Friday, March 14, 2008

சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும்: "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்"


சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை உள்ளிடக்கிய "தமிழ்ப் பாதுகாப்பு" இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க பல்வேறு இயக்கத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

சென்னையில் இன்று வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் இராமதாஸ், தலைவர் கோ.க.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர்கள் சீமான், தங்கர்பச்சான், தமிழர் தேசிய இயக்கத்தின் பிரதிநிதி பத்மநாபன், எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு இயக்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சிறிலங்காவுக்கு உதவும் இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டது.

அறிக்கை விபரம்:
கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தொடங்கிய இனப்பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. சபிக்கப்பட்ட இனமாக அங்கே தமிழினம் இனவெறியின் கோரமுகத்தை நாளாந்தமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சுமார் 4 தலைமுறைகள் கல்வி இல்லாமல், வேலை வாய்ப்பு இல்லாமல் ஒரு பிரிவினர் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் புலம்பெயர்ந்து நாடோடிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன்ர்.

உலகம் முழுவதும் இன, மொழி, மத உரிமைகளுக்காகப் போராடும் குழுக்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவர்கள் கூட, ஈழத் தமிழர்ப் பிரச்சினையை ஏதோ தீண்டத் தகாத விசயமாகக் கருதி புறக்கணித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு ஒன்று, ஈழத் தமிழர்களுக்கு ஒன்று என இரட்டை அளவுகோல் முறையை அவர்கள் கடைப்பிடிப்பது ஒருபுறம் வியப்பாகவும் மறுபுறம் கசப்பாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் மீதான மும்முனைத் தாக்குதலை இலங்கை இராணுவம் தீவிரமாக்கியுள்ளது. யுத்தத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நியதிகளைக் கூட காற்றில் பறக்கவிட்டு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சிறார் இல்லங்கள், குடியிருப்புக்கள் என குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த பாசிச நடவடிக்கைகளை உலகின் பல்வேறு நாடுகளும் கண்டித்து இலங்கை அரசுக்கு அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர்.

ஈழத் தமிழர்கள் வேறு நாட்டுக் குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் தமிழினத்தின் ஒரு அங்கம். இந்தியத் தமிழர்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்தவர்கள். அவர்களுக்கு ஒரு தீங்கு இழைக்கப்பட்டால் அது இங்குள்ள தமிழர்களின் உள்ளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும். இதனை யாராலும் மறைத்துவிட முடியாது.

அண்மைக்காலத்தில் இந்தியத் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பல செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வுகாண வேண்டும் என்பது இங்குள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

நோர்வே நாட்டு அமைதித் தூதுவர்கள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொண்ட இலங்கை அரசு, இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வைக்காண வேண்டும் என்ற வெறியுடன் ஈழத் தமிழர்கள் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அதற்கு உதவிடும் வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் இந்திய அரசு ஈடுபடக்கூடாது என்பது இங்குள்ள தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதற்கு இந்திய அரசே முன்முயற்சி எடுத்து செயல்பட வேண்டும்.
இந்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்குவதில் முழு மூச்சாக இறங்கியுள்ள இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது. ஆனால் அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்துக்கு அளித்து வரும் பயிற்சியும் சிறிய இராணுவ தளவாட உதவிகளும் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் இலங்கை அரசுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. எனவே இலங்கை இராணுவத்துக்கு அளித்து வரும் பயிற்சியையும் உதவிகளையும் இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பல்வேறு நாடுகளில் நடைபெறுவது போல் இலங்கையோ ஏதோ ஒரு யுத்தக் குழுவுக்கும் அரசு படைகளுக்கும் யுத்தம் நடைபெறவில்லை. இங்கே ஒரு இனம் தன்னுடைய அழிவைத் தடுப்பதற்காகக் களத்தில் நின்று போரிட்டுக் கொண்டிருக்கிறது.

அதை அடக்கி ஒடுக்கி, அந்த இனத்தையே இலங்கையின் வரைபடத்தில் இருந்து அகற்றிடும் முயற்சிகள் மூர்க்கத்தனமாக நடைபெற்று வருகின்றன. இதனை இந்திய அரசு உணர்ந்து தமிழ் இனத்தைக் காக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இலங்கையில் தமிழினம் அழிந்து போவதற்கு எந்த வகையில் துணையாக இருந்து விடக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் அணுகுமுறையும் நடவடிக்கைகளும் முற்றிலுமாக மாற வேண்டும்.

ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளைக் காத்திடும் வகையில் இந்திய அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதில் தமிழக அரசின் பங்கு மிகவும் முக்கியமானது.
கடந்த காலங்களில் மாநில அரசு முன் நின்று மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள்தான், ஒட்டுமொத்த தமிழகமே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டுக் குரல் கொடுப்பதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, தமிழக அரசு மெத்தனம் காட்டாமல், இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க நடுவன் அரசிடம் தக்க விதத்தில் எடுத்துரைக்க வேண்டும்.
அதற்குத் தமிழக மக்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

இலங்கை இராணுவத்தின் கொட்டம் அவர்கள் நாட்டோடு நின்று விடவில்லை. முன்பெல்லாம் என்றோ ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் இன்று தாக்குதல் நடைபெறாமல் ஒருநாள் கூட விடிவதில்லை. அத்துடன் நிற்காமல் மீனவர்களைக் கடத்திச் சென்றும் துன்புறுத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள்.

அந்தக் குடும்பங்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதற்கால்லாம் காரணம் இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான். எனவே தமிழக மீனவர்களுக்கு ஆண்டாண்டு காலமாகச் சொந்தமாக இருந்த கச்சத்தீவை மீண்டும் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இலங்கைக் கடற்படையின் இந்த அடாவடி செயல்கள், தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தியாவுக்கு சாவல் விடும் வகையில் உள்ளன.

இந்தியா தொடர்ந்து நிதானம் காப்பது அதனுடைய பெருமைக்கும் பலத்தும் இழுக்காவே முடியும். இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எந்த ஒரு பிரச்சினையிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை இலங்கை எடுத்ததில்லை என்பதை இந்திய அரசும் இலங்கைப் பிரச்சனையில் அரசுக்கு ஆலோசனை கூறி வரும் ஆலோசகர்களும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இலங்கை அரசு செயல்பட்ட முறைகளைப் புரிந்து கொண்டாலே, நிகழ்காலத்தில் எந்த நிலைபாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்பது தெளிவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்றோர்:
*தமிழின விரோதப் போக்கைக் கடைபிடித்து வரும் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்

*தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மற்றும் ஈழத் தமிழர் ஆதரவு ஆகியவை தொடர்பில் தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முதற்கட்ட போராட்டங்களை நடத்தி அதன் பின்னர் சென்னையில் பாரிய அளவிலான போராட்டத்தை நடத்தலாம் என்பது தொடர்பிலும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த செயற்பாடுகளை எந்த அமைப்பின் பெயரில் முன்னெடுத்துச் செல்வது என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மருத்துவர் இராமதாசும் தொல். திருமாவளவனும் முன்னர் நடத்தி வந்த "தமிழ் பாதுகாப்பு" இயக்கத்தின் பெயரிலேயே தொடர்ந்தும் ஈழத் தமிழர் ஆதரவு செயற்பாடுகளை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்