Monday, February 23, 2009

உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார்-பழ.நெடுமாறன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல் துறை தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறை மறுத்து விட்டது.

இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அந்த இயக்கத்தின் தலைவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அறிவித்தனர்.

பழ.நெடுமாறன்: மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

முதல்வரின் உத்தரவின்பேரில்தான் காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இந்த உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார். அத்துமீறி செயல்பட்ட காவல்துறை தலைவர், சென்னை மாநகர் ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வற்புறுத்தும் கோரிக்கை மிகமிக நியாயமானது. இதைச் செய்யாமல் பிரச்னை தீராது.

தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார். வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையிலும் உயர் அதிகாரிகளை காப்பாற்றவும் தான் உத்தரவிட்டதை மூடிமறைக்கவும் முயற்சி செய்கிறார்.

மரு. ச.இராமதாசு கூறியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.

ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.

இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

தா. பாண்டியன்: இலங்கையில் குண்டு போடுவதை நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அறவழியில் நாங்கள் போராடி வருகிறோம். இந்நிலையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாம் என அரசு கருதினால், எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அதனை முறியடிப்போம்.

வைகோ: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, கைதாவதில் எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நீதிமன்றத்தில் நடந்தது போலவே, இன்னொரு வன்முறைச் சம்பவத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்தே, எங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.

வரும் 27-ம் தேதி சென்னை மற்றும் அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் எங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திருமாவளவன்: நீதிமன்ற வன்முறை சம்பவத்துக்கு சுப்பிரமணியன் சுவாமிதான் முழு பொறுப்பு. அடியாட்களுடன் நீதிமன்றத்துக்கு சென்ற அவர், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். அதன் பிறகே வன்முறை வெடித்துள்ளது. எனவே அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி தினமணி (24.02.2009)

Thursday, February 19, 2009

போரை நிறுத்த வற்புறுத்த முடியாது என்று பிரணாப்முகர்ஜி கூறியதற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த முடியாது என்று கூறிய மத்திய மந்திரி பிரணாப்பு முகர்ஜிக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கூறிய வார்த்தைகளை திரும்ப பெறாவிட்டால் மத்திய மந்திரியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் மு.கண்ணப்பன், பாரதீய ஜனதா துணைத்தலைவர் எச்.ராஜா, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சுசி.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இலங்கை தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழ்வேந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடலூரில் நடைபெறும் அவரது இறுதி ஊர்வலத்தில் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

20-ந் திகதி(இன்று) காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் அனைவரும் சென்று, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி கையெழுத்திட்ட மனுவை தூதரகத்தின் மூலம் அமெரிக்க குடியரசு தலைவருக்கு அளிக்க இருக்கிறோம். மற்ற நாடுகளின் தூதரக அலுவலகங்களிலும் மனு அளிப்போம்.

இந்தியாவின் தற்காலிக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் பேசுகையில், போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை, இந்தியா வற்புறுத்த முடியாது என்று அறிவித்து இருப்பது 61/2 கோடி தமிழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோளை, துச்சமாக மதித்து தூக்கி எறியும் போக்காகும். இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குடியரசு தலைவர் உரையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இருந்ததற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அரசின் வாக்குறுதியை நம்பி, பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த மக்கள் குண்டுவீசப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களும், நர்சுகளும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இலங்கை அரசு வெளியேற்றி உள்ளது. மேற்கண்டவற்றை எல்லாம் குறித்து சிறு கண்டனம் கூட தெரிவிக்காத பிரணாப்முகர்ஜி விடுதலைப்புலிகள் மீது பொய்யான பழிகளை சுமத்தி, பிரச்சினையை திசை திருப்ப முயல்வதை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பிரணாப்முகர்ஜியின் அறிவிப்பின் காரணமாக இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவிக்கும் துணிவை இலங்கை அரசு பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பேசியதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், இல்லையேல் இந்திய அரசுக்கு எதிராக பெரும் போரட்டம் தமிழகத்தில் வெடிக்கும் என்றும் பிரணாப்முகர்ஜிக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று வற்புறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வருகிற 23-ந்தேதி முதல் ஒரு வார காலத்தில் 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெறப்படும். இந்த கையெழுத்து பிரதிகளை ஐ.நா.பேரவை செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷிய குடியரசு தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பேரணி கோவை, கடலூர், மதுரை பகுதிகளில் நடைபெற்றுள்ளது. வருகிற 28-ந்தேதி திருச்சியிலும், மார்ச் 2-ந்தேதி தூத்துக்குடியிலும் நடத்தப்படும். சேலம், புதுச்சேரியில் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். என்று பழ.நெடுமாறன் கூறினார்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாசிடம், `போரை நிறுத்த வற்புறுத்த மாட்டோம் என்று கூறிய மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியின் பேச்சு வேதனை அளிப்பதாக கூறி உள்ள நீங்கள். தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகிப்பது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து ராமதாஸ் பேசும்போது, எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசினார்கள். வாக்குவாதம் செய்தனர். இதனால் 2 முறை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் கேள்வி நேரத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை கிளப்பி உள்ளனர். பிரணாப்முகர்ஜியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் சோனியா காந்தியை வற்புறுத்தி உள்ளோம். இந்த தீர்மானம் வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பு, ராஜபக்சேவுக்கு மிகப்பெரிய துணிச்சலையும், தெம்பையும் அளித்துள்ளது. இதனை கண்டித்துள்ளேன் என்று ராமதாஸ் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான போர் காரணமாக, நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் அணிகள் மாறுமா? என்று வைகோவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பொருத்திருந்து பாருங்கள், இதற்கு மேல் என்னிடம் இருந்து வேறு எந்த பதிலும் வராது என்று தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Monday, February 16, 2009

தமிழக மக்களை ஏமாற்றுகிறார் சிதம்பரம்: வைகோ

திருச்சி, பிப். 16: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க முப்படைகளையும் ஏவிவிட்டு போரை நடத்தி வருகிறார் ராஜபட்ச. உலகில் வேறெங்கும் நடைபெற்றிராத பேரழிவை அங்கே நடத்தி வருகிறார். இந்த இன அழிப்புப் போரை இந்தியா பின்னால் இருந்து இயக்கி வருகிறது. இதற்கு சாட்சியங்கள், ஆதாரங்கள் உள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், தமிழக மக்களை ஏமாற்றுகிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால், பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவும் என்கிறார் அவர். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தெரிவித்த மோசடிக் கருத்தையே சிதம்பரம் இப்போது வழிமொழிந்திருக்கிறார்.

ஒரு தரப்பை மட்டும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது உலகில் வேறெங்கும் நடைபெற்றிராத ஒன்று. பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்களில் போராளிகளின் ஆயுதங்களை கீழே போடச் சொல்லி இந்தியா உள்பட யாரும் கேட்கவில்லை.

2002-ல் முதலில் போர் நிறுத்தம் அறிவித்ததே விடுதலைப் புலிகள்தான். இதுவரை அவர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறவில்லை. ராணுவம்தான் இதை மீறி இப்போது போரைத் தொடுத்திருக்கிறது. புலிகள் தற்காப்புத் தாக்குதல்களைத்தான் மேற்கொண்டிருக்கின்றனர்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே போர் நிறுத்தத்துக்குத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டனர். ஆனால், ராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா ஆயுதங்களையும், ராடார்களையும் வழங்கி வருகிறது.

இடையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்றார்கள். அது போர் நிறுத்தமல்ல; குண்டுவீசிக் கொல்லப்போகிறோம், தப்பித்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட கெடு. அப்போதும்கூட குண்டுவீச்சு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு பல்வேறு வகையான போராட்டங்களாக உருவெடுத்துள்ளன. இதைச் சமாளிக்க, மக்களை ஏமாற்ற, இந்தப் பிரச்னைகளில் இருந்து எப்படித் தப்புவது என்றுதான் மத்திய அரசும், தமிழக முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காகத்தான் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற பெயரில் குழுவை அமைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட இக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கெனவே, அந்தக் கவுன்சில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த முடிவு செய்திருந்தது.

ரஷியா மட்டும் இதை எதிர்த்தது; ஆனால், இப்போது ரஷியாவும் ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த சில நாள்களில் நடைபெறும் கூட்டங்களில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படலாம். அப்போது, எங்களின் முறையீட்டை அடுத்துதான் ஐநா சபை இந்த முடிவை எடுத்தது என்று கருணாநிதி கூறுவார்.

இப்போதாவது போரை நிறுத்துங்கள் என்று, ஒப்புக்காவது இந்தியா கோருமானால், அடுத்த சில நாள்களில் உலக நாடுகள் முழுவதும் அதை வலியுறுத்த தயாராக உள்ளன.

அதைவிட்டுவிட்டு, விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சிதம்பரம் கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல் என்றார்.

நன்றி: தினமணி

இலங்கைப் பிரச்னை மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும்: பழ. நெடுமாறன்

திருச்சி, பிப். 16: இலங்கை பிரச்னை மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

""இலங்கையில் போர் நிறுத்தம் கோரி செவ்வாய்க்கிழமை நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

பிரபாகரனை இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியா என்று கேட்கிறார்கள். அங்கு கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும், தமிழ்த் தேசிய முன்னணி அமைக்கப்பட்டு அந்த முன்னணியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே பிரபாகரன்தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதி என்று அறிவித்திருக்கின்றனர். இலங்கை மக்களின் முடிவை, இங்குள்ளவர்கள் ஏற்க மறுத்து கேள்வி எழுப்புகின்றனர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் முழு தமிழ் இன அழிப்புக்கு வழிவகுத்துவிடும். ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களைக் காக்கும் நோக்கம் கொண்டதல்ல; இலங்கைக்கு உதவுவதை மீண்டும் உறுதிப்படுத்துவதே.

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு, இந்தியா சொல்லுமென்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை முடக்கும் நிலை தொடருமென்றால், அது மாநில அரசுக்கு எதிரான போராட்டமாகவும் மாறும்.

தமிழகத்தின் பெரிய கட்சிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலின்போதுதான் உண்மை நிலவரம் தெரியும் என்றார் நெடுமாறன்.

நன்றி: தினமணி

Tuesday, February 10, 2009

இதயமே இல்லாத மன்மோகனுக்கு இதய அறுவை சிகிச்சை...

தோழர் ஒருவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி:

இதயமே இல்லாத மன்மோகனுக்கு
இதய அறுவை சிகிச்சை...

முதுகெலும்பே இல்லாத கருணாநிதிக்கு
முதுகெலும்பு அறுவை சிகிச்சை...

இந்தியாவுக்கு சிங்கள இனவெறியர்கள் நன்றி தெரிவித்தனர்

பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேவேளை, சிறிலங்கா படையினருக்கு உதவி புரிவதாக கூறி இந்தியா, சீனா, ரசியா ஆகிய நாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

சிறப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சிறிலங்கா மக்களின் நன்றிகள் உரித்தாகட்டும் என்றும் அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி புரிய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.

முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தலைமை தாங்கினார்.

நூற்றுக்கனக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பௌத்த குருமாரும் கலந்து கொண்டனர்.

மகிந்த அரசாங்கத்தின் போர் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இடையூறு விளைவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இதனை சிறிலங்கா மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினர். அந்த நாடுகளின் பிரதிநிதிகளை கிண்டல் செய்யும் கேலிச் சித்திரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் கிலறி கிளிண்டனையும், பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டையும் விடுதலைப் புலிகளின் உடையில் சித்தரிக்கும் கேலிச் சித்திரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

கிலறி கிளிண்டன் இரட்டை வேடம் போடுகின்றார் என்றும் உரக்க முழக்கமிட்டனர்.

அதேவேளை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் பௌத்தலோக மாவத்தையில் இருந்து கனத்தை சந்தி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

பிரித்தானிய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் எவரும் வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தினை பார்வையிடவில்லை.

நன்றி: புதினம்.காம் (10.02.2009)

Monday, February 9, 2009

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்தியளிக்கின்றது: இராஜபக்சே

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்தியளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் த வீக் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை இலக்கு வைத்தே தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரங்களில் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இனங்களைப் போன்றே தமிழர்களுக்கும் இலங்கையில் சமவுரிமை காணப்படுவதாகவும், அதனை மறுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் யுத்தம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அர்த்தப்படாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று குறித்த தமது அர்ப்பணிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், நிச்சயமாக அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படக்கூடிய வகையில் இந்திய மத்திய அரசு ஒருபோதும் செயற்படாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினம்.காம்