Tuesday, September 30, 2008

புதுச்சேரி அரசின் தொடர் சனநாயகப் படுகொலை

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் இந்திய அரசை கண்டித்து கடந்த 28.11.2007 அன்று புதுச்சேரியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

“தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக இக்கூட்டத்தில் பேசுவீர்கள் என அரசு சந்தேகிக்கிறது” அதனால் கூட்டம் நடத்த அனுமதியில்லை என கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை தடைவிதித்தது.

இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.ஐயப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சோதிமணி பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின் அடிப்படையில் 21.03.2008 அன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதால் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறையினர் மீண்டும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் “ஒரு சனநாயக நாட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லையா? சட்டத்திற்கு உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளிக்க வேண்டும்.” என தீர்ப்பு வழங்கினர்.

இந்நிலையில் அண்மையில் வவுனியாவில் உள்ள சிங்கள இனவெறி இராணுவ படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மும்முனை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலால் சிங்கள இராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இத்தாக்குதலில் இந்திய இராணுவத்தின் தொழிற்நுட்பப் பிரிவைச்சேர்ந்த இருவர் படுகாயமுற்றதாகவும், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் உள்ளதாகவும் செய்தி வெளியானது.

சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்வது உறுதியான நிலையில் இதை கண்டித்து 29.09.2008 அன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. வழக்கம்போல் அதே காரணத்தைச் சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு சனநாயக நாட்டில் சனநாயக முறைப்படி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது சனநாயகப் படுகொலையாகும்.

“சட்டத்தை மதிப்பவர்களுக்கு அதை மாற்றவும் தெரியும் அதை மீறவும் தெரியும்” என்பது வரலாறு நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் புதுவை அரசு இதை உணரவேண்டும்.

Wednesday, September 24, 2008

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!"

தன்னைப்பற்றிய விமர்சனங்களை செரிக்கத் தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேல் இடிப்புரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடுவான் என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான்.

முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்துபேச வேண்டும். எழுதவேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்துவதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை.

50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப் பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன், விபீஷணன் என்றும், பணம் பறிக்கும் இனத்துரோகி என்றும் திட்டுவது முதல்வருக்கு அழகல்ல. இந்தப் பட்டங்களை திருப்பி முதல்வர் மீது வீச எத்தனை வினாடி எடுக்கும்?

வைகோவை 18 ஆண்டுகளாக மேலவை உறுப்பினராக்கினேன். அது நான் அவருக்கு போட்ட பிச்சை என்று அன்றொருநாள் முதல்வர் சொன்னார். அப்படி என்றால் தி.மு.க. என்பது ஆண்டிகள் மடமா? முதல்வர் என்ன மூத்த தம்பிரானா? அறிவுடையோர் கேட்கமாட்டார்களா?"

வைகோ புலிகளோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லச் சதி செய்தார் என்று முதல்வர் உளறினாரே? அது நெஞ்சாரச் சொன்ன பொய்தானே? முதல்வர் ஒரு பொய்யன் என்பதுதானே அதன் பொருள்?

நெடுமாறன் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மனம், மொழி இரண்டினாலும் நேசிப்பவர், அவரைப் பார்த்து "வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக்கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!" என்பது கொஞ்சமும் பொருந்தாது. வேண்டு மென்றால் அது முதல்வருக்குத்தான் பொருந்தும்.

முதல்வர்தான் இலாபம் இருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இழப்பென்றால் காததூரம் விலகி ஓடுவது என்ற கொள்கையை வைத்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நெடுமாறனுக்கு இருக்கும் ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட முதல்வருக்கு இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்!

இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக்கொடி பிடித்தீர்கள். கற்களை எறிந்து இந்திரா காந்தியைக் கொல்ல நினைத்தீர்கள். அப்போது இந்திரா காந்தியைக் காப்பாற்றியவர் இன்று நீங்கள் எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சிக்கும் பழ. நெடுமாறன்தானே.

இல்லையா? பின்னர் மானம், வெட்கம், இரண்டையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக" என தட்டை மாற்றி லாலி பாடினீர்களே? இதனை வைத்து முதல்வர் கருணாநிதியை ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றால் அது பிழையாமோ?

பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு, "அரசியலில் தீண்டாமை இல்லை" என்று சொல்லிக் கொண்டு அவர்களோடு கை கோர்த்த குத்துக்கரண வீரர் கருணாநிதியா? நெடுமாறனா?

நள்ளிரவில் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை அன்றைய கருணாநிதியைக் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனபோது "அய்யோ என்னைக் கொல்றான்களே" என்று கூக்குரல் விட்டு அழுதீர்களே? அது கோழைத்தனம் இல்லையா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபைக்குப் போகாமல் கையெழுத்தைமட்டும் போட்டுவிட்டு சம்பளத்தை ஒழுங்காக எடுத்த முதல்வர் வீரத்தைப் பற்றிப் பேசலாமா?

தமிழகத்தில் ஊழலை எப்படிச் செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் முதல்வர்தான்.நெடுமாறன் அல்ல. வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. 23 கோடி செலவில் தீட்டப்பட்ட வீராணம் திட்டத்தில் நடைபெற்றது ஊழலா இல்லையா என்பதற்கு சான்றாக இன்றும் கூட வீராணத்திலிருந்து சென்னை வரை அன்றைக்கு வாங்கப்பட்ட சிமெண்ட் குழாய்கள் சாலையோராமாகப் பரிதாப மாகக் கிடக்கின்றன. இந்த ஊழலை விசாரித்த சர்க்காரியா ஊழலை விஞ்ஞான முறையில் செய்திருக்கிறார் என முதல் வரை எள்ளி நகையாடினார். தமிழர்கள் கூனிக் குறுகிப் போனார்கள்.

"தமிழகம் நோக்கி தஞ்சம் புகும் ஈழத் தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள்" என்று சட்டசபையில் கொட்டி முழக்கினீர்கள். இப்போது யார் யார் வீடுவாங்கி இருக் கிறார்கள். யார் யார் வண்டிவாகனம் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அவர்களைக் கைது செய்து வழக்குப் போடுமாறு முதல்வர் தனது காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறாரே? இது இரண்டகம் (துரோகம்) இல்லையா. இதுதான் "மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று குறளுக்கு உரை எழுதியவர் விருந்தினர்களை நடத்தும் அழகா?

சிங்களப் படையெடுப்பால் வீடு வாசல் இழந்த தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் ஊர் ஊராகச் சென்று உணவும் உடையும் திரட்டினாரே? தமிழக முதல்வர் என்ன செய்தார்? இன்று கூட தமிழீழம் எதிரி படையெடுப்பால் நெருப்பில் வேகிறது. ஒன்றரை இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து குடிக்கத் தண்ணீர் இன்றி ஒரு நேரக் கஞ்சிக்கு வழியின்றி மரநிழல்களில் வாழ்கிறார்கள்.

உரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னர் போல் கோட்டையில் இருந்துகொண்டு குழல் வாசிக்கின்றாரே? இது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

புறநானூற்று வீரம் என்றால் ஆகா என்று மேடையில் பேசுவது எழுதுவது. அதே வீரத்தை புலிகள் போர்க்களத்தில் செய்து காட்டும் போது "எனக்கு வன்முறை பிடிக்காது" என்று சொல்லும் உங்களை உங்கள் நடையில் கோழை என்று சித்திரிப்பதில் தவறு ஏதாவது இருக்கிறதா?"

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!" - "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ நாளும் மறப்பாரடீ!" என்ற பாரதியின் கவிதை வரிகள் முதல்வருக்கு அச்சொட்டாகப் பொருந்துகிறதா இல்லையா?

"உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பாளர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது" என உருசிய ஆட்சித் தலைவர் டிமித்திரி மித்விடெவ் தோள் தட்டினாரே? அவரிடம் இருக்கும் இனப்பற்றில் முதல்வருக்கு நூற்றில் ஒரு விழுக்காடுதானும் உண்டா? நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா?

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு முதல்வர் மற்றவர்கள் மீது கல் லெறியக் கூடாது. ஏன் ஆடையையும் களையக்கூடாது! கல்லெறிந்தால் அது தனக்குத்தான் இழப்பு. ஆடை களைந்தால் அது அவருக்குத்தான் வெட்கக்கேடு.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்கு எல்லை இருக்காது. கீழ்க்கண்ட அவ்வையார் பாடலை மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்து இப்போது விடை பெறுகிறேன்.

ஆலைப் பலா ஆக்கலாமோ அருஞ்சுணங்கன்வாலை நிமிர்க்க வசமோ - நீலநிறக்காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலாமூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

- நக்கீரன், கனடா.
நன்றி: தென்செய்தி

வீரமணியை காப்பாற்றுவதற்காகவாவது பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும்-தோழர் தியாகு

வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரியும், 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுப் செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை:

தந்தை பெரியார் வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தவர். எதிர்ப்புக் கண்டு அஞ்சாதவர். எப்போதும் பெரியாருடைய பாதை சரளமானதாக, தடையற்றதாக இருந்ததில்லை. அதற்கு பொருத்தமாகவே இப்போது பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்புகளாக வெளியிடும் முயற்சிக்கும் தடைபோட துடிக்கிறார்கள்.

பெரியாருடைய கூட்டங்களுக்கும், உரை வீச்சுகளுக்கும், பார்ப்பனர்கள், சனாதனிகள், ஆட்சியாளர்கள் தடை போட்டார்கள். இப்போது பெரியாருடைய நூல்களை வெளியிடுவதைத் தடுப்பது வரலாற்றில் மிகப்பெரும் பின்னடைவு. இது பெரியார் திடலிலிருந்தே வந்திருக்கிறது என்பதுதான் வேதனை.

பெரியாரின் நூல்கள் வெளிவரப்போகிற செய்தி தமிழ்நாடெங்கும் தெரிய வேண்டும். அக்கரையுள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கிற பரப்புரை, விளம்பரம் போதுமானதல்ல என்று கருதியோ என்னவோ இந்தச் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு நேரடி உதவி செய்திருக்கிறார் வீரமணி. அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். (கைதட்டல்)

எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் கூறியிருக்கிற காரணங்கள் என்ன? முதலாவதாக இவைகளுக்கெல்லாம் அறிவுசார் காப்புரிமையை கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. சட்டம் என்ன சொன்னாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். தோழர் கொளத்தூர் மணி ‘நல்லது சந்திப்போம்’ என மிகப் பொருத்தமாக பதிலளித்து இருக்கிறார்.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம் பைபிள் என்கிற புதிய நூலுக்கு அறிவு காப்புரிமை கோரவில்லை. போப் பாண்டவர் பார்த்துத்தான் பைபிள் வெளியிட வேண்டுமென்றால் உலகத்தில் இத்தனை மொழிகளில் பைபிள் வெளிவந்திருக்காது. தமிழிலேயே எத்தனை மொழிப்பெயர்ப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? இவைகளை எல்லாம் போப் ஆண்டவர் அங்கிகரிக்க வேண்டும் என்றால் பைபிள் உலகிலே பரவியிருக்காது.

மார்க்சின் ‘மூலதனம்’ தொகுப்பு அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு தொகுதிதான் வெளிவந்தது. ஆங்கிலத்தில் அதை ஏங்கல்சு மொழி பெயர்த்து வெளியிட்டார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில்;

மார்க்சும், ஏங்கல்சும் மறைந்த பிறகுதான் மற்ற தொகுப்புகளும், தொகுதிகளும் வந்தன. மாஸ்கோவிலிருந்து மூலதன நூலின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. அந்த மொழிபெயர்ப்புகளில் நிறைய தடைகள், இடையூறுகள் இருப்பதாகக் கருதி வேறு மொழிப் பெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத்தேடினோம்.

‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ வெளியீட்டு நிறுவனம், மிகப் பெரிய பொருளியல் வாதியான மார்க்சின் ‘மூலதனம்’ முழுமையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வைத்துத் தான் நாங்கள் தமிழில் மொழி பெயர்த்து மூலதனம் முழுவதையும் சீர் செய்தோம். இப்படி மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர்களுடைய நூல்கள் எல்லாம் உலகில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. முறையாக தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் அழகிய அச்சு வடிவிலே.

இதற்கெல்லாம் அன்றைக்கு சோவியத் அரசோ, மற்றவர்களோ தடை போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்குமான உறவு பிரிந்ததற்கு பிறகு எழுதின நூல்களையெல்லாம் சீனாவிலிருந்து புதிதாக மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள். இதற்கு யாரும் அறிவு சார் காப்புரிமை கோரவில்லை.

நம்மைப் பொருத்தவரை தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய லெனினாக, தமிழ் நாட்டினுடைய தேசிய தந்தையாக நாம் மதிக்கிறோம். இந்தியாவிற்கு எப்படி காந்தியை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அதுபோல் தமிழ்நாட்டிற்கு தந்தை பெரியார் தான். பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியாருடைய அறிவுக்களஞ்சியம் என்பது நம்முடைய சொத்து. அவர்கள் ஒரு திடலை, ஒரு கட்டிடத்தை ஒரு சிலையை சொந்தமாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை.

பவுத்தம் என்பது போருக்கெதிரான - சிந்தனைதான். ஆனால் சிங்கள பவுத்தவாதிகள் தமிழர்களுக்கு எதிராக போர் வெறிபிடித்து அலைகிறார்கள். அவர்களிடம் என்னயிருக்கிறது என்றால், புத்தருடைய பல் இருக்கிறது. ஒரு இடத்திலே புத்தருடைய முடியை வைத்திருக்கிறார்கள். ஆனால் பவுத்தம் அவர்களிடம் காணாமல் போய்விட்டது.

அந்த பவுத்தத்தை பெரியாரும், அம்பேத்கரும் தான் இந்த நாட்டுக்குரிய, மக்களுக்குரிய கருத்துகளாக வழங்கினார்கள்.புத்தருடைய பல்லையும், முடியையும் வைத்துக் கொண்டு - பவுத்தர்களாக உரிமை கோரும் சிங்களர் - பவுத்தத்தின் சிந்தனைக்கு எதிராக போர் வெறிபிடித்து அலைகிறார்கள்.

இங்கே பெரியாருடைய உடைமைகளை வைத்திருப்போர் - பெரியார் நூல்களை வெளியிட தடை கோருகிறார்கள். அம்பேத்கருடைய நூல்களை மராட்டிய அரசு ஆங்கிலத்திலே வெளியிட்டது மட்டுமல்ல, தமிழிலேயும் அரசு துணையோடு வெளியிட்டது. நானும் ஒரு சில தொகுதிகளை மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறேன்.

இப்படி நூல்கள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.தந்தை பெரியாருடைய கருத்துகளுக்கு அவருடைய சொற்களில், அவருடைய பதப் பிரயோகத்தில் கால வரிசைப்படியான சிந்தனையில்தான் பணி மலர்ச்சியை புரிந்துகொள்ள முடியும். அப்படி வெளியிடப்படாத ஒரு பிழை இருக்கிறது.

அந்த வரலாற்றுப் பிழையை நிறைவு செய்கிற முயற்சியை பெரியார் திடலே செய்திருக்குமானால் நாம் மெத்த மகிழ்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்யத் தவறியிருக்கிற நிலையிலேதான் அவர்கள் அறிக்கையிலே கூறியிருப்பதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு இவற்றையெல்லாம் முறைப்படி எழுதி ஒப்படைத்தும்கூட அவற்றை வெளியிட முயற்சி செய்யாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம் அரும்பாடுபட்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக் கொண்டுவர முயல்கிறது.

தந்தை பெரியாருடைய தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உயிர் முழக்கமாக கொண்டிருக்கிற எங்களது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ இதற்காக நன்றிப் பாராட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரமணி அவர்களும் நன்றி சொல்லியிருந்தால் கண்ணியமான, மரியாதையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீரமணி கண்டுகொள்ளாமலாவது இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவர் விளம்பரம் கொடுக்கிறார். இவைகளை எல்லாம் தடை செய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இது தேவையில்லாத வேலை.

நாங்கள் பெரியார் நூல்களை வெளியிடவில்லையா என்று வீரமணி கேட்கிறார். நீங்கள் எதையுமே வெளியிடவில்லை என்பதல்ல எங்கள் வாதம். நீங்கள் சுவரொட்டி அடித்து விளம்பரபடுத்தித்தான் நீங்கள் வெளியிட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

தந்தை பெரியார் காலத்திலேயே அவருடைய எழுத்துக்கள் வெளிவந்தன. எத்தனையோ கூட்டங்களில் பெரியாரே புத்தகங்களையெல்லாம் வண்டிகளில் எடுத்துக் கொண்டு வந்து விற்றுவிட்டுவா என்று சொல்லுவார். திரும்ப வண்டியிலே ஏறுகிற பொழுது எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்று கேட்பார். முப்பது புத்தகம் விற்றது என்றால், ஆகா முப்பது பேர் படிப்பார்கள் அல்லவா என்று பெரியார் மகிழ்ச்சி யடைவார். அப்படித்தான் தன்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு எளிய முயற்சிகளை செய்தார்.

பெரியார் காலத்தில் சின்ன சின்ன புத்தகங்கள் வெளிவந்தன. அவைகளை தொகுத்து வெளியிடுகிறபோது தான் பெரியாருடைய சிந்தனை பனி மலர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நாம் ஒரு செய்தியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், மார்க்சியவாதிகள், அறிவாளிகள் என்று பிறப்பிலேயே எவனும் பிறப்பதாக நாம் நம்புவதில்லை.

பிறந்த பிறகுதான் அறிவு வருகிறது. அதுவும் படிப்படியாகத்தான் வருகிறது. மரத்தடியிலே உட்கார்ந்தால் ஞானம் வந்துவிடும் என நாம் நம்புவதில்லை.

இது எல்லோருக்கும் பொருந்துகிற செய்தி. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சி என்பது நமக்குத் தேவையானது. அது எப்போது கிடைக்கும் என்றால், பெரியாருடைய எழுத்துக்கள் காலவரிசைப்படி முழுமையாக எதையும் நீக்காமல், திருத்தாமல், மறைக்காமல் வெளியிடபடுகிறபோது மட்டுந்தான் கிடைக்கும்.

அப்படித்தான் ஆய்வாளர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். தங்களைத் தவிர, மற்றவர்கள் பெரியார் நூல்களை வெளியிட்டால் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.

பெரியார் எழுதியதை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். இன்னொன்றை நீக்கிவிடலாம், ஒரு சொல்லை விட்டு விடலாம், இன்னொரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்குப் பெயர்தான் திரிபுவாதம், புரட்டல் வேலை.

இந்த புரட்டல் வாதம், திரிபுவேலை கூடாது என்பதால்தான் உள்ளது உள்ளபடியே தொகுத்து வெளியிடுகிற முயற்சியை, கடினமானபணியை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் கேட்கிறேன், வீரமணி சொல்வது போல இப்படியெல்லாம் வெளியிட்டால் தவறாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்று கூறுகிறாரே;

பெரியாரை யார் தவறாகப் பயன்படுத்த முடியும். அதனுடைய எழுத்துக்களை திருத்தி விடுவார்கள், பதிப்பிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி விடுவார்கள் என்கிறார் வீரமணி.

அப்படி இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். உங்கள் கையிலுள்ள ஏட்டில் எழுதலாம். “பாருங்கள் பெரியார் எழுதியது ஒன்று, அவர்கள் வேறொன்றை காட்டுகிறார்கள்“ என்று.

மார்க்சு அவர்கள் தன்னை மார்க்சியவாதியாக அறிவித்துக் கொள்வதற்கு முன்னால் நிறைய எழுதிக்குவித்தார். கையெழுத்துப் படிகளாகவே அவையெல்லாம் இருந்தன. அதற்குப் பெயரே (Early Manuscripts) அதாவது, தொடக்கக்கால கையெழுத்துச் சுவடிகள்.

இன்றைக்கு பல ஆய்வாளர்கள் பிற்காலத்தில் மார்க்சியத்தோடு முரண்பட்டவர்கள் எல்லாம் உண்மையான மார்க்சியமே அந்தக் கையெழுத்துச் சுவடிகளில்தான் இருக்கின்றது. அவற்றை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பெரியாரைப் பற்றி எத்தனைக் கருத்துக்கள் வேண்டுமானாலும் வரட்டும், முட்டி மோதட்டும், இதுதான் பெரியாரியல் வாதம், விவாதம் அரங்கேறட்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக பெரியாருடைய படைப்புகள் அவருடைய எழுத்தில், மொழியில், சொல்லில், காலவரிசைப்படி வரவேண்டும்.

வீரமணி அவர்களே! நீங்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டிருப்பதாலேயே மற்றவர்கள் வெளியிடக்கூடாது என்பதில்லை. நீங்கள் வெளியிடாதவற்றையும் வெளியிடலாம். நீங்கள் வெளியிட்டவற்றையும் மீண்டும் வெளியிடலாம்.

அய்யா ஆனைமுத்து அவர்கள் பல நூல்களை கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல ‘பெரியார் சிந்தனைகள்’ என்று மூன்று பெரிய தொகுப்பையும் கொண்டு வந்தார். அதற்கும் ‘குடிஅரசு’ தொகுப்பிற்கும் வேறுபாடு உண்டு. அது பொருள் குறித்த வரிசையிலே கொண்டு வரப்பட்டது. ஆனால், ‘குடிஅரசு’ காலவரிசைப்படி வருகிறது.
இதில் எல்லா வகையான சிந்தனைகளும் இருக்கும். அப்படிப்பட்ட நல்ல நூல் வருவது இன்றியமையாதது.பெரியார் ஒரு காலத்திலே சொன்னதற்கும், இன்னொரு காலத்திலே சொன்னதற்கும் முரண்பாடுகள் இருக்குமோ என்றெல்லாம் வீரமணி கவலைப்படு கின்றார்.

எங்களுக்கோ இன்றைக்கு கலைஞர் அவர்களைப் பற்றி வீரமணி எழுதி கொண்டிருப் பனவற்றையும், பேசிக் கொண்டிருப்பனவற்றையும், அன்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி எழுதிக் கொண் டிருந்தவற்றையும் பேசிக் கொண்டிருந்தனவற்றையும் ஒரே தொகுதியாக நாங்கள் வெளியிட்டால் (சிரிப்பு, கைதட்டல்) முரண்பாடுகள் தெரியும். அதை நாமே கூட அவருக்காக வெளியிடலாம். (கைதட்டல்)

வீரமணி அவர்களை கேட்க விரும்புகிறேன், பெரியாரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பெரியார் காசிக்குப் போன நிகழ்ச்சி காட்டினீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் காட்டினீர்கள் என்றால் நமக்கு பெரிதும் வேதனையாக இருந்தது. சாதாரணமாக ஒரு குறியீட்டின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தி. எச்சில் இலையை பெரியார் வழித்துச் சாப்பிடுவதாக காட்டினீர்கள்.

நீங்கள் காட்டாமல் விட்டது 1938 ஆம் ஆண்டு மொழிப்போர் நிறைவடைகிற பொழுது சென்னைக் கடற்கரையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டாரே அதை நீங்கள் அடியோடு மறைத்து விட்டீர்கள். ஏன்? எச்சில் இலையை வழித்து சாப்பிடுகிற மாதிரி காட்டும் அளவுக்கு கலையதார்த்த உணர்வு இருக்கிறது.

ஆனால் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியதை நீங்கள் காட்ட மாட்டீர்கள். ‘குடிஅரசு’ தொகுதிகள் எல்லாம் வெளிவருமானால் பெரியார் கொள்கை எதுவென்று தெரிந்து விடும்.

வீரமணிக்கு கொள்கை கிடையாது. யுக்தி மட்டுந்தான் உண்டு. அந்த யுக்தியால் மட்டுமே தான் பெரியாரைப் பார்க்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொன்னதெல்லாம் கொள்கையல்ல, யுக்தி என்று வீரமணி அவர்கள் விடுதலை இராசேந்திரனுக்கும், எஸ்.வி. இராசதுரைக்கும் பதில் சொன்னதை நான் மறக்கவில்லை.

அது யுக்தியா கொள்கையா என்பதை பெரியார் எழுத்திலேயே படித்து தெரிந்து கொள்கிற வாய்ப்பு பெரியாருடைய ‘குடிஅரசு நூல்கள் வெளி வருகிறபோது நமக்கு கிடைக்கும்.

உருவமில்லாத பொம்மையல்ல பெரியார். உயிருள்ள பெரியாரின் கொள்கைகள் நமக்கு இன்றியமையாதது என்றால், பெரியாரின் சிந்தனைக் களஞ்சியம் நூல்களாக வெளிவரும் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு ‘குடிஅரசு’ தொகுப்பு வெளி வரும் என்பது உறுதி.

தமிழக அரசு வீரமணியை காப்பாற்றுவதற்காகவாவது (கைதட்டல்) பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். எங்களுக்காகக்கூட அல்ல.

இத்தனையும் மீறி குடிஅரசு நூல்கள் வெளியிடுகிறபொழுது வீரமணி என்ன செய்வார் பாவம். அந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த நேரத்தில் உங்கள் நண்பர் வீரமணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கான நன்றிக் கடனை செலுத்துங்கள்.

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் பெரியார் நூல்கள் அரசுடையாக்கப் பட்டன என்ற அறிவிப்பு வரட்டும்.

பெரியார்வழியில் சமத்துவபுரம் கண்டவர், பெரியாருக்காக நீங்கள் நிறைய செய்திருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பெரியார் தன் வாழ்நாளில் தனி மனிதருக்கு சிலை வைக்க சொன்னார் என்றால் அது கலைஞருக்கு மட்டுந்தான்.

இன்றைக்கு நீங்கள் பெரியாருக்கு சிலை கூட வைக்க வேண்டாம். பெரியாரின் நூல்களை நிரந்தரமாக வரலாற்றிலே பதியச் செய்யுங்கள். வருங்கால தலைமுறைக்கு படிக்கக் கொடுங்கள். ஆய்வாளர்கள் அதைப் படித்து தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.

நன்றி: புரட்சி பெரியார் முழக்கம்

Tuesday, September 16, 2008

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழா தீர்மானங்கள்

தீர்மானங்கள்

1. இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அட்டூழியங்களின் விளைவாக அங்கு வாழ முடியாத நிலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியா உட்பட உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேற்கு நாடுகளில் அகதிகளாகக் குடியேறி உள்ள ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பிடப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாடுகளின் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதன் பேரில் அவர்கள் அந்நாட்டின் குடிமக்களாகக் கருதப்பட்டு அவர்களுக்குச் சொந்தமாகத் தொழிலும், வணிகமும் நடத்தும் உரிமைகளும், வேலை வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உரிமைகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் நமது சகோதர ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க முன் வந்து தனது மனித நேயக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் இங்கு அரசுகளால் வேண்டாத விருந்தாளிகளாகக் கருதப்படுகின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்தும் குடியுரிமையும் மறுக்கப்படுகிறது. தொழில் வணிகம் செய்யும் உரிமைகளும் கிடையாது. வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச உதவிகள் கூடக் கிடைப்பதில்லை. அவர்களின் வாழ்விடங்கள் சீர்கேடான நிலைமையிலும், சுகாதார வசதிகள் குறைவாகவும் உள்ளன. குழந்தைகளுக்குப் போதுமான கல்வி வசதிகளும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்படுவதில்லை.

இத்தகைய சீர்கேடுகளை உடனடியாகக் களைவதற்கு உதவும் வகையில் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3. தமிழ்நாட்டில் நூலகத்துறை முற்றிலுமாகச் சீரழிந்து கிடக்கிறது. நூலகங்களுக்குத் தேவையான நூல்களை வழங்குவதில் விருப்பு வெறுப்புகள் காட்டப்படுகின்றன. தரமான நூல்களுக்குப் பதிலாகத் தரமில்லாத நூல்கள் வாங்கப்படுகின்றன. போதுமான நூலகர்கள், உதவியாளர்கள் நியமக்கப்படாமல் நூலகங்கள் சரிவர இயங்காத நிலைமை உள்ளது. இந்த சீர்கேடுகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் நூலக ஆணைக் குழுவில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களையும், நல்ல திறனாய்வாளர்களையும் நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

4. உலகத்தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவிய இலக்கியப் பரிசுத் திட்டம் ஒன்றிளை அறிவிக்க முன்வருமாறு தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

5. 1974-ஆம் ஆண்டு இந்திய அரசினால் இலங்கை அரசுக்குக் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக தமிழக மீனவர்கள் சொல்லொணாத துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகி உள்ளனர். எனவே கச்சத்தீவை உடனடியாகத் திரும்பப் பெற்றுத் தமிழக அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.

6. கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக நமது கடல் எல்லைக்கு உள்ளாகவே 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் பெறுமான படகுகளும், வலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும், சேதமாக்கப்பட்ட படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கும் உரிய இழப்பீட்டினை சிங்கள அரசிடம் பெற்றுத் தருமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுடன் மொழி, பண்பாட்டு உறவு உடையவர்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. இதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

உலகத்தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும், பிரான்சு நாட்டில் நகராட்சி உறுப்பினராக பதவி வகிப்பவரும், பிரெஞ்சு குடிமகனுமான திரு. அலன் ஆனந்தன் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வந்தபோது விமான நிலையத்திலேயே அவரை இந்தியக் குடியேற்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இது போன்ற கசப்பான அனுபவங்கள் இதற்கு முன் வெளிநாட்டுத் தமிழர்கள் பலருக்கு நேர்ந்துள்ளனது.

இந்தியாவிலுள்ள பிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகள் ஒருபோதும் நிகழவில்லை. ஆனால் தமிழர்களுக்கு மட்டும் இத்தகைய அவமதிப்புகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. உலகெங்கும் பரந்து வாழ்ந்து தம் தமிழ்மொழி மூலமான படைப்பாற்றலை அந்நியச் சூழலிலும் தொய்ய விடாது வளர்த்துத் தாமாகவே கவிதை, கதை, கட்டுரை படைத்தும் தாம் வாழும் நாட்டின் மொழி நூல்களைத் தமிழாக்கியும் அவ்வவ்நாடுகளிலும் இந்தியாவின் அவ்வவ் மாநிலங்களிலும் பதிப்பித்து வெளியிடும் நூல்களையும் பருவ இதழ்களையும், தமிழ்நாட்டு நூலகங்களிலும் கிடைக்குமாறு தமிழக அரசு அந்த நூல்களையும் இதழ்களையும் ஆண்டு தொறும் வாங்கிடல் வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

9. உலகங்கெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் அடையாளங்களைப் பேணுமாற்றான் தத்தம் மழலைகளுக்கும் சிறார்களுக்கும் இளவல்களுக்கும் வார இறுதியில், பள்ளிகள் நடத்தித் தமிழ்மொழி, தமிழ் இசைமற்றும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைப் பயிற்றுவிக்க, நிதி உதவி வழங்கித் தமிழ் அடையாளப் பேணலை ஊக்குவிக்கின்ற ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆசுதிரேலிய பசிபிக் நாடுகளின் அரசுகளுக்கு இந்த மாநாடு நன்றி தெரிவிக்கின்றது.