Saturday, April 5, 2008

கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல்!

கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல் ஏன்?
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்
தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும்.

சாதாரணமாக குடிடிநீரில் லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும். அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும்.
4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும். பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும்.

இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.

ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது.

இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது.

பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம்
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன.

மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர்.

தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது.

இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்.

நன்றி: புதினம்.காம்

No comments: