உதவி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அரசியல் கட்சிகள் புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்தே புதுச்சேரி இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் குடிபோதையில் வந்து உண்ணாவிரத பந்தலுக்கு எதிரில் நின்றுகொண்டு உண்ணாவிரதம் இருந்தவர்களைப் பார்த்து தொடர்ந்து இழிவாக பேசியுள்ளார்.

உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்கள் அமைதியாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழர் தேசிய இயக்க புதுவை மாநிலத் தலைவர் இரா. அழகிரி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசும்போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரசு அரசையும் காங்கிரசு தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக்கொள்ள தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் ஒருசில காங்கிரசு தலைவர்களையும் கண்டித்துப் பேசினார்.

மேலும் “இராசிவ் காந்தி கொலையில் சோனியாவிற்கும், அவருடைய தாயாருக்கும் தொடர்பு உண்டு” என்று சுப்புரமணியசாமி புதுத்தகம் எழுதியதை காங்கிரசார் இதுவரை கண்டிக்காதது ஏன்? என்று வினா எழுப்பினார்.

அப்போது, பந்தலுக்கு எதிரே குடிபோதையில் நின்று கொண்டிருந்த இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் தலைமையில் சென்றவர்கள் உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்து பந்தல், பதாகை, ஒலிபெருக்கி போன்றவற்றை சேதப்படுத்தினர். அதைத்தொடர்ந்து நடந்த சாலை மறியலில் புதுச்சேரி மாநில காங்கிரசு தலைவர் ஏ.வி.சுப்ரமணியனும் கலந்துகொண்டார்.

இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தவர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தமிழன உணர்வாளர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் பாவாணன் அவர்களும், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன் அவர்களும் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ரகளை செய்த பாண்டியன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிப்பதை கண்டித்தனர்.

உடனே மறியலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் காங்கிரசார் மீது சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழின உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழின உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

உண்மையான குற்றவாளிகளான காங்கிரசார் மீது காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுதலை செய்து விட்டனர்.

புதுச்சேரி மாநில காங்கிரசு அரசின் சனநாயக விரோதப்போக்கை பல்வேறு அரசியல் கட்சியினரும் மனித உரிமை அமைப்பினரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

Wednesday, October 22, 2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மாணவர்களின் தொடர் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை உடனே நிறுத்தக்கோரி இந்திய தலைமை அமைச்சருக்கு தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பினர்.

17.10.2008 அன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாகூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

20.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு நடுவம், சமுதாயக் கல்லூரி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளி, அரசு தொழில்நுட்ப மேநிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்து இலாசுப்பேட்டை கூட்டுப்பாதையில் ஒன்றுகூடினர். மாணவர்கள் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி சிங்கள அதிபர் இராசபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து எழுச்சியாக நடைபெறுகிறது.

Tuesday, September 30, 2008

புதுச்சேரி அரசின் தொடர் சனநாயகப் படுகொலை

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் இந்திய அரசை கண்டித்து கடந்த 28.11.2007 அன்று புதுச்சேரியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

“தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக இக்கூட்டத்தில் பேசுவீர்கள் என அரசு சந்தேகிக்கிறது” அதனால் கூட்டம் நடத்த அனுமதியில்லை என கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை தடைவிதித்தது.

இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.ஐயப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சோதிமணி பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின் அடிப்படையில் 21.03.2008 அன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதால் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறையினர் மீண்டும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் “ஒரு சனநாயக நாட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லையா? சட்டத்திற்கு உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளிக்க வேண்டும்.” என தீர்ப்பு வழங்கினர்.

இந்நிலையில் அண்மையில் வவுனியாவில் உள்ள சிங்கள இனவெறி இராணுவ படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மும்முனை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலால் சிங்கள இராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இத்தாக்குதலில் இந்திய இராணுவத்தின் தொழிற்நுட்பப் பிரிவைச்சேர்ந்த இருவர் படுகாயமுற்றதாகவும், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் உள்ளதாகவும் செய்தி வெளியானது.

சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்வது உறுதியான நிலையில் இதை கண்டித்து 29.09.2008 அன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. வழக்கம்போல் அதே காரணத்தைச் சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு சனநாயக நாட்டில் சனநாயக முறைப்படி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது சனநாயகப் படுகொலையாகும்.

“சட்டத்தை மதிப்பவர்களுக்கு அதை மாற்றவும் தெரியும் அதை மீறவும் தெரியும்” என்பது வரலாறு நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் புதுவை அரசு இதை உணரவேண்டும்.

Friday, August 29, 2008

வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச கருணாநிதி முன்வரவேண்டும்-பழ.நெடுமாறன்

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.


1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.


அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.


அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.


1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.


1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.


பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

Saturday, August 2, 2008

இரசினிகாந்தை கிழித்த அவரது இரசிகர்களை தமிழர்கள் பாராட்டவேண்டும்

இரசினிகாந்து நடித்து தற்போது வெளிவந்துள்ள “குலேசன்” என்ற திரைப்படம் கோயம்புத்தூரில் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பேனர்களைக் கிழித்து இரசிகர்கள் இரசினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு உருவான நிலையில் அதைக் கண்டித்து, சென்னையில் திரைத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் பேசிய இரசினிகாந்து, கன்னட வெறியர்களைக் கண்டித்து பேசினார்.

இப்போது இரசினிகாந்து நடித்த "குசேலன்' திரைப்படம் கர்நாடகத்தில் திரையிடப்படுவதற்கு கன்னட இரக்சண வேதிகே என்ற அமைப்பினரிடமிருந்து எதிர்ப்பு ஏற்பட்டது.

எனவே, சென்னைக் கூட்டத்தில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்து அறிக்கை வெளியிட்டார்.

கர்நாடக மாநிலத்தில் குசேலன் படத்தை திரையிட முடிவு செய்த திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நடிகை செயமாலா இதை பெங்களூரில் வியாழக்கிழமை அறிவித்தார்.

தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்று சென்னை உண்ணாவிரதத்தில் பேசிவிட்டு, தனது திரைப்பட வசூல் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக கன்னட ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பதா என்று இசினி மீது அவருடைய இரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூரில் குசேலன் படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகங்களில் அப் படத்தின் பதாகைகளை அவர்கள் கிழித்து எறிந்தனர்.

இரசினிகாந்தின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு அவரது முகத்திரையை கிழித்தெரிந்த இரசினிகாந்தின் இரசிகர்களை ஒவ்வொரு தமிழனும் பாராட்டவேண்டும்.

Wednesday, July 30, 2008

வங்கி சேவைப் படிவங்கள் தமிழில் வழங்கவேண்டும்: ரிசர்வ் வங்கி ஆணை

வங்கிகளின் பல்வேறு சேவைகள், திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழில் விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் வணிக வங்கிகளை சாதாரண மக்கள் எளிதில் அணுகி, பல்வேறு சேவை வசதிகளை தயக்கம் இன்றி எளிதில் பெறச் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது. தற்போது இதுகுறித்து வழிகாட்டும் கையேடுகளை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விண்ணப்பங்களையும் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்பட வட்டார மொழிகளில் புரியும் வகையில் வெளியிட வேண்டும்.

கணக்குகளைத் தொடங்கவும், பணம் செலுத்தவும் தினமும் பயன்படுத்தும் படிவங்கள், சேமிப்புக் கணக்குப் புத்தகங்களையும் மும்மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளர் குறித்த பல்வேறு விவரங்களை மிகவும் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். தனியார் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது.

பண பரிமாற்றம் குறித்த முழு விவரங்களையும் வாடிக்கையாளரின் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். கணக்குப் புத்தகம், மாத கணக்கு அறிக்கையை இலவசமாக வங்கிகள் வழங்க வேண்டும்.

கடன் அட்டைகள் வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான விதிமுறைகள் குறித்து தமிழில் வெளியிட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கான சேவை தொடர்பாக மேலும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நன்றி: தினமணி, 30.07.2008.

Thursday, July 24, 2008

தமிழ் ஓசை நாளிதழுக்கு அரசு விளம்பரம் இரத்து

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு நாளிதழான தமிழ் ஓசைக்கு பாமக-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அரசு விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ம.க. தலைவர் கோ.க. மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tuesday, July 1, 2008

செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் அலுவலகத்தை 2008, சூன் 30 திங்கட்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர் அவர்கள்: 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி ஆக வேண்டும் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். சூர்யநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்.அவர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு' என்ற நூலில் தமிழைச் செம்மொழி என்று கூறுவதே பொருத்தமாகும் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை அள்ளி வீசியிருக்கிறார்.

அவரது கனவு இன்று நனவாகியுள்ளது. அதனால்தான் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் வழங்கினோம். மதுரை அருகே உள்ள பரிதிமாற் கலைஞரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கினோம்.அவரது வீட்டைப் பார்க்க நான் சென்றிருந்தபோது என் வாழ்நாளில் முதன்முறையாக அக்ரகாரத்தில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மைசூரில் இயங்கி வந்தது. இதனை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று நடுவண் அமைச்சர் அர்சூன் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி அந்த நிறுவனத்தின் அலுவலகம் இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் விருது: தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட "தொல்காப்பியர் விருது' வழங்கப்படும்.

குறள் பீட விருதுகள்: வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இரண்டு குறள் பீட விருதுகள் வழங்கப்படும்.இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்ட விருதுகள் வழங்கப்படும்.செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

இந்த விருதுகள் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் இந்தப் பணிகளைச் செய்யாமல் இருந்து விட்டதால் இப்போது விரைவுபடுத்தியிருக்கிறோம்.

இந்த விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் வா.செ. குழந்தைசாமி, எழுத்தாளர் செயகாந்தன், மா. நன்னன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும் பணி திங்கள்கிழமை மாலையே தொடங்கும்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றை அமைக்க எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி வழங்குகிறேன்.

இந்த ரூ.1 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து அதிலிருந்து வரும் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் வரலாற்று பயன்மிக்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்படும். அரசின் சார்பில் வழங்கப்படுகிற விருதுகளைத் தவிர இந்த விருதுகள் தனியாக வழங்கப்படும்.

தமிழ் செம்மொழியாகி விட்டால் விலைவாசி குறையுமா? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? பசி பட்டினி நீங்கி விடுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் அதையும் செய்துவிட்டு, தமிழைச் செம்மொழியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் என்றார் கருணாநிதி.

விழாவில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் ஐம்பெருங்குழு, எண்பேராயம் குழு உறுப்பினர்களும் தமிழக அமைச்சர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.