Wednesday, January 28, 2009

"இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" தொடக்கம்: நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம்

இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம் நடத்த "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்பினரும், மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை தியாகராய நகரில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவர் மருத்துவர் இராமதாஸ்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.சத்யா

வழக்கறிஞர் கே.இராதாகிருஷ்ணன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், நிரந்தர அமைதி ஏற்படவும் தமிழகத்தில் என்னென்ன போராட்டங்களை நடத்துவது என்று இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த விவாதம் நடந்தது.

அதன் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இன்று கூடி கலந்து ஆலோசித்ததில் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளை வெளியிடுவதற்காக அந்த அமைப்பு இருக்கும். அந்த அமைப்பில் பங்கேற்பதற்காக மற்றவர்களையும் அழைக்க வேண்டும். இப்போது இங்கே வந்திருப்பவர்கள், "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் இப்போதிருந்து எங்களின் நடவடிக்கைகளை தொடங்குகிறோம். அதற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்க, பழ.நெடுமாறனை வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

காந்திமறைந்த நாளில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக நாளை இங்கே இருக்கின்ற 5 பேரும், மற்றும் இங்கே வர முடியாமல் இருக்கக்கூடிய மற்ற தலைவர்கள், அமைப்புக்கள் அனைவரையும் அழைத்து, இலங்கையில் எமது சகோதர தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற அந்த வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதனை தெரியப்படுத்துகின்ற வகையில் நாங்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான தோழர்களும் கையில் கறுப்புக்கொடி ஏந்தி, அமைதியாக அங்கே மாலை 4:00 மணியில் இருந்து 6:00 மணி வரைக்கும் எமது மௌன விரதத்தை நடத்தவுள்ளோம்.

சென்னையில் ஒரு மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10:00 மணிக்கு ஒரு விரிவான கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் வகுக்க இருக்கிறோம்.

அனைத்து அரசியல் கட்சிகள்

அனைத்து சமுதாய சங்கங்கள்

வணிகர் சங்கங்கள்

மகளிர் சங்கங்கள்

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

இளைஞர் சங்கங்கள்

தொண்டு நிறுவனங்கள்

வழக்கறிஞர்கள்

மருத்துவர்கள்

பொறியிலாளர்கள் சங்கம்

அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம்

திரைப்பட நடிகர், நடிகைகள்

திரைப்பட இயக்குனர் சங்கம்

பத்திரிகையாளர் சங்கம்

விவசாய சங்கங்கள்

என அனைத்து தரப்பினரையும் அழைத்து ஒரு விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை அந்த கூட்டத்தில் நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.

தொடர்ந்து, எமது இந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களை திரட்டி நாங்கள் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அது தொடர்பாக எல்லோரிடமும் பேசிவிட்டு அறிவிக்கப்படும் என்றார் பழ.நெடுமாறன்.

நன்றி: புதினம்.காம்

Friday, January 23, 2009

சிறிலங்காவுக்கான அனைத்து உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்: டி.ராஜா

சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா அரசே, இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்து''

'' இந்திய அரசே, போர் நிறுத்தத்திற்கு சிறிலங்கா அரசை நிர்ப்பந்தம் செய்''

என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மெமோறியல் மண்டபம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், சென்னை மாவட்ட செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் போர் ஒரு குரூரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. கிளிநொச்சி, ஆனையிறவு பகுதிகளை கைப்பற்றியதற்கு பின்னால் முல்லைத்தீவை சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டிருக்கிறது. பல லட்சம் தமிழ் மக்கள் ஒரு சின்ன நிலப்பகுதியில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான், வானூர்தி தாக்குதல், தரைவழித் தாக்குதல், கடல்வழி தாக்குதல் என இத்தாக்குதல்கள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கை போர் இந்த நிலையை எட்டியிருக்கிற போது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சும்மாயிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சிறிலங்கா அரசுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இலங்கை போரில் இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்களே பங்கெடுத்து வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாது இந்திய கப்பற்படை சிறிலங்கா கடற்படைக்கு தேவையான இரகசிய தகவல்களை சொல்லி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை ஆளும் தி.மு.க. அங்கே நடைபெறுவது இனப்படுகொலை என்று தொடர்ந்து கூப்பாடு போடுகிறது. ஒப்பாரி வைக்கிறது. கூக்குரலிடுகிறது. சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மன்மோகன் அரசு சட்டமன்ற தீர்மானத்தை சட்டை செய்வதாக இல்லை.

அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றும் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை போட்டிருக்கின்றனர். என்ன, இறுதி வேண்டுகோள்.

கெஞ்சி வாழ்வதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல.
உரிமையோடு வாழ்வதுதான் ஜனநாயகம்.


சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி உதவிகள் நிறுத்தவில்லையானால், நாம் அவர்கள் ஆள்வதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

முல்லைத்தீவு வீழ்வதற்கு முன்னால், அங்கு கிளஸ்டர் குண்டுகள் மழை போல் குவிவதற்கு முன்னால், மக்கள் பிணங்களாக குவிக்கப்படுவதற்கு முன்னால், இந்திய அரசு போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமாக அது வளரும். இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அது நடைபெறும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் ஓரணியில் திரள்வோம்: இயக்குநர் பாரதிராஜா

ஈழத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 3 லட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லை எனில், உலகிலேயே கொடூரமான மனித படுகொலை முல்லைத்தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.

முதலமைச்சர் கருணாநிதி பல சமயங்களில் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோளை தற்போது சட்டசபை மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பிரச்சினை என்றால், அனைவரும் ஓரணியில் திரள்வோம். ஒட்டுமொத்த சமூகமும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து, இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவர வழிவகை செய்யவேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Thursday, January 22, 2009

தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசின் நிலை மாறவே மாறாது: சிறிலங்கா

இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது என்று சிறிலங்காவின் அமைச்சர் லக்ஸ்மன் அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

வடக்கில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதன் முதற் கட்டமாக இராமநாதன் சுதந்திரபுரம், அருணாசலம் வெற்றிபுரம், கதிர்காமர் எழுச்சிநகர் போன்ற பெயர்களில் மூன்று விடுதலைக் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.

தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் சிறிலங்கா மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு சார்பாகவே உள்ளது.

வடக்கில் போர் நடைபெறும் பிரதேசங்களுக்கான அரசாங்கத்தின் உணவுப் பொருள் விநியோகம் குறித்து இந்தியா திருப்தி அடைந்துள்ளது என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Tuesday, January 20, 2009

சிங்கள அரசுக்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்து தமிழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கே.வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (21.01.09) முதல் தமிழகம் எங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி புதினம்.காம்.

Monday, January 19, 2009

இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும் கண்டனப் பேரணி

அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) முற்பகல் 11:00 மணிக்கு பேரணி நடைபெறவுள்ளது.

மிகவும் முக்கியமான இன்றைய காலத்தின் தேவை கருதி போதிய முன்னறிவுப்பு வழங்க அவகாசம் ஏதும் இல்லாததால் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தப்படும் இப்பேரணியில் அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தற்போது நிகழும் தமிழின படுகொலைப் போரை உடனடியாக நிறுத்தும் படியும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் அனைத்து விதமான போர் தொடர்பான உதவிகளையும் புலிகள் இயக்கம் தொடர்பான உளவுத் தகவல்களையும் உடனடியாக நிறுத்தும்படியும் இந்தியாவைக் கோருவதுடன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் இருக்கும் தடையை உடனடியாக நீக்கும் படியும் இப்பேரணியின் போது அமெரிக்கத் தமிழர்கள் இந்தியாவைக் கோருவர் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் முடிவில் மேற்கூறப்பட்ட கோரிக்கைகளுடன், தமிழீழம் எப்போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் என்ற வாதத்தையும் வலியுறுத்தும் மனுவொன்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவரிடமும் அவர் ஊடாக இந்தியப் பிரதமர் மற்றும் சோனியா காந்தி அம்மையாரிடமும் கையளிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நன்றி புதினம்.காம்.

Friday, January 16, 2009

என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன்: திருமாவளவன்

தமிழ்நாடு காவல்துறை என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன் என்று உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்டு வரும் திருமாவளவன் தண்ணீரை மட்டுமே அருந்துகின்றார். இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.


திருமாவளவனின் உடல்நிலையை இன்று பரிசோதித்த மருத்துவர்கள் குழு இன்சுலின் அளவு சற்று குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இரவு மேடையிலேயே உறங்கினார். அவரது கட்சியின் தொண்டர்கள் விடிய, விடிய விழித்து இருந்தனர்.

தொண்டர்களிடம் அவர், "நீங்கள் யாரும் உண்ணாநிலை இருக்க வேண்டாம். நான் மட்டும் இருக்கிறேன்." என்று கேட்டுக்கொண்டார்.

"இந்த போராட்டம் தி.மு.க.வுக்கு எதிராகவோ, தமிழக அரசுக்கு எதிராகவோ கிடையாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது.


பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி பேசமாட்டார். சார்க் மாநாடு பற்றி பேசவே சிறிலங்கா வருகிறார் என்று அந்நாட்டின் அமைச்சர் சொல்கிறார். இதனை மத்திய அரசாங்கமும் மறுக்கவில்லை.




இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட மாட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டாலோ, வேறு நெருக்கடி உண்டானாலோ தொண்டர்கள் அமைதியுடன் கட்டுப்பாடு காக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்றும் கூறினார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

நாளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மகளிர் விடுதலை சிறுத்தைகளும் இதில் ஒருங்கிணைந்து பங்கேற்க வேண்டும்.

காவல்துறையினர் ஒருவேளை என்னை கைது செய்தாலும், இலங்கை போர் நிறுத்தத்தை கைவிட கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறேன்.

நேற்று என்னை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்தார். அப்போது உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராதாஸ் இன்று தொலைபேசி என்னிடம் பேசினார். அப்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வேறு முறையில் முயற்சி செய்வோம். எனவே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் என்பதை கைவிட வேண்டும்'' என்று கூறினார். இது குறித்து எங்கள் அமைப்புடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றார் அவர்.

திரையுலகத்தைச் சேர்ந்த விஜய டி.இராஜேந்தர், இயக்குநர்களான பாரதிராஜா, செல்வமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம், மூர்த்தி உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

உண்ணாநிலைப் போராட்ட மேடையில் நடிகர் மன்சூர் அலிகான், நிர்வாகிகள் கலைக் கோட்டுதயம், சிந்தனை செல்வன், திருமாறன், வன்னியரசு, பாவரசு, பாவலன், ஆர்வலன், உஞ்சை அரசன், சேகுவேரா, பார்வேந்தன் உள்பட பலர் அமர்ந்திருந்தனர்.

நன்றி புதினம்.காம்

Tuesday, January 13, 2009

திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்தியா உடனடியாக தலையிட்டு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தவேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இப்போராட்டத்திற்கான நேரம், இடம், காலம் என்பன பற்றிய விபரம் தீர்மானித்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் தெரியவருகிறது.
அதேவேளை திருமாவளவன் எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் இப்போராட்டத்தை தொடங்கவுள்ளார் என சென்னை உள்ளூர் செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழ்வின்.காம்

Monday, January 5, 2009

முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர்: திருமாவளவன்

முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.

6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை நேரில் போய் சந்தித்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையிலும் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தாமல் உள்ளது.

இலங்கை முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்று இருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை இது ஒரு பின்வாங்கலே தவிர பின்னடைவு அல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி நடந்துள்ளது. பின்னர் விடுதலைப் புலிகள் கொரில்லா போர் முறை மூலம் தாக்குதல் நடத்தி சிங்கள படைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

அதே போல் கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றுவார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகஅரசு ஆழ்ந்து சிந்தித்து தமிழ் இனத்தை பாதுகாக்க இந்த நெருக்கடியான சூழ்நிலையில் துணிச்சலான முடிவெடுக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தேர்தல் அரசியலை மறந்து தமிழ் உணர்வு உள்ள அனைத்து கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட இருக்கிறது. இதற்காக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறேன்.

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வெறும் பகல் கனவு. அவரை உயிருடன் பிடிக்க முடியாது. தப்பித்து ஓடவும் மாட்டார். எதிரியிடம் மண்டியிடாமல் தமிழ் மக்களுக்காக இறுதிவரை போராடி உயிரை விடுவேன் என்று பிரபாகரனே கூறி இருக்கிறார். எனவே அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வீரப்ப மொய்லியின் அற்ப ஆசை நிறைவேறாது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுக ஏற்கனவே பல தியாகங்கள் செய்திருக்கிறது என்றார்.

நன்றி: தமிழ்வின்.காம்