Monday, December 14, 2009

எஸ்.எம்.கிருஷ்ணா கருத்து இரக்கமற்றது: ஜெயலலிதா

சென்னை, டிச. 14: கச்சத் தீவு பிரச்னையில் உண்மை நிலை தெரியாமல் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்த கருத்து இரக்கமற்றது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"இந்திய அரசைப் பொருத்தவரையில் கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது' என நாடாளுமன்றத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியிருக்கிறார். இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள கச்சத் தீவு ராமநாதபுரம் மன்னரின் சொத்தாக (சர்வே எண்: 1250) இருந்தது. வறண்ட கச்சத் தீவை வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், பிடிபட்ட மீன்களை இனவாரியாக வகைப்படுத்தவும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்தி வந்தனர்.

இந்தத் தீவில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் கட்டிய அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு மார்ச் இறுதியில் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் வட இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.

இது போன்ற காலங்களில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மத குரு செல்வார் என்று வரலாற்றுப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் கச்சத் தீவு மீது இந்தியாவுக்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்குச் சான்றாக விளங்குகின்றன. ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறான கருத்தை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

"பாம்பனுக்கு கிழக்கே 18 மைல் தொலைவில் கச்சத் தீவு உள்ளது. பாம்பன் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. கச்சத் தீவின் நிலைப்பாடும் தெரியாது" என்று நேரு பிரதமராக இருந்தபோது மாநிலங்களவையில் கூறியிருக்கிறார்.

"முக்கியத்துவம் இல்லாத வெறும் கற்பாறைதான் கச்சத் தீவு" என்று இந்திரா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு சொந்தம் என நினைத்திருந்த கச்சத் தீவு ஒரே நாள் இரவில் வேறொரு நாட்டுக்கு சொந்தமாகிவிட்டதை அறிந்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இந்த முடிவு எடுக்கும்போது, தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அதைத் தடுக்கத் தவறிவிட்டார்.

கச்சத் தீவு தொடர்பாக 28.6.1974}ல் இந்திய}இலங்கை அரசுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதில், "இதுவரை கச்சத் தீவுக்கு வந்து கொண்டிருந்த மீனவர்களும், புனிதப் பயணிகளும், இனியும் அதே காரணத்துக்காக வந்து செல்லும்போது, பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டும் என இலங்கை கோராது" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், "கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; வலைகளை உலர்த்த கச்சத் தீவைப் பயன்படுத்தலாம்" என்று அப்போதைய வெளியுறவு அமைச்சர் சர்தார் ஸ்வரண் சிங் தெரிவித்துள்ளார்.

எனினும், கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்த 600 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதிலிருந்து, ஸ்வரண் சிங்கின் கருத்தை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாதது போல் தெரிகிறது.

இப்போது, "தமிழக மீனவர்கள் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்க விரும்பினால், இயல்பாகவே இலங்கையுடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்" என்று கிருஷ்ணா சொல்வதிலிருந்து, தமிழக மீனவர்கள் குறித்த தனது அறியாமையையும், அவர்களின் மீதுள்ள அவமதிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

கிருஷ்ணா, இலங்கையுடன் எத்தகைய உடன்படிக்கையை, எப்போது ஏற்படுத்தப் போகிறார்? அதற்கு முன், இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள் உயிரிழக்க வேண்டும்? தமிழக முதல்வர் கருணாநிதி, மீனவர்களுக்கு எதையும் செய்ய ஏன் மறுக்கிறார்?

கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டது தவறு மட்டுமல்ல; சட்டப்படியான பிழை என்று அ.தி.மு.க. கருதுகிறது. எனவேதான் கச்சத் தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமானால், கச்சத் தீவை மீட்டாக வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 15.12.2009

No comments: