Thursday, February 7, 2008

சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்


சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்திய நாடாளுமன்றம் முன்பாக புதன்கிழமை அன்று (06.02.008) முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.

பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-

இனப்படுகொலைக்குத் துணை போகாதே!

ஆயுத உதவி வழங்காதே!

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- இந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.


பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துக: இந்திய அமைச்சரிடம் பெரியார் திராவிடர் கழகம் நேரில் வலியுறுத்தல்




சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று 10 லட்சம் தமிழ் மக்கள் கையெழுத்திட்ட படிவங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் வியாழக்கிழமை அன்று (07.02.2008) நேரில் வழங்கப்பட்டது.


புதுடில்லியில் ஏ.கே.அந்தோணியின் இல்லத்தில் மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச் செயலாளர்களான விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன், பெரியார் தி.க. தலைமைக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சா.துரைசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்திய அரசு வழங்கக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் பல லட்சக்கணக்கானோர் கையெழுத்திட்ட படிவங்களும் ஏ.கே.அந்தோணியிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் நேற்று புதன்கிழமை இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டத்தையும் பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, February 2, 2008

என் உறவே
உன் இன்னல்கண்டு
என்னால் அழமட்டுமே
முடியும்...

ஒரு அடிமையிடம்
இதைத்தவிர
வேறெதுவும்
எதிர்பார்த்து
ஏமாறாதே...

உன் இலக்கு
உன் நெஞ்சுரத்தில்
கூர்மையடைந்திருப்பதையும்
நீ அடையும்
தூரத்திலேயே
அது இருப்பதையும்
நானறிவேன்...

முன்னேறு...

உன் மகிழ்ச்சியிலும்
என்னால் பங்கெடுக்க
முடியாது...

அடிமை
மகிழ்ச்சியோடு
இருப்பதை
எந்த முதலாளியும்
விரும்பமாட்டான்...

அனைத்திற்கும்
என்னால்
கண்ணீர்சிந்த மட்டுமே
முடியும்...

கங்காணி
பார்த்துவிடப்போகிறான்...

தமிழ்நாடன்

புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து தமிழக மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்: தொல்.திருமாவளவன்



தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடி புதைப்பு மற்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ஆகியவற்றுக்காக சிறிலங்கா அரசு மீது இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.


சிறிலங்காவைக் கண்டித்து முழக்கங்களை திருமாவளவன் எழுப்ப திரண்டிருந்தோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது:
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவ தமிழர்கள் கடந்த 20ஆம் நாள் 599 படகுகளில் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையினர் சுற்றி வளைத்திருக்கிறார்கள். ஏராளமான மீனவத் தமிழர்கள் தங்களது படகுகளை விரைந்து ஓட்டி வந்து கரையேறிவிட்டாலும் சில படகுகள், சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையின் சுற்றிவளைப்புக்குட்பட்டு 12 பேர் பிடிபட்டனர்.


அந்த 12 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நிறுத்தி சிங்கள இனவெறி அரசு சிறைபிடித்து வைத்தது. படகுகளையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இந்த நிலையில்தான் இராமேஸ்வரம் மீனவத் தமிழர்கள் கடந்த 25 ஆம் நாள் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலே ஈடுபட்டனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சிகரமான செய்தியும் கசிந்தது.


என்ன செய்தி?


சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள்- சிங்க இனவெறி கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்கிறார்கள் என்ற செய்தி.
ஒரு உண்மையை இங்கு நாம் உணர வேண்டும்
இந்திய அரசுக்கு தெரியாமல் சிங்கள அரசு கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்க முடியாது. ஏனெனில் சிங்களக் கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்ட செய்தி அறிந்ததும் எதிர்வினையாற்றி இருக்க வேண்டும் இந்திய அரசு.


ஆனால் இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன?
"தமிழ்நாட்டு மீனவர்களே நீங்கள் மீன்பிடிக்கச் செல்லாதீர்கள்- சிங்கள அரசு கடலில் கண்ணிவெடிகளை போட்டிருக்கிறது" என்று சொல்லுகிறார்கள். இது எவ்வளவு கேவலமானது- அருவருப்பானது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.


முதல் உலக யுத்தத்தின் போதுதான் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் உண்டு.
இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்ற 1945-1949 வரையிலான காலகட்டத்தில் பாரசீக வளைகுடாக் கடற்பரப்பில் கடல் கண்ணிவெடிகளை போட்டிருந்ததாகவும் அந்த கண்ணிவெடிகளை 1988 ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல் ஒன்று மிதித்ததாகவும் அதில் அந்தக் கப்பல் சேதமடைந்ததாகவும் செய்திக்குறிப்புகள் சொல்லுகின்றன.


கடல் கண்ணிவெடிகள்- நிலக்கண்ணிவெடிகளைப் போன்றதல்ல. ஆனால் கடல் கண்ணிவெடிகள் மிதந்து கொண்டே- நகர்ந்து கொண்டே இருக்கும். ஓரிடத்தில் இருக்காது.


ஆகவே மிகப் பெரிய ஆபத்து அது. தீங்கு விளைவிக்கக்கூடியது.
இரண்டாவது- நிலத்தில் புதைக்கப்படுகிற கண்ணிவெடிகளின் ஆயுட்காலம் குறைவு.


ஆனால் கடலிலே மிதக்க விடுகிற- புதைக்க விடுகிற அந்தக் கண்ணிவெடிகளின் ஆயுள் மிக நீண்டது என்பது பாரசீகுடா வளைகுடா கண்ணிவெடிகள் வெடித்ததிலிருந்து உணரமுடிகிறது.
யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு என்பது சிறிலங்காவுக்குச் சொந்தமானது.


கச்சதீவு என்பது இந்திய அரசுக்குச் சொந்தமானது.
ஆனால் இந்திய அரசு- தமிழ்நாட்டைக் கேட்காமல்- தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கேட்காமல்- தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் தமிழ்நாட்டினது ஒப்புதல் பெறாமல் 1970-களின் தொடக்கத்திலே கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது இந்திய அரசு.


கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடிகளைப் போடுவதற்கு சிங்கள அரசுக்கு யார் அதிகாரம் தந்தது? எதற்காகக் கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள்?
கண்ணிவெடிகளைப் போடுவது என்பதுகூட போர் நடைபெறுகிற சூழல்தான்.
இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே போர் மூளுகிற நடைபெறுகிற சூழலா உள்ளது?


விடுதலைப் புலிகளுக்கு எதிராக கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள் என்றால் அது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இடையூறு இல்லாது இருக்க வேண்டும் அல்லவா?


அப்படிக் கண்ணிவெடிகளைப் போட்ட பின்னரும் கூட இந்திய அரசு ஆத்திரப்படவில்லை.


இந்திய அரசு - கண்டன அறிக்கை வெளியிடவில்லை.
கண்ணிவெடிகளை அகற்ற இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை எச்சரிக்கிறது. மிகக் கேவலமான அணுகுமுறை இது.


கடலிலே கண்ணிவெடிகளை போட்டிருப்பது என்பது சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டிய ஒரு நடவடிக்கை.


இந்நேரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.


சிங்கள இனவெறி அரசானது பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கூடிக் குலாவினாலும் இந்திய அரசுக்கு எதிராக செயற்திட்டங்களை முன்னெடுத்தாலும் வலிந்து வலிந்து சிங்கள அரசுக்குத் துணை போகிறது.அதற்கு என்ன காரணம் எனில் தமிழீழம் அமைவதைத் தடுப்பதுதான்.


ராஜீவ் காந்தி கொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்படவில்லை என்பதே உண்மை.


உண்மையில் தமிழீழம் அமைவதில் இந்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை.


தமிழீழம் அமைவதை இந்திய அரசு விரும்பவில்லை.
சிங்கள அரசு - ஒரு கட்டத்திலே போனால் போகட்டும்- நம்மிடத்திலே இருப்பவன் கூலி வாங்கிக் கொண்டு போரிடுகிறான் - புலிகளோ உயிரைக் கொடுத்து சண்டை போடுகிறார்கள். எனவே ஈழத்தை பிரித்துக் கொடுத்துவிடுவோம் என்று அவன் கீழிறங்கி வந்துவிட்டால் தனக்கு ஆபத்து என இந்தியா நினைக்கிறது.


இரு பெரிய அரசுகளுக்கு தமிழீழம் அமைவதிலே விருப்பம் இல்லை.


1. அமெரிக்க அரசு.


2. இந்தியப் பேரரசு.


தமிழீழம் அமைவதை அவர்கள் விரும்பவில்லை- அதனாலேயே தடை விதித்திருக்கிறார்கள்.


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக புலிகள் மீது தடை விதிக்கவில்லை.
அப்படியானால் ராஜீவைக் கொன்றதற்காக அமெரிக்கா தடை விதித்தது? கனடா தேசம் ஏன் தடை விதித்தது? ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது ராஜீவைக் கொன்றதற்கா?


ஏன் தடை விதித்திருக்கிறார்கள் என்றால் "அமெரிக்க ஏகாதிபத்திய"த்தின் நெருக்கடியால்தான் தடை விதித்திருக்கிறார்கள்.


இந்திய அரசு தடை விதித்திருப்பதற்கு 2 காரணங்கள் உண்டு.


1. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது தமிழீழத்துக்கு எதிராக இருக்கிறது- தமிழீழம் வந்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் எழுச்சிப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது.


2. இந்திய அரசாங்கமும் அமெரிக்க அரசாங்கமும் கட்டுப்பட்ட அரசாங்கம். இந்தியாவின் பொருளாதார- வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்ற இடத்தில் அமெரிக்கா உள்ளது.


இதெல்லாம் காங்கிரசின் ஞானசேகரனுக்கும் அண்ணன் இளங்கோவனுக்கும் தெரியாமல்தான் ராஜீவ் காந்தி- ராஜீவ் காந்தி என்று எதற்கெடுத்தாலும் சொல்லுகின்றனர்.


இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தவறு என்றுதான் சொல்லுகிறோம்.


என் இனத்திற்கு எதிராக நீ முடிவெடுக்கிறாய்- யாரைக் கேட்டு நீ முடிவெடுப்பது?


வெளிவிவகாரக் கொள்கை என்றால் 4 அதிகாரிகளை வைத்து முடிவெடுப்பதா?


அந்த அதிகாரிகளில் ஒருவனாவது தமிழன் உண்டா?


தமிழ்நாட்டு மக்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?


தமிழ்நாட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கருத்து கேட்டீர்களா?


தமிழ்நாட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்டிருக்கிறீர்களா?


நாடாளுமன்ற மக்களவை- மாநிலங்களவையிலே விவாதித்திருக்கிறீர்களா?


தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?


யாரிடத்திலே கேட்டீர்கள்?


தமிழ்நாட்டு மக்களிடத்திலே பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்-


இந்தியப் பேரரசுக்கும்


இந்திய தேசிய காங்கிரசுக்கும் துணிச்சல் இருந்தால் "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்று அறிவித்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்! முடியாது உங்களால்.


"தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" பகிரங்கமாக பிரகடனம் செய்துவிட்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க துணிச்சல் இருந்தால் சந்தியுங்கள்!


காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன் தனியாக நின்றால் 4 வாக்குகள் வாங்குவாரா?


காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் தனியாக நின்றால் 3 வாக்குகள் வாங்குவாரா?


தி.மு.க.வின் தயவிலே வெற்றி பெற்றுவிட்டு இன்று தி.மு.க. அரசுக்கே நெருக்கடி கொடுப்பதா?


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1967ஆம் ஆண்டு சட்டம் பற்றி சொல்லியிருக்கின்றார்கள். அ.தி.மு.க, காங்கிரஸ் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.


உங்கள் தயவு இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது. காங்கிரசுக்கு இருக்கிற வாக்கு வங்கி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கிதான்.
இந்தத் திருமாவளவன் எழுப்பியிருக்கும் கருத்துரிமை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கருத்துரிமைக்காக.


நாங்கள் கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்தியதே முதல்வர் கலைஞருக்காகத்தான்.


தமிழ்நாட்டு முதல்வர்- 4 வரி கவிதை எழுதினால் அது "அம்மா"வுக்குப் பொறுக்கவில்லை.


ராஜீவ் கொலைக்கும்- புலிகள் மீதான தடைக்கும் இந்திய அரசினது வெளிவிவகாரக் கொள்கைதான் காரணம். இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை அச்சப்படுகிற கொள்கை.


தமிழீழம் அமைந்துவிட்டால் தமிழ்நாடு- தனிநாடாக விடும் என்று கற்பனையில் அச்சப்படுகிறார்கள்.


தமிழ்நாடு தனிநாடாகி விடும் என்று நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்-?
அப்படியானால் அதற்குரிய தேவை இருக்கிறது என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?


அதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளன என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?
தமிழ்நாடு- தனிநாடாகது என்று சொல்லக்கூடிய திராணியும் தெம்பும் ஏன் உங்களுக்கு இல்லை-


மறுபடியும் சொல்கிறேன்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இருந்தால் தமிழ்நாட்டின் ஆறரைக் கோடி மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள். இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள்.
தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும்- புலிகள் இயக்கத்தை தடை செய்யுங்கள் என்று-


தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும் தமிழீழம் அமைவதனை நாங்கள் விரும்பவில்லை என்று-
நாங்கள் வாயை மூடிக்கொள்கிறோம். "புளி"யை கரைத்து ரசம் வைப்பதைக் கூட நாங்கள் நிறுத்தி விடுகிறோம்.


தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழினத்தினது எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?
சட்டம் கொண்டு வந்தால் அதற்கு கட்டுப்பட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை-


அது தவறு என்றால் தவறு என்று சொல்லக்கூடிய உரிமை எங்களுக்கு உண்டு.


அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு.


இந்திரா அம்மையாருக்கும் சிறீமாவுக்கும் இடையேயான ஒப்பந்தமானாலும் சரி தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா?


கடல் எல்லைகள் வரையறை தொடர்பில் தமிழ்நாட்டு அதிகாரிகளின் கருத்து கேட்கப்பட்டதா?


கச்சத்தீவை தாரை வார்க்கிற அந்த ஒப்பந்தம் தொடர்பில் தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு முதல்வராக அப்போதிருந்த கலைஞரிடத்திலே சொல்லிவிட்டா செய்தீர்கள்?


ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் போடப்பட்டதே- அது தமிழீழம் தொடர்பிலானது. அந்த விடுதலைப் போராளிகளிடத்தில் கருத்து கேட்டா போட்டீர்கள்?


அந்த ஒப்பந்தத்திலே மேதகு பிரபாகரன் கையெழுத்திட்டாரா?


ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகள் கட்டுப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? என்ன நீதி?


அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை சிங்கள அரசு மதித்திருக்கிறதா? நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறார்கள்?


கச்சத்தீவு கடற்பரப்பில் எமது மீனவ தமிழர்கள் சுதந்திரமாக மீன்பிடித்துவிட்டுத் திரும்ப வேண்டும்.


அதற்காக சிங்கள இனவெறி அரசு இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.


கடலடியில் மிதக்கவிடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கண்டன உரையாற்றினார்.