Thursday, February 19, 2009

போரை நிறுத்த வற்புறுத்த முடியாது என்று பிரணாப்முகர்ஜி கூறியதற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த முடியாது என்று கூறிய மத்திய மந்திரி பிரணாப்பு முகர்ஜிக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கூறிய வார்த்தைகளை திரும்ப பெறாவிட்டால் மத்திய மந்திரியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் மு.கண்ணப்பன், பாரதீய ஜனதா துணைத்தலைவர் எச்.ராஜா, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சுசி.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இலங்கை தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழ்வேந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடலூரில் நடைபெறும் அவரது இறுதி ஊர்வலத்தில் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

20-ந் திகதி(இன்று) காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் அனைவரும் சென்று, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி கையெழுத்திட்ட மனுவை தூதரகத்தின் மூலம் அமெரிக்க குடியரசு தலைவருக்கு அளிக்க இருக்கிறோம். மற்ற நாடுகளின் தூதரக அலுவலகங்களிலும் மனு அளிப்போம்.

இந்தியாவின் தற்காலிக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் பேசுகையில், போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை, இந்தியா வற்புறுத்த முடியாது என்று அறிவித்து இருப்பது 61/2 கோடி தமிழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோளை, துச்சமாக மதித்து தூக்கி எறியும் போக்காகும். இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குடியரசு தலைவர் உரையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இருந்ததற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அரசின் வாக்குறுதியை நம்பி, பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த மக்கள் குண்டுவீசப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களும், நர்சுகளும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இலங்கை அரசு வெளியேற்றி உள்ளது. மேற்கண்டவற்றை எல்லாம் குறித்து சிறு கண்டனம் கூட தெரிவிக்காத பிரணாப்முகர்ஜி விடுதலைப்புலிகள் மீது பொய்யான பழிகளை சுமத்தி, பிரச்சினையை திசை திருப்ப முயல்வதை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பிரணாப்முகர்ஜியின் அறிவிப்பின் காரணமாக இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவிக்கும் துணிவை இலங்கை அரசு பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பேசியதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், இல்லையேல் இந்திய அரசுக்கு எதிராக பெரும் போரட்டம் தமிழகத்தில் வெடிக்கும் என்றும் பிரணாப்முகர்ஜிக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று வற்புறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வருகிற 23-ந்தேதி முதல் ஒரு வார காலத்தில் 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெறப்படும். இந்த கையெழுத்து பிரதிகளை ஐ.நா.பேரவை செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷிய குடியரசு தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பேரணி கோவை, கடலூர், மதுரை பகுதிகளில் நடைபெற்றுள்ளது. வருகிற 28-ந்தேதி திருச்சியிலும், மார்ச் 2-ந்தேதி தூத்துக்குடியிலும் நடத்தப்படும். சேலம், புதுச்சேரியில் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். என்று பழ.நெடுமாறன் கூறினார்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாசிடம், `போரை நிறுத்த வற்புறுத்த மாட்டோம் என்று கூறிய மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியின் பேச்சு வேதனை அளிப்பதாக கூறி உள்ள நீங்கள். தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகிப்பது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து ராமதாஸ் பேசும்போது, எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசினார்கள். வாக்குவாதம் செய்தனர். இதனால் 2 முறை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் கேள்வி நேரத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை கிளப்பி உள்ளனர். பிரணாப்முகர்ஜியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் சோனியா காந்தியை வற்புறுத்தி உள்ளோம். இந்த தீர்மானம் வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பு, ராஜபக்சேவுக்கு மிகப்பெரிய துணிச்சலையும், தெம்பையும் அளித்துள்ளது. இதனை கண்டித்துள்ளேன் என்று ராமதாஸ் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான போர் காரணமாக, நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் அணிகள் மாறுமா? என்று வைகோவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பொருத்திருந்து பாருங்கள், இதற்கு மேல் என்னிடம் இருந்து வேறு எந்த பதிலும் வராது என்று தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

1 comment:

Anonymous said...

இந்தியா ராணுவ உதவி செய்யவில்லை என்று பச்சைப் பொய் சொல்லியுள்ளப் பிரணாப் மூஞ்சியில் பல படங்களையும்,கூடவே சில செருப்புக்களையும் வீச வேண்டியது தானே.
அரசியல் விபச்சாரம் செய்வதுதான் பாராளுமன்றத்தில் பிரணாப்பின் பொய்கள்.