Monday, February 16, 2009

இலங்கைப் பிரச்னை மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும்: பழ. நெடுமாறன்

திருச்சி, பிப். 16: இலங்கை பிரச்னை மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

""இலங்கையில் போர் நிறுத்தம் கோரி செவ்வாய்க்கிழமை நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

பிரபாகரனை இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியா என்று கேட்கிறார்கள். அங்கு கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும், தமிழ்த் தேசிய முன்னணி அமைக்கப்பட்டு அந்த முன்னணியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே பிரபாகரன்தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதி என்று அறிவித்திருக்கின்றனர். இலங்கை மக்களின் முடிவை, இங்குள்ளவர்கள் ஏற்க மறுத்து கேள்வி எழுப்புகின்றனர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் முழு தமிழ் இன அழிப்புக்கு வழிவகுத்துவிடும். ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களைக் காக்கும் நோக்கம் கொண்டதல்ல; இலங்கைக்கு உதவுவதை மீண்டும் உறுதிப்படுத்துவதே.

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு, இந்தியா சொல்லுமென்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை முடக்கும் நிலை தொடருமென்றால், அது மாநில அரசுக்கு எதிரான போராட்டமாகவும் மாறும்.

தமிழகத்தின் பெரிய கட்சிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலின்போதுதான் உண்மை நிலவரம் தெரியும் என்றார் நெடுமாறன்.

நன்றி: தினமணி

No comments: