Tuesday, April 1, 2008

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: இந்தியப் பிரதமருக்கு பா.மக. நிறுவனர் இராமதாசு கடிதம்

எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழர்களின் நியாயமான விருப்பங்களுக்கு இடமளிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழர்களை அடிமைப்படுத்துகிற, அழித்தொழிக்கிற திட்டத்தை மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.

இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இப்போது உயிரற்றுப் போய்விட்டது. நோர்வே நாட்டின் அமைதி முயற்சியில் உருவான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த 2002 ஆம் ஆண்டின் ரணில் விக்கிரமசிங்க - பிரபாகரன் ஒப்பந்தம், இலங்கை அரசால் இப்போது குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இலங்கை அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசாகிவிட்டது. அராஜக காட்டாட்சியாகி விட்டது. மனிதகுலத்துக்கே அது வெட்கக்கேடாகி விட்டது. தன் சொந்தத் தமிழ்க் குடிமக்களையே மிரட்டி நடுங்க வைக்கும் அரசாகி விட்டது.

இந்தப் போர்வெறி நோக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக் குவித்து வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் இப்போது அந்நாட்டின் தூதுவராகக் கொழும்பில் இருக்கிறார். தன் போர்ப்படை நோக்கங்களுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. இலங்கைக்கு சீனாவின் ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் என்ற போர்வையில், இலங்கைக்கு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சியையும் அமெரிக்கா அளித்து வருகிறது. இலங்கையின் இந்த ஆயுதத் தொகுப்புக்கு, இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக நாங்கள் அறிகிறோம்.

இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழு மூச்சான போரை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாக, இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை குறிவைத்துத் தாக்கி கொன்று வருகிறது.

இந்தியா மட்டுமே அண்டை நாடு என்றிருக்கும் நிலையில், தேவையே இல்லாத நிலையில், சுப்பர் சொனிக் மிக் போர் விமானங்களை அண்மையில் இலங்கை வாங்கியிருப்பதாக அறிகிறோம்.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு, இப்போது ஏறக்குறைய தமிழ் மக்களே இல்லாத வெற்றிடம் ஆக்கப்பட்டுவிட்டது. கருகிய மனித உடல்கள், எரிக்கப்பட்ட பயிர்கள், தாவரங்கள், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், குண்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட குழிகள், இடிபாடுகள், சாலைப் பள்ளங்கள் ஆகியவைதான், 5 ஆயிரம் ஆண்டுக் கால தமிழ் மொழி, பண்பாட்டின் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்று எஞ்சியிருப்பவை. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.

தங்களின் இயற்கையான, மரபான சூழலில் தமிழ் மக்கள் செழித்து வாழ்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகியவையும் இப்போது சாவும், அழிவும் மிகுந்த பகுதிகளாகிவிட்டன.
8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.

இலங்கை அரசின் தூண்டுதலால், அரசியல் உள்நோக்கத்துடன் மனித உரிமைகளை மீறி வருவோர், தொடர்ந்து கொலைகள் செய்வதிலும், ஆட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியை விரும்பும் அரசியல்வாதிகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். வெள்ளை நிற வான் ஆட்கடத்தல் என்று அழைக்கப்படும் ஆட்கடத்தல்கள் அரசின் உயர் தலைவர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன.

இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்குப் போர்ப்படை மூலம் தீர்வுகாண முயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஆகும். தமிழர்களின் தாயகமான 20 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை கைப்பற்ற வேண்டும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழர்களை எவரேனும் எஞ்சியிருந்தால் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், இலங்கைத் தீவு முழுவதையுமே சிங்களப் பெளத்தர்களின் நாடாக்க வேண்டும் என்பனவே இலங்கை அரசின் கொள்கைத்திட்டங்கள் ஆகும்.

இந்தியாவில் உள்ள 6 கோடி தமிழர்கள், பாக்கு நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சொந்த சகோதரர்களும், சகோதரிகளும் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு, பொறுத்திருக்க முடியாது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கடலின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும், ஆதரவும் மிகவும் வலுவானவை, ஆழமாக வேரோடியவை.

அன்புள்ள பிரதமர் அவர்களே, எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வரலாற்றில் அவர்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இப்போதே இந்தியா செயலாற்ற வேண்டும். போர் வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்ய வேண்டும். பேச்சு நடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது, தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

No comments: