Tuesday, November 18, 2008

200-சிங்கள படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம்

வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

படைத்தரப்பில் பல நூறு பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதில் முகமாலை மற்றும் மாங்குளம் களமுனைகளில் படைத்தரப்பு நேற்று கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.

அரச தரப்பு தகவல்களை வெளியிடுவதற்கு மறுத்து வருகின்றது.

எனினும், அதிகளவான படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்திருந்தன.

வழமைக்கு மாறாக நேற்று அதிகளவான படையினர் அனுமதிக்கப்பட்டிப்பதாக சிறீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்திருந்தன.

இதனிடையே, பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில், கடந்த மூன்ற நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியை 63 ஆவது படையணியினர் கைப்பற்றியுள்ளதாக கடந்த திங்கட்கிழமை தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம், நேற்று அங்கு இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று அந்த கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்

No comments: